உன்னைப் போல் ஒருவன்(2009) : பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்

பயங்கரமும் குண்டு வெடிப்புகளும் உலக அளவிலானவை. எந்த ஒரு அரசுக்குள்ளும் மட்டுப்பட்டது இல்லை இது. ஏற்கனவே இருக்கிற ஒரு விசயம் பற்றி நான் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறேன். நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லை. நேரப்போகும் ஆபத்து குறித்து மக்களுக்கு நான் அறிவுறுத்தல் செய்ய விரும்புகிறேன்.

கமல்ஹாஸன்

நீரஜ் பாண்டேவின் எ வெட்னஸ்டே(A Wednesday-2008), நிசிகாந்த் காமத்தின் மும்பை மெரி ஜான் (Mumbai Meri Jan-2008), மணிரத்தினத்தின் பம்பாய் என மும்பையை மையமாக வைத்து ஏற்களவே வடக்கிலும் தெற்கிலுமாகத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குஜராத்தில் இந்துத்துவவாதிகள் நிகழ்த்திய இஸ்லாமிய மக்கள் படுகொலைகளை முன்வைத்து  நந்திதா தாஸின் பிராக் (Firaaq-2008), சசிகுமாரின் காயா தரன் (Kaya Tharan-2004), தொலாக்கியாவின் பர்சானியா (Parzania-2005) என குஜராத மையத் திரைப்படங்களும் வந்திருக்கின்றன.  இந்து முஸ்லீம் பிரச்சினையை மும்பை மற்றும் குஜராத் எனும் நிலப்பரப்புக்குள் வைத்துப் பார்த்த திரைப்படங்கள் இவை.

இந்துத்துவவாதிகள் நிகழ்த்திய பாப்ரி மஜீத் தகர்ப்பு, அதனதை தொடர்ந்து மும்பை இந்து-முஸ்லீம் பிரச்சினை, தொடர்ந்து இந்துத்துவவாதிகள் குஜராத், மலகான் என நடத்தி முடித்த இஸ்லாமிய மக்களின் மீதான கொலை வெறியாட்டம் என, இந்தியாவில் இந்து முஸ்லீம் வன்முறைகளின் நம் காலத்திய துவக்கம், பாப்ரி மஜீத் தகர்ப்பில்தான் துவங்கியது, அரைநூற்றாண்டுக்கு முன்பு தேசப் பிரிவினையின் போது நிகழ்ந்த இரு மதத்தவர்களுக்கும் இடையிலான படுகொலைகளின் பின், அரைநூற்றாண்டுகளின் பின்பாக, இரண்டாவது முறையிலாக அது பாப்ரி மஜீத்தில்தான் துவக்கம் பெற்றது. வெகுமக்கள் படுகொலைகளைக் குறிப்பிட்ட அரசியல் திட்டத்தின் பகுதியாக, ஒரு அரசியல் அமைப்பு திட்டமிட்டுச் செய்யுமானால், அதனை பயங்கரவாதம் என நாம் கொள்வோமானால், பாப்ரி மஜீத்தைத் தொடர்ந்து, மும்பை, குஜராத், மலகான் போன்ற இடங்களில் நிகழ்ந்தது இந்துத்துவவாதிகளின் பயங்கரவாதம் என நாம் வரையறுக்கலாம். இதே அளவு பயங்கரவாதம் எனக் கொள்ளத் தக்கதுதான் பாகிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் அணுசரணையுடன் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதும், மும்பை தாஜ் ஹோட்டலில் நிகழ்த்தப்பட்டதும், ஹைதராபாத்தில் வெகுமக்கள் கூடுமிடங்களில் நிகழ்த்தப்பட்டதும் என்று கொள்வதே சரியான அரசியல் நிலைப்பாடு.

காஷ்மீர் பிரச்சினையையும், ஈழப் பிரச்சினையையும் இந்து முஸ்லீம் பிரச்சினையாகச் சித்திரிப்பது என்பது வரலாற்றுரீதியில் வக்கரித்ததொரு பார்வை. இந்துத்துவவாதிகளும் அரசியல் இஸ்லாமியர்களும் இந்தப் பிரதேசங்களில் நடக்கும் தேசிய இனப் போராட்டங்களைத் தத்தமது தந்திரோபாய அரசியலை நடத்துவதற்காகவே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரணாகச் சித்தரிக்கிறார்கள். ஈழத்தைப் பொறுத்து பிறிதொரு பரிமாணமும் உண்டு. சிங்கள தேசியம் என்பது அங்கு தேரவாத பௌத்த மதத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசம் எனும் கருத்தாக்கம் இந்து மதத்துடன் பிணைக்கப்பட்டது இல்லை. இந்திய தேசம் என்பதை நவீனத்துவக் கூட்டரசு எனும் அர்த்தத்தில் புரிந்து கொள்கிற தாராளவாதிகளும் இடதுசாரிகளும் இங்கு மிகப் பெரும் சக்தியாக இருக்கிறார்கள். இந்தக் களத்தில் இந்திய தேசம் என்பதனை இந்துத்துவ தேசம் எனக் கட்டமைக்க இந்துத்துவவாதிகள் முயன்று வருகிறார்கள்.

ஈழத்தில் வெகுமக்கள் கூட்டமாக யாழ்ப்பாண முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை பயங்கரவாதம் எனக் கொள்வோமானால், காஷ்மீரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தான் அணுசரணையுடன் இந்து பண்டிட்களை வெளியேற்றியதனையும் நாம் பயங்கரவாதம் எனவே கொள்ள வேண்டும். காஷ்மீர்ப் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையோடு போட்டுக் குழப்பவது என்பது, இத்தகைய நிலைபாடு எடுப்பவர்களை ஜோர்ஜ் புஸ்ஸோடும் ராஜபக்சேவோடும் லால் கிருஷ்ண அத்வானியோடும் முஸாரப்புடனும் தான் கொண்டு நிறுத்தும்.

பயங்கரவாதம் என்பதற்கு இன்று சர்வதேசியப் பரிமாணம் இருக்கிறது. பயங்கரவாதம் என்பது இன்று ஒரு சர்வதேசிய அரசியல். அடிப்படைவாத அரசியல் இஸ்லாமுடன் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. தலிபான்களை ரீகன் சுதந்திரப் போராளிகள் என்றார். அல் கைதாவினரையோ அல்லது தலிபான்களையோ இன்று எவரும் சுதந்திரப் போராளிகள் என்று சொல்வார்களானால் அவர்களது மூளையைச் சலவை செய்து கொள்வதுதான் நல்லது. அல் கைதாவையும் தலிபான்களையும் இன்று எவரேனும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்களானால் அல்லது விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசுவார்களானால் அவர்களதும் மூளைகளைச் சலவை செய்து கொள்வது நல்லது.

விடுதலைப் புலிகளின் மீதும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் மீதும், ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும், இந்திய மாவோயிஸ்ட் அமைப்பின் மீதும், காஷ்மீர் போராளிகளின் மீதும் இன்று ஒருவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம், அவர்களது சிற்சில நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளின் கூறுகளையும் கொண்டிருக்கலாம், என்றாலும் இவ்வியக்கங்களை எவரும் பயங்கரவாத இயக்கங்கள் எனச் சொல்ல முடியாது. குறிப்பிட்ட நிலப்பரபுக்களில் துயருர நேர்ந்த மக்களின் துயரை விடுவிக்க, ஒடுக்குமுறை ஆயுத அமைப்புக்களை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட இயக்கங்கள் இவை. இவற்றின் அரசியல் திட்டங்கள் ஒடுக்குமுறையின் கூறுகளைக் கொண்டிருக்கும் எனினும், எந்த விதமான அரசியல் அறமும் அற்ற, சீரழிந்த சமூகத் திட்டங்களைக் கொண்டிருக்கிற தலிபான்களுடனோ அல்லது அல் கைதாவினருடனோ அல்லது லஸ்கர் தொய்பாவுடனோ இவர்களை ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் அபத்தமாகவே இருக்கும்.

பயங்கரவாதம் குறித்த இந்தியத் திரைப்படங்களிலேயே பெருவெற்றி பெற்ற திரைப்படம் நீரஜ் பாண்டேவின் எ வெட்னஸ்டே குறிப்பான அரசியல் ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘விலக்கிய’ ஒரு மிக மோசமான இந்துத்துவப் பயங்கரவாதப் படம் என்றால், அது எ வெட்னஸ்டே படம்தான்.

எ வெட்னஸ்டே திரைப்படத்தின் கதைதான் என்ன? பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியப் பொதுமகன், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களின் உதவியுடன், தானும் ஓரு இஸ்லாமிய பயங்கரவாதி போல் வேடமிட்டு, அறியவரப்பெற்ற, விசாரணையில் இருக்கிற, நான்கு பயங்கரவாதிகளை விடுவிக்கச் செய்வதற்காக ஒரு இடத்திற்குக் கொண்டுவரச் சொல்லி பாசாங்கு காட்டி, அவர்கள் நால்வரையும் கொலை செய்து முடிக்கிறான். இந்த இவனது நடவடிக்கைக்கு அரசின் முதலமைச்சர், முழுமையான காவல்துறை அமைப்பு, தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைத்தும் அணுசரனை வழங்குகின்றன. இந்திய அரசு, ராணுவம்,போலீஸ், பாராளுமன்றம் என எல்லாம் கைவிட்டாலும், இம்மாதிரியான  வீரதீரமான, விவேகமான ‘தலைவன் இருக்கின்றான், கவலைப்படாதீர்கள், இந்திய முட்டாள் பொதுஜனங்களே’ என்று நமக்குச் சொல்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. நல்லது, நிரம்பவும் நல்லது.

பொதுவாக வெகுஜனம் எனக் குறிப்பிடுவதே ஒரு அயோக்கியத்தனம். வெகுஜனம் என்பவன் இங்கு மதம்,சாதி,இனம்,மொழி என்கிற தன்னிலையாகவும் அடையாளம் கொண்டவனாகவும்தான் இருக்கின்றான். பாப்ரிமஜீத், குஜராத், மும்பை, தில்லி எனும் நிகழ்வுகளின் பின், இந்தியச் சூழலில் இவன் இந்துவாகவும் இஸ்லாமியனாகவும் கிறிஸ்தவனாகவும்தான் இருக்கின்றான். இதில் மதநீக்க மனநிலை என்பது ஒரு அரசியல் சார்ந்த நிலைபாடு கொண்ட மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். இவ்வாறான மதநீக்க மனநிலை கொண்டவன், எ வெட்னஸ்டே பட நாயகன் மாதிரியில் பொத்தாம் பொதுவாகக் குஜராத், தில்லி, மும்பை, நியூயார்க்,இலண்டன், மலாகான் அனைத்தையும் மொட்டையாக ‘பயங்கரவாதத் தாக்குதல்கள்’ என்று சொல்ல மாட்டான்.

குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் படுகொலைகளை இஸ்லாமியர்கள் செய்யவில்லை. அதற்குப் பின்னான படுகொலைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் இந்துத்துவவாதிகளால் செய்யப்பட்டது. மலாகானில் இஸ்லாமிய மக்களின் புதைகுழிகளை, மசூதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தவர்கள் இஸ்லாமிய மக்கள் இல்லை. இந்துத்துவ அடிப்படைவாதிகள்தான் இப்படுபாதகச் செயல்களைச் செய்தார்கள் என இப்போது திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு பயங்கரவாதச் செயல்களையும் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். ஆர.எஸ்.எஸ்சினர் மற்றும் பஜ்ரங் தளத்தினர் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியினர். இவை எல்லாவற்றுக்கும் முதலாக பாப்ரி மஜீத் இடிப்பு பயங்கரவாதத்தைச் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். தில்லி பாராளுமன்றப் பயங்கரவாதத்தையும் தாஜ்கொரமேண்டல் பயங்கரவாதத்தையும் செய்தவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்தான். இந்தியாவில் பயங்கரவாதத்தின் தோற்றம் இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பாப்ரிமஜீத் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்த சிவசேனாவின் இஸ்லாமிய மக்கள் மீதான மும்பைப் படுகொலைகளும்தான்.

இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய உரையாடல் என்பது பாப்ரிமஜீத் துவங்கி, பிற்பாடாக மும்பை, குஜராத், தில்லி என எடுத்துச் செல்லப்பட வேண்டும். இது இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய ஒரு பரிமாணம். பிறிதொரு முக்கியமான பரிமாணமும் உண்டு. அது சர்வதேசிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டது. இதன் பங்காளிகள் இருவர். முதலாமவர் ஜோர்ஜ் புஸ். இரண்டாமவர் பின்லாடன். பின்லாடனின் வழித்தோன்றல்கள்தான் மும்பை சுரங்க ரயில்களில் குண்டு வைத்தவர்கள். தாஜ்கொரமேண்டலில் படுகொலை செய்தவர்கள்.   இந்து-இஸ்லாம் என இரண்டு வகையிலான மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தையும் எடுத்துக் கொண்டுதான் இங்கு ஒரு கலைஞன் பேச வேண்டும்.

இஸ்லாம், இந்து, கிறிஸ்தவன் எனும் அடையாளங்களை மீறிய ஒரு பொதுமகன் இங்கு இருப்பானானால், அவன் இரண்டு பயங்கரவாதங்களையும் குறித்த விமர்சன உணர்வுள்ளவனாகத்தான் இருப்பான். இந்த அரசியல் தெளிவுடனான உரையாடலைத்தான் இந்தப் பொதுமகன் வைப்பான். இதுவன்றி குஜராத், மலாகான்,மும்பை,தில்லி என எல்லாவற்றையும் கலந்து கட்டி பொத்தாம் பொதுவாகப் பயங்கரவாதம் எனப் பேசுவது ஓரு வகையான அரசியல் பம்மாத்து.

எ வெட்னஸ்டே கதாநாயகனின் மத அடையாளத்தைக் காவல்துறை அதிகாரி கேட்கிற போது, நான் ‘முட்டாள் பொதுமகன்’ (stupid common man) என்று அவன் தன் அடையாளம் குறித்துச் சொல்கிறான். சரி. கதையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்துபவன் மத அடையாளங்கள் அரசியல் அடையாளங்கள் அற்ற பொது மகன். எதிரியான நால்வரதும் அடையாளம் என்ன? மூவர் இஸ்லாமியர். ஓருவர் ஆசை கொண்ட இந்து ஆயுத வியாபாரி. பாகிஸ்தானோடு தொடர்பு பட்டவர்கள். கதையில் அவர்களது பாத்திரக் கட்டமைப்பு என்ன? விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். எ வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் ஏன் அவர்களைக் கொல்லத் திர்மானிக்கிறான்? இந்திய அரசு, காவல்துறை, உளவமைப்பு அனைத்தும் தோற்றுப் போய்விட்டது. முழுமையான இந்திய அமைப்பும் விரயம். விசாரித்து தண்டனை வழங்க பத்து வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். காலதாமதம். வீட்டில் புகுந்த கரப்பான் பூச்சியை சுத்தப்படுத்துகிறான் கதாநாயகன். பூச்சிக் கொல்லி மருந்தைப் பாவிக்கிறானாம் கதாநாயகன். அப்படித்தான் அவர் சொல்கிறார். இஸ்லாமிய மக்கள் மலாகானில் இந்துத்துவப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு இதே காரணத்தைத் தான் சொல்கிறார் சிவசேனாத் தலைவர் மனோகர் ஜோசி.

அப்பட்டமான பாசிச மனோ நிலை இது. ஹிட்லரின் அதிமனிதன் தான் இவன். இந்தியாவைத் தூய்மை செய்யப் புறப்பட்ட, சட்டத்திற்கு அப்பாலான, பாஸிஸ்ட் மனநிலையிலுள்ள ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஒரு பாசிஸ்ட் திரைப்பட இயக்குனராகவே எனக்கு நீரஜ் பாண்டே தென்படுகிறார்.

உலகெங்கிலும் அன்றாடம் பயணம் செய்கிற வெகுமக்களின் மனநிலை என்பது தற்போது மிகவும் பதட்டமானதாகவே இருக்கிறது. விமானப் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. இரயில் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. பேருந்துப் பயணங்களும் பாதுகாப்பற்றதாகிவிட்டது. உலகெங்கிலுமே சக மனிதனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடிய ஒரு மனநிலை  அனைவருக்குமே உருவாகிவிட்டது என்பது ஒரு நிஜம்.

இதற்கான காரணங்கள் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள்தான். ஜோர்ஜ் புஸ, பின்லாடன், அத்வானி என இவர்கள்தான் இதற்கான காரணம். இது உலகெங்கிலும் குடிமக்களாக அவரவரது சொந்த அனுபவங்களில் இருந்து உருவாகியிருக்கிறது ஒரு பீதி. திகில். பயங்கரம். நிசிகாந்த் காமத்தின் மும்பை மெரி ஜான் இந்த மனோ நிலையை அதியற்புதமாகச் சித்தரிக்கிறது. பரஸ்பரம் மனித சந்தேகம் ஏற்படுத்தும் பேரழிவை அந்தப்படம் சித்திரிக்கிறது. அந்தத் திரைப்படத்தில் பாத்திரங்களுக்கு இந்து முஸ்லீம் என்கிற தெளிவான அடையாளங்கள் உண்டு. சந்தேகப்படுபவன் இந்து. சந்தேகத்திற்கு உள்ளாகிறவன் முஸ்லீம். பாசிச மனோநிலைக்கு உள்ளாகிறவன் இந்துவாக இருக்கிறான். தாக்குதலுக்கு இறையாகிறவராக அப்பாவி இஸ்லாமியப் பெரியவர் இருக்கிறார். இஸ்லாமிய இளைஞர்கள் இருக்கிறார்கள். கடைசியில் தனது வெறிகொண்ட நடத்தைக்காக வெட்கமடைகிறார் இந்து இளைஞர்.

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னான ஓராண்டு நினைவின் போது நியூயார்க், இலண்டன், மும்பை நகரங்களில், அந்தத் துயர நிகழ்வின் தருண நொடிகளில் மூன்று நகரத்தின் சகல மத இன மொழி மக்களும் இரண்டு நிமிடம் உறைந்து போய் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரம் வயலின்கள் உருவாக்க முடியாத அற்புதமான இணைந்த இசைத் தருணம் அந்த மௌனத் தருணம். இந்தத் தருணத்தை அரத்தமள்ளதாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் கிறித்தவர்கள் யூதர்கள் என அனைத்து மதத்தவர்களும்தான்.

கமல்ஹாஸன் ஹே ராம் திரைப்படத்தை எடுத்தபோது காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே, ‘வட இந்தியாவில் நடந்த பிரச்சினையைக் கமல்ஹாஸன் தென் இந்தியாவுக்கு எடுத்து வந்ததற்காக நன்றி’ எனத் தனது ஜூனியர் விகடன் நேர்முகத்தில் குறிப்பிட்டிருந்தார். மும்பை மையப் பிரச்சினையையும், மும்பையில் நிகழ்ந்த குறிப்பான இந்து முஸ்லீம் எனப் பரஸ்பரமான பயங்கரவாதத்தையும் உன்னைப்போல் ஒருவன் படம் மூலம் கமல்ஹாஸன் மறுபடியொருமுறை வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எ வெட்னஸ்டே படம் தெலுங்கில் ஈநாடு எனவும் தமிழில் உன்னைப் போல் ஒருவன் எனவும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மொழிமாற்றத்தில் இந்தி வெட்னஸ்டே படத்துடன் ஒப்பிடும்போது மிக முக்கியமான மூன்று காட்சி மாற்றங்கள் இருக்கிறது.

(1). படத்தின் முதல் காட்சியாக வருகிற கமல்ஹாஸன் வெடிகுண்டு செய்கிற காட்சி. ஓரு சாதாரணமான நடுத்தரக் குடும்பஸ்தரான அவர், கேரட் அல்வாவுக்கு திராட்சை முந்திரி வாங்கி வருவதற்காகவும், காய்கறி வாங்கவும், அன்றாடத் தொழிலுக்காகவும் வெளியே வரும் அவர், வெடிகுண்டு செய்வதற்கானதொரு மினி லேபுடன் காண்பிக்கப்படுவது அவர் சாதாரணர் அல்லர் அசாதாரணர் என நிறுவுவதற்கான காட்சியாக இருக்கிறது. படத்தின் ‘கதாநாயகன்’ இங்கு கட்டமைக்கப்பட்டு விட்டார். எ வெட்னஸ்டே படத்தில் இந்தக் காட்சி இல்லை.

(2). தமிழ்த் திரைப்படத்தில் பாகிஸ்தானிய அதிபர் முஸாரப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சும் பேசிக் கொள்கிற பொம்மைகள் வரும் நக்கலான தொலைக் காட்சி நிகழ்ச்சி எ வெட்னேஸ்டே படத்தில் இல்லை. அந்தக் குறிப்பிட்ட ஸீனில் எ வெட்னஸ்டே படத்திலும் ஒரு நக்கல் காட்சிதான் வருகிறது. நகராட்சி அங்கங்கே பள்ளம் வெட்டி வைத்திருக்கிறது. மழை பெய்து நீர் தேங்கிய அந்தப் பள்ளம் ஒன்றினுள் பாதசாரி ஒருவர் தடுக்கி விழுந்து விடுகிறார். பள்ளத்துக்குப் பக்கத்தில் ஒரு மின் கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் விழுந்து கிடக்கிறது. இந்த ஆபத்திலிருந்து தப்பிய ஒரு வெகுஜனத்தை வைத்து ஒரு தொலைக்காட்சி ஸ்டோரியை உண்டு பண்ணுகிறார் தொலைக் காட்சியாளினி. நகைச்சுவைக்காக அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் செயற்கைத் தன்மையைக் காட்டுவதாக எ வெட்னஸ்டேவில் அக்காட்சி இருந்தது. 28 நவம்பரில் 2008 இல் நடந்த மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் பற்றிய குறிப்பீடு தமிழ் படத்தில் வருகிறது. உலக வங்கியின் கடன் வாங்கிக் கொடுத்தால் உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தான் அமெரிக்காவுக்கு உதவ விரும்புவதாக அக்காட்சியில் முஸாரப் ஜார்ஜ் புஸ்சுடன் பேசுகிறார். பாகிஸ்தான் குறித்த குறிப்பிட்ட அரசியல் செய்திக்காகவும், மும்பை நவம்பர் தாக்குதல் தொடர்பாக வலியுறுத்துவதற்காகவும் தமிழ் படத்தில் இக்காட்சி இடம்பெறுகிறது.

(3). மூன்றாவதாக நேர்ந்த காட்சி மாற்றம் மிக முக்கியமானது. போலீஸ் கமிசினரான மோகன் லாலுக்கும் முட்டாள் பொதுஜனமான கமல்ஹாஸனுக்கும் உரையாடல் நடைபெறுகிறது. ‘தனிப்பட்ட முறையில் பாதித்ததனால் தான் இவ்வாறு பழிவாங்கும் நடவடிக்கையில் பொதுஜனம் ஈழுபடுகிறாரா?’ என போலீஸ் கமிசனர் கேட்கிறார். பொதுஜனமான கமல்ஹாஸன் சொல்லத் தொடங்குகிறார். கர்ப்பினித்தாயின் பிறப்பு உறுப்பினுள் கைநுழைத்து குழந்தையைக் கொன்ற கொடூரத்தை அவர் கண்ணீருடன் உருக்கமாக விவரிக்கிறார். கமல்ஹாஸனின் நடிப்பில் நம்மை நொடிநேரம் நிலைகுலைத்துவிடும் காட்சி அது.

குஜராத் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இந்துத்துவவாதிகள்தான் இஸ்லாமிய மக்களுக்கு இக்கொடுமையைப் புரிந்தார்கள். கமல்ஹாஸன் மிக உருக்கமாகவே அக்காட்சியில் அழுதிருந்தார். நல்லது. எ வெட்னஸ் டே படத்தில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் வந்த காட்சி என்ன?  நஸ்ருதின் ஷா தினமும் இரயிலில் மும்பையில் பயணம் செய்கிறவர். அவரது பயணத்தில் அவர் ஒரு இளைஞனைப் பரிச்சயம் கொள்கிறார். அவனது வேலை, அவனுக்குக் கல்யாணம் ஏற்பாடு ஆகியிருப்பது போன்ற இயல்பான, கொஞ்சம் மனித நெருக்கத்தை ஏற்படுத்துகிற செய்திகளையெல்லாம் அந்த இளைஞன் பகிர்ந்து கொள்கிறான். அந்த இளைஞன் மும்பை இரயில் குண்டுவெடிப்பில் மரணமுறுகிறான். இந்தச் சம்பவம் நஸ்ருதின்ஷாவின் சொந்த வாழ்வை அசைத்த சம்பவமாக இருக்கிறது. இந்தச் சொந்த அனுபவத்துடன்தான் அவர் தன்னைச் சுற்றிலும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களைப் பார்த்து, பயங்கரவாதிகளின் மீது வெறுப்புக் கொள்கிறார். பொதுஜனம் எனும் கருத்தாக்கமே இன்று அபத்தம் எனினும், நஸ்ருதின்ஷாவின் எளிமையான தோற்றமும், அவரது குணரூபமாக அது படத்தில் சித்தரிக்கப்பட்ட விதமும் குறைந்தபட்சமேனும் அவரைத் தீவிர அரசியல் நீக்கம் செய்யப்பட்டவராகக் காட்டியது. கமல்ஹாஸன் முதல் காட்சி மாற்றத்தினாலும், இந்தக் குறிப்பிட்ட காட்சி மாற்றத்தினாலும், பொதுஜனம் என்கிற குறைந்தபட்ச அடையாளத்தையும் கூட அவர் இழந்தார்.

இந்தக் காட்சியைக் கமல்ஹாஸன் தமிழ் படத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்வியை இன்னொரு கேள்வியோடும் சேர்த்துக் கேட்கலாம் : எ வெட்னஸ்டே படத்தில் தாடியில்லாத நஸ்ருதின் ஷா ஏன் தமிழ்படத்தில் தாடியுடனான கமல்ஹாஸனாக மாறினார்? இந்த இரண்டாவது கேள்வியை இன்னொரு கேள்வியுடன் சேர்த்துக் கேட்கலாம் : எ வெட்னஸ்டே படத்தில் காவல் நிலையத்துக்கு வரும் நஸ்ருதின்ஷாவின் வெடிகுண்டுப் பையில் எந்த மதச் சின்னமும் இல்லை, ஏன் கமல்ஹாஸனின் வெடிகுண்டுப் பையில் வெங்கடாசலபதி படம் இருக்கிறது? கதாநாயகனின் மத அடையாளத்தைக் குழப்புகிற வேலையிலும் சரி அல்லது தெளிவுபடுத்துகிற வேலையிலும் சரி, எ வெட்னஸ்டே படத்தின் திரைக்கதையாசிரியர் ஈடுபடுவேதேயில்லை. திரைக் கதையைப் பொறுத்து அவரது மத அடையாளம் ஒரு பிரச்சினையாக உருவாவதை திரைக்கதையாசிரியர் திட்டமிட்டுத் தவிர்த்திருந்தார். நஸ்ருதின்ஷா எனும் அற்புதமான நடிகர் ஒரு இஸ்லாமியர் என்கிற மங்கலான ஞாபகமே திரைப்பட ரசிகனிடம் இருந்தது.

கமல்ஹாஸனிடம் இருந்த அரசியல் தள்ளாட்டங்கள் அவரது பாத்திரச் சித்தரிப்பிலும், அரசியல் சித்தரிப்பிலும் தென்பட்டது. எ வெட்னஸ்டே படம் மெனக்கேட்டு குஜராத் பிரச்சினையையெல்லாம் இதற்குள் கொண்டு வரவில்லை. அந்தத் திரைக்கதை திட்டவட்டமானது. பயங்கரவாதத்தில் மதக் காரணங்களுக்காக ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்கள். உதவி செய்கிற இந்து பணத்துக்காக ஆசைப்பட்ட ஆயுதவியாபாரி. பொதுமகன் நடைமுறையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் கொல்ல நினைப்பவன். குஜராத் பிரச்சினைக்கெல்லாம் எ வெட்னஸ்டே படம் முக்கியத்துவம் தரவில்லை.

கமல்ஹாஸன் படத்தில் சமநிலையை வலிந்து திணிக்க வேண்டும் என்பதற்காகப் பொருத்தமில்லாமல் குஜராத் சம்பவத்தைக் கொண்டு வந்திருக்கிறார். மும்பை இந்து-முஸ்லீம் முரண்பாடுகளின் பன்முகத் தன்மைகளைப் பேசிய படம் இல்லை எ வெட்னஸ்டே. அப்படம் அப்பட்டமாகவே முஸ்லீம் விரோதத் திரைப்படம். எந்தவிதமான சமநிலையும் அப்படத்தின் காட்சியமைப்பிலோ வசனங்களிலோ பேணப்படவில்லை. சந்தேகமிருப்பவர்கள் மும்பை மேரி ஜானுடனோ அல்லது பிளேக் பிரைடே படத்துடனோ, எ வெட்னஸ்டே படத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கமல்ஹாஸன் அடிப்படையிலேயே ஒரு இஸ்லாமிய விரோதப் படத்தினை எடுத்துக் கொண்டு, மேலும் அதற்கு அரசியல் பரிமாணமும் கொடுத்து, இந்து முஸ்லீம்களுக்கு இடையிலான சமநிலையைச் சாதிக்க முனைவது, அந்தத் திரைக்கதைக்குள் சாத்தியமேயில்லை. கமல்ஹாஸன் அதனைத்தான் முயற்சி செய்திருக்கிறார். கமல்ஹாஸனின் குஜராத் பற்றிய வசனமும் நடிப்பும் இதனால்தான் திரைக்கதைக்குள ஒட்டாமல் நின்று கொண்டிருக்கிறது. குஜராத் பிரச்சினையை எ வெட்னஸ்டே கதைக்குள் ஒட்டவைப்பது என்பது சாத்தியமேயில்லை. அதனது உள்ளடக்கத்தில் எ வெட்னஸ்டே படம், போலீஸ் துறையைப் பரவசத்துடன் பார்க்கும் படம். இந்திய நீதியமைப்பின் குறைந்தபட்ச மரபுகளையும் தாண்டி, நீதித்துறை, அரசு, அதிகார வர்க்கம், போலீஸ், தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டு, பயங்கரவாதம் எனச் சொல்லப்படும் செயல்களுக்குப் பின்னான காரண காரியத்தை முற்றிலும் நிராகரித்து, மக்களுக்குப் பொய்யைச் சொல்லியாவது, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் எனச் சொல்லும் திரைப்படம் எ வெட்னஸ்டே. எ வெட்னஸ்டே படத்தில் சொல்லப்பட்டதைத்தான் குஜராத்தில் நரேந்திர மோடி நடைமுறையில் செய்துகாட்டினார்.

எ வெட்னஸ்டே படத்தைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது நேட்டிவிட்டிக்காக கமல்ஹாஸன் செய்த மாற்றங்கள் என்னென்ன? கோவை குண்டு வெடிப்பை வசனத்தில் கொண்டு வந்துள்ளார். சிறிபெரம்புதூர் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தை வசனத்தில் கொண்டுவந்துள்ளார். மீனம்பாக்கம் விமானநிலையக் குண்டுவெடிப்பை வசனத்தில் கொண்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்டு, கமல்ஹாஸன் கொல்லக் கேட்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர். மீனம்பாக்கம், மற்றும் ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்டவர்கள் ஈழத் தமிழர்கள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு சந்தேகமற பயங்கரவாதம். அதற்கான அரசியல் பின்ணியோ காரணமோ எதுவுமே தெளிவாக இல்லை.

ராஜீவ்காந்தி கொலையின் சரி பிழைகளுக்கு அப்பால், அந்தப் படுகொலை பயங்கரவாதமா அல்லவா என்பதற்கு அப்பால், அந்தக் கொலைக்குப் பின்னிருந்த அரசியலை அலசி மட்டுமே தென்னிந்தியாவில் நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. குற்றப்பத்திரிக்கை(2007) மற்றும் குப்பி(2007) எனத் தமிழ்த் திரைப்படங்கள், சைனட்(2007) என கன்னடத் திரைப்படம், மிஸன் நைன்டி டேஸ்(2007) என மலையாளத் திரைப்படம். இத் திரைப்படங்களில் பொத்தாம் பொதுவாக இதனைப் பயங்கரவாதம் என்று மட்டும் எவரும் சொல்லவில்லை. இந்தப் படங்களை எடுத்த எவரும் கமல்ஹாஸன் போல புத்திஜீவிச் சினிமாக்காரர்களும் இல்லை. என்றாலும் அவர்கள் இந்தப் பிரச்சினை பற்றி மொட்டையாகப் பயங்கரவாதம் என்று சொல்லாமல், முழுநீளத்தில் உருவாக்கக் கூடிய திரைப்படங்களுக்கான பிரச்சினை இது என அவர்கள் கருதினார்கள்.

கமல்ஹாஸனுக்கு உண்மையிலேயே அடிப்படைவாதிகள் அல்லாத இஸ்லாமிய பொதுஜனங்களின் மீது அன்பு இருந்திருந்தால் அவர் கோவைச் சம்பவத்தை வெறுமனே பயங்கரவாதத்தில் சேர்த்திருக்க மாட்டார்.

இந்து முஸ்லீம் பிரச்சினை பற்றி எத்தனையெத்தனை விதமாகப் படங்கள் வந்திருக்கிறது பாருங்கள் கமல்ஹாஸன். குஜராத் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். குஜராத் பிரச்சினையை முன்வைத்து தொலாக்கியாவும் நந்திதாவும் எவ்வளவு பொறுப்புணர்வடன் திரைப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா? மும்பை சம்பவத்தை முன் வைத்து அனுராக் கஸ்யாப்பும், நிசிகாந்த காமத்தும் எவ்வளவு சமநிலையுடன் படமெடுத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா? அவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியும் பயங்கரவாதம் பற்றியும்தான் பேசுகிறார்கள். எனினும் இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதற்கான ஆதிக் காரணத்தை  அவர்கள் பாப்ரி மஜீத் இடிப்பிலும், தொடர்ந்து மும்பையில் இஸ்லாமிய வெகுமக்கள் வேட்டையாடப்பட்டதையும் அல்லவா காண்கிறார்கள்.

கோவைக் குண்டு வெடிப்பைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். கோவைக் குண்டு வெடிப்பின் வரலாற்றை அறிந்தவர்கள், அதனது இரண்டு பரிமாணங்களை சாதாரணமாகவே அறிவார்கள். பாப்ரிமஜீத் தகர்ப்பையடுத்து இந்தியாவெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்களிடம் பீதியையும் அவர்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பிஜேபி கட்சியினர் உருவாக்கினார்கள். பஜ்ரங்தளும் ஆர்எஸ்எஸ்சும் அதனை ஊதி வளர்த்தார்கள். கோவை குண்டுவெடிப்புக்குக் காரணமாக கோட்டைமேடு பகுதியில் காவல்துறையின் அணுசரனையுடன் இந்துத்துவவாதிகள் நடத்திய மனித வேட்டை இருந்தது. அதனது எதிர்விணையாகவே கோவையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அனுராக் கஸ்யாப் மும்பை குண்டுவெடிப்பின் பின்னிருந்த அரசியல் வேர்களுக்குள் சென்று பேசினார். சமநிலையில் நின்று கோவைக் குண்டு வெடிப்பு பற்றி முழமையான ஒருதிரைப்படத்தை கமல்ஹாஸன் உருவாக்கி இருக்க முடியும். கோவைப் பகுதியிலிருந்தே இஸ்லாமியத் தாய்மார்களின் கண்ணீர்க் கதைகளை அப்போது கமல்ஹாஸன் சித்தரித்திருக்க முடியும்.

இந்தியாவில் இன்று நிகழும் பயங்கரவாத சம்பவங்களின் பின்னணியில் இரண்டு அரசியல் பரிமாணங்கள் உள்ளன. முதல் பரிமாணம் பாப்ரி மஜீத் தகர்ப்பிலிருந்து துவங்குகிறது. பின்னால் வந்து இணைந்து கொண்ட பரிமாணம்தான் அல்கைதா-தலிபான்- லஸ்கர் தொய்பா பரிமாணம். பின்னால் வந்த சர்வதேசிய அரசியல் பயங்கரவாதப் பரிமணத்தை மட்டுமே முன்னதை மூடிமறைக்க இந்துத்துவச் சாய்வு கொண்ட திரைப்படக் காரர்கள் தேர்ந்து கொள்கிறார்கள். கமல்ஹாஸன் நிஜமாகவே இந்து முஸ்லீம் கிறித்தவ பொதுஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என நினைப்பவராக இருந்திருந்தால், மும்பை மேரி ஜான், பிளாக் பிரைடே (Black Friday-2004), பிராக், பர்ஸானியா திரைப்பட மரபில் கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களை வைத்து பயங்கரவாதம் குறித்த ஒரு அற்புதமான, அசலான திரைப்படத்தினை அவர் உருவாக்கியிருக்க முடியும்.

இந்து முஸ்லீம் பிரச்சினை குறித்து கமல்ஹாஸன் இதுவரை இரண்டு முழுமையான படங்களை எடுத்திருக்கிறார். ஹே ராமில் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைகளை முன்வைத்து, வட இந்தியாவை தென்னிந்தியாவுடன் இணைத்தார் அவர். அந்தக் கதைக்களத்தின் ஐம்பது ஆண்டுகள் கழித்து, 2009 ஆம் ஆண்டில் மறுபடியும் வடஇந்திய இந்து-முஸ்லீம் அரசியலை தமிழகத்துக்கு அவர் இறக்குமதி செய்திருக்கிறார்.

உன்னைப் போல் ஒருவனில் இடம்பெறும் இரண்டு வசனத் தருணங்களை எந்தக் காரணத்துக்கும் ஒரு தமிழனாக இருப்பவன், மனிதனாக இருப்பவன் மன்னிக்கவே முடியாது. ‘படத்தில் ஒரு பாத்திரம் பேசுகிற வசனங்கள்தானே எவ்வாறு அதற்குக் கமல்ஹாஸனோ அல்லது இரா.முருகனோ பொறுப்பாக முடியும்’ என்கிற பல்லவிகள் எல்லாம் இதற்குப் பொருந்தாது.

இஸ்லாமிய தீவிரவாதிகளை கமல்ஹாஸனிடம் ஒப்படைப்பதற்காக காவல்துறையினர் ஒரு கவச வாகனத்தில் அழைத்துச் செல்கையில் வருகிறது முதல் வசனம் : குஜராத்தில் தனது மூன்றாவது மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டது பற்றிப் பேசுகிறார் ஒரு தீவிரவாதி. அவர்களது சகாவான இந்து இன்னும் இரண்டு இருக்கிறதுதானே எனக் கேட்கிறார். இனவாத விஷமேறிய உச்சபட்சமான வசனம் இது. பெஸ்ட் பேக்கிரி குறித்த வசனத்தில், அந்தக் கொடுமைகள் பற்றிய வசனத்தில், மூன்றாம் மனைவி, பிற்பாடாக பிற இருமனைவியர் என்கிற குறிப்பிட்ட ‘வித்தியாசப்படுத்தல்’ வரவேண்டிய அவசியம் என்ன? இந்தக் குறிப்பிட்டுக் காட்டலினால் ஒரு சமூகத்தை அவமானப்படுத்துவதும், ஆத்திரமூட்டுவதும் தவிர வேறு என்ன திரைப்படக் கருத்தமைவு சார்ந்த நியாயங்கள் இந்த வசனத்துக்கு இருக்க முடியும்? சந்தானபாரதி கோமாளி வில்லன் வேசம் போடுவார் என்பது தெரிந்துதான். கோமாளித்தனம் என்கிற பெயரில் இங்கு பேசியிருப்பது சந்தானபாரதி அல்ல, மாறாக இரா.முருகனும் கமல்ஹாஸனும்தான் இதனைப் பேசியிருக்கிறார்கள்.

இரண்டாவது வசனம் இது : மும்பையிலோ வட இந்தியாவிலோ நடக்கிற பயங்கரவாதத் தாக்குதல் குறித்துத் தமிழர்கள் கவலைப்படுவதில்லையாம். நமக்கு அது நேரவில்லை, எங்கோ தொலைதூரத்தில் நடக்கிறது என அசட்டையாக இருக்கிறார்களாம். இதனைத் தான் ஹே ராம் பற்றிப் பேசுகிற சந்தரப்பத்தில் கோபால் கோட்ஷேவும் குறிப்பிட்டார். தெனாலியும், நளதமயந்தியும் எனக் கோமாளிகள் பற்றிப் படமெடுக்கும்போது ( என் தமிழினச் சகோதரர்கள் என நள தமயந்தியில் தனியாக டைட்டில் போடப்படுகிறது) இலங்கைத் தமிழர் பாத்திரங்களை ஊறுகாய் பாவிப்பது போலப் பாவித்தார் கமல்ஹாஸன். மும்பை போல ஈழத்தமிழர்கள் நூறு நூறு மைல்களுக்கு அப்பால் வாழவில்லை, ராமேஸ்வரம் திரைப்பட இயக்குனர் செல்வம் சொல்கிற மாதிரி ராமேஸ்வரத்திலிருநது சில மைல்களில்தான் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்காக ஒரு திரைப்படத் தமிழனாக நீங்கள் என்ன செய்தீர்கள்? அங்கே நடந்திருப்பது அப்பட்டமான இனப்படுகொலை. நடந்து முடிந்தது அப்பட்டமான அரச பயங்கரவாதம். மீனம்பாக்கம் பற்றி வசனம் வைக்கத் தெரிந்த உங்களுக்கு, மும்பைக்காக தமிழர்கள் வருந்தவில்லையே என வசனம் வைக்கத் தெரிந்த உங்களுக்கு ஏன், ஈழத்தமிழர்களுக்காக, சமநிலையுடன் பேசியிருக்க முடியவில்லை?

கமல்ஹாஸன் நெருக்கடியான பிரச்சினைகளில் ஒரு போதும் தூரதரிசனத்துடன் சமநிலையுடன் ஒரு திரைப்படத்தை ஒரு போதும் கொடுக்கமுடியாது. ஹே ராம் திரைக் கதையை காந்தியைக் கொன்ற கதாநாயகனில் இருந்து அவர் துவங்கினார். உன்னைப்போல் ஒருவன் திரைக் கதையை இஸ்லாமியர்களைக் கொல்லும் கதாநாயகனாக இந்திப்பட இரவல் மொழியில் துவங்கினார். குருதிப்புனலில் நிஹ்லானியின் சமநிலையை அவரால் கடைபிடிக்க முடியாது, போராளிகள் மீதான எதிர்மறையான மதிப்பீட்டை மொழிமாற்றம் செய்யும்போது மாற்றிக் கொண்டார். அவரது சார்பு நிலைகள் என்பது அரசியல் பிரச்சினைகளில் ஒரு போதும் முழுமையாக ஒடுக்கப்பட்பட்டவர் மத்தியில் இல்லை. இதற்கான காரணத்தை, அவர் இந்துத்துவவாதியா இல்லையா அல்லது இடதுசாரி அரசியல் கொண்டவரா இல்லையா அல்லது பெரியாரின் சீடரா இல்லையா என்கிற ஆய்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன்.

கமல்ஹாஸன் முதலும் முடிவுமாக சினிமாக்காரர். அவருக்கு ஐம்பதாண்டு கால சினிமா வரலாறு இருக்கிறது. முழுமையாக வெகுஜன சினிமாக்காரர் அவர். ரஜினிகாந்தோடு ஒப்பிட அல்லது விஜயகாந்த்தோடு ஒப்பிட, வலதுசாரி அரசியல் நிலைபாட்டிலிருந்து விலகிய நடுவாந்திர அரசியல் நிலைபாடு கொண்டவர் அவர். மணிரத்தினம், சங்கர் போன்றவர்களோடு ஒப்பிட நடுவாந்திர அரசியல் நிலைபாடு கொண்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  அவர். ஆதிக்க சாதியினருக்குள் இருந்தபடி (தேவர் மகன், விருமாண்டி) அவரால் மனிதாபிமானம் பேசமுடியும், ஆதிக்க சாதி மேட்டிமையே மகிமைப்படுத்தப்படும் தமிழ் சினிமாவில்  இது ஒரு ஆக்கப்படிநிலை. போராளிகள் வில்லன்களாகவே குரலற்று சித்திரிக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில் போராளிக்குத் தன் தரப்பைச் சொல்ல இடமளித்த குருதிப்புனல் தமிழ் சினிமாவில் ஒரு ஆக்கப்படிநிலை. இது ஒரு போதும் ஒடுக்கப்படுவர் சார்பான நிலைபாடோ அல்லது இடதுசாரி நிலைபாடோ ஆகாது.

இந்து முஸ்லீம் பிரச்சினையில் கமல்ஹாஸனது நிலைபாடு மிகவும் பூடகமானது. ஹே ராமில் வில்லனும் அவர்தான் கதாநாயகனும் அவர்தான். உன்னைப் போல் ஒருவனில் வில்லனும் கதாநாயகனும் அவர்தான். அவரால் இந்த வில்லன் கதாநாயகன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது. ஆன்டி ஹீரோக்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் பிரச்சினையைப் பொறுத்து கமல்ஹாஸன் தேர்ந்து கொண்ட ஆன்டி ஹீரோ திரைப்படத்தில் வருகிற ஆன்டி ஹீரோ மட்டமல்ல, நிஜவாழ்விலும் இந்து-முஸ்லீம் அரசியலைப் பொறுத்து கமல்ஹாஸனின் நிலைபாடும் ஆன்டி ஹீரோ நிலைபாடுதான்.

இந்து-முஸ்லீம் பிரச்சினையில் அவரது நிலைபாடு தழும்பலான நிலைபாடுதான். நந்திதாஸ் போலவோ, தொலாக்கியா போலவோ, அனுராக் கஸ்யாப் போலவோ, நிசிகாந்த் காமத் போலவே அவரிடம் பிரச்சினை சாரந்த சார்புநிலை என்பது அவரிடம் இல்லை. பிரச்சினையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் பால் இவர்கள் அனைவருக்கும் சார்பு நிலைகள் இருந்தன. இவர்களும் பயங்கரவாதம் பற்றித் தான் பேசினார்கள். காரண காரிய அடிப்படையில் பேசினார்கள். கமல்ஹாஸனிடம் ஹேராமில் அவரது சார்பு நிலை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான இந்துப் பெண்களிடம் இருந்துதான் துவங்கியது.  உன்னைப் போல் ஒருவனில் அவரது சார்பு நிலை குஜராத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களிடம் இருந்துதான் துவங்கியது என்பது மூலக் கதையிலிருந்து விலகிய, ஒட்டாத ஒரு பொய். இதிலும் அவரது உண்மையான சார்பு நிலை இஸ்லாமியர்களுக்கு மாற்றத் திசையிலிருந்துதான் துவங்கியது.

வெகுஜன சினிமாவின் கதாநாயகனாக தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முனைகிறவரையிலும் கமல்ஹாஸன், கோவிந்த நிஹ்லானியிடமிருந்து ஆக்ரோஷ்(1980) மாதிரியிலான படங்களைத் தேர்ந்து கொள்ள முடியாது. அவரால் போலீஸ் ஸ்டோரியான துரோகாலைத்தான் தேர்ந்து கொள்ள முடியும். அவர் ஆன்டி ஹீரோவாக தன்னை நிலைநாட்டிக்கொள்ள விரும்புகிறவரைக்கும் அவர் நந்திதா தாசிடமிருந்தோ அல்லது நிசிகாந்த் காமத்திடமிருந்தோ அவரால் தேர்ந்து கொள்ள முடியாது. அவரால் நீரஜ் பாண்டேவிடம் இருந்துதான் தேர்ந்து கொள்ள முடியும்.

கமல்ஹாஸனை நான் ஒரு பிரக்ஞைபூர்வமான இந்துத்துவவாதி என வசைபாட மாட்டேன். அவர் ஒரு நடுவாந்திரவாதி. தழும்பல்காரர். மும்பையில் முதலில் இஸ்லாமியர்கள் தாக்குதலில் இறங்கவில்லை என மணிரத்தினத்தின் பம்பாய் படம் பற்றி வெளிப்படையாகச் சொன்னவரும் அவர்தான். குஜராத் இளம் கர்ப்பிணிக்காக இரங்குகிறவரும் அவர்தான். நீதியமைப்பைத் தாண்டி இன்ஸ்டன்ட் தீர்ப்பாக தீவிரவாதத்துக்கு தீவிரவாதமே தீர்வு என நீதி வழங்குகிறவரும் அவர்தான்.

மிருணாள்சென், சத்யஜித்ரே, நிஹ்லானி, ஸியாம் பெனிகல் போன்ற இந்திய சினிமா மேதைகளால் விதந்தோதப்படும் நடிகர் அவர். அதில் எவருக்கும் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. இந்த மேதைகளின் அளவிலான திரைப்படங்களை ஒரு தயாரிப்பாளனாக, இயக்குனராக கமல்ஹாஸன் ஒரு போதும் உருவாக்க முடியாது. திரைப்படம் குறித்த முன்னவர்களின் சமூகக் கடப்பாடோ அல்லது தரிசனமோ கமல்ஹாஸனிடம் இல்லாதது. கமல்ஹாஸன் நான் முன்பு சுட்டிக் காட்டியபடி, முதலும் முடிவுமாக ஒரு வெகுஜன சினிமாக்காரர். அந்த எல்லைகளைத் தாண்டும் ஆளுமை அவருக்கு இருந்தாலும் கூட, அவரால் ஒரு போதும் அதனைத் தாண்டி வசர முடியாது என்பதனைத்தான் அவரது ஐம்பதாண்டு கால திரைப் பயணம் நிரூபித்திருக்கிறது.

பயங்கரவாதம் என்பது உலகில் இன்று இருக்கிறது. காஷ்மீரில் வெகு மக்களைக் கொல்கிற, ஈராக்கில் வெகுமக்களைக் கொல்கிற, இலங்கையில் தமிழ் வெகுமக்களைக் கொல்கிற அரசுகள் செய்வது பயங்கரவாதம்தான். குஜராத்தில், மலாகானில், மும்பையில் வெகுமக்களைக் கொன்ற இந்துத்துவவாதிகளும் பயங்கரவாதிகள்தான். ஹைதாராபாத்திலும், மும்பை மற்றும் கோவை இரயில் நிலையங்களிலும், இந்தியப் பாராளுமன்றத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தி வெகுமக்களையும், வெகுமக்கள் பிரதிநிதிகளையும் கொன்றவர்களும் பயங்கரவாதிகள்தான்.

இந்துத்துவ பயங்கரவாதம் இந்தியாவிலேயே வேர் கொண்டு இதனைச் செய்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் சர்வதேசிய அளவில் வேர் கொண்டு, இந்திய இந்து-முஸ்லீம் முரண்பாடுகளைத் தனது ஒற்றை இஸ்லாமிய உலகத் திட்டத்திற்காகப் பாவிக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் பிஜேபி பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸ் என உள்நாட்டிலேயெ இருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அல் கைதா-தலிபான்-லஸ்கர் தொய்பா அமைப்புக்களில் வேர் கொண்டு, அரசியல் இஸ்லாமினால் தாக்கம் பெற்ற உதிரியான இந்திய இஸ்லாமியர்களின் ஒத்துழைப்புடன் அதனை இந்தியாவில் அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். பயங்கரவாதம் என்பது இந்தியாவில் இந்து பயங்கரவாதமாகவும், இஸ்லாமிய பயங்கரவாதமாகவும் சமவேளையில் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மெய்மையை அறிவதற்காக அரசியல் சந்தர்ப்பவாதமோ அல்லது அரசியல் தந்திரோபாயமோ பயன்படாது. நம் காலத்தின் இந்து முஸ்லீம் மதங்களுக்கு இடையிலான முறுகல் நிலை என்பது பாப்ரி மஜீத்தில்தான் துவங்கியது என்பதில் சந்தேகமில்லை. பாப்ரி மஜீத்தைத் தொடர்ந்து மும்பையிலும் கோவை கோட்டமேட்டிலும் இஸ்லாமிய மக்கள் ஆத்திரமூட்டப்பட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அதனைத் தொடர்ந்து நடந்த மோதல்களில் இஸ்லாமிய வெகுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இந்துத்துவவாதிகள் இதன் பின் இருந்தார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அதன் பின் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் பின்னிருந்த இஸ்லாமிய மக்களுக்கிடையிலான தார்மீகக் கோபத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

பாலஸ்தீனப் போராளிகளின் தற்கொலைத் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளின் இலங்கை ராணுவத்தினரின் மீதான தற்கொலைத் தாக்குதல்களையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும். எனினும், பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய வெகுமக்கள் பேருந்துகளிலும், விடுதலைப் புலிகள் கொழும்பு தேசிய வங்கியிலும், இஸ்லாமியத் தீவிரவாதிகள் கோவை, மும்பை இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு வைத்து, அரசியலில் நேரடியிலாக ஈடுபடாத அப்பாவி மக்களைக் கொல்வது பயங்கரவாதம்தான் என்பதைச் சுட்டுக்காட்டுகிற நேர்மை நமக்கு வேண்டும். ஹைதராபாத் மார்க்கெட்டிலும், மும்பை தாஜ் ஹோட்டலிலும், மும்பை இரயில்களிலும் குண்டு வைத்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்தான் என்பதை நாம் ஒப்ப வேண்டும்.

இந்தியாவிலுள்ள அரசியல் இஸ்லாமின் பாதிப்புக்கு உட்பட்ட சிலர் தலிபகான்களுடனும் அல் கைதாவினருடனும் அஸ்கர் தொய்பாவுடனும் தொடர்பு கொண்டு இதற்கு உதவுவதும் பயங்கரவாதம் என்பதையும் நாம் ஒப்ப வேண்டும். இத்தகைய வரலாற்று அவதானங்களுடன்தான் இந்தியாவில் பயங்கரவாதம் குறித்த எந்தத் திரைப்படமும் அணுகப்பட வேண்டும். உன்னைப் போல் ஒருவன் திரைப்படமும் இப்படிப்பட்ட அரசியல் சமநிலையிலிருந்துதான் அணுகப்பட வேண்டும்.

திரைப்படத்தின் உருவாக்கத்தில் மேதமை கொண்டவர், தமிழ் இலக்கியம் அறிந்தவர் கமல்ஹாஸன் எனும் அளவில எத்தனையோ விஷயங்களை பெரும் பத்திரிக்கைகளும் சிறுபத்திரிக்கைகளும் எழுதலாம். அவர் உடுத்திய ஒரே உடுப்புடன் முழப் படத்தில் நடித்திருக்கிறார் எனவெல்லாம் கூட ஆச்சர்யத்துடன் விமர்சனங்களைப் பெரும் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. படத்தில் ரெட் காமெரா, ஸ்ருதி ஹாஸனின் இசை, மாகன்லாலின் தேர்ந்தெடுத்த நடிப்பு, பார்வையாளனை நாற்காலி முனைக்குத் தள்ளும் படத் தொகுப்பு என நிறைய நிறைய எழுதியாகிவிட்டது. நான் மேலதிகமாக ஒரே ஒரு விசயத்தை மட்டுமே சுட்ட விரும்புகிறேன்.

இலக்கியப் பிரதியின்பம், திரைப்படப் பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் எவ்வாறு திரைப்படத்தின் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்திற்குக் கொஞ்சம் அசந்தால் தள்ளிவிடும் என்பதற்குச் சான்றான சில காட்சிகள் படத்தில் வருகிறது. கமிசனர் தொலைக்காட்சியாளினிக்குப் பற்ற வைக்கும் சிகரெட், ஆர்மர் கோட் அணிந்த பின் கமிஷனர் தன் கீழதிகாரியின் வயிற்றில் குத்தியபடி வாஞ்சையுடன் ஆர் யு ஓகே எனக்கேட்பது, காம்ப்யூட்டர் ஹேக்கராக வருபவர் கமிசனரோடு பேசிக் கொண்டிருக்கையில் வரும் காதலியின் போன் கால், அவனின் கூம்பு வடிவிலான பரட்டைத் தலை, போலீஸ் இன்பார்மராய் மாறியவனை ஆஸ்பத்திரிக்குப் போக வைக்க போலீஸ் அதிகாரி விடும் குத்து, சிறுநீர் கழிக்கும் கைதி, சாவகாசமாக கமல்ஹாஸன் சாப்பிடும் சான்ட்விச், குடிக்கும் காப்பி, பிளாஸ்க்கி மூடியை மூடும் லாவகம், கடைசிக் காட்சியில் கமல்ஹாஸன் ‘போலீஸ் ஜீப்பா?’ எனச் கேட்டு மோன்லாலைப் பார்த்து மெதுவாகப் புன்னகைக்கும் அழகு என உன்னைப் போல் ஒருவன் வழங்கும் திரைப் பிரதி இன்பம் எண்ணற்றது.

மோகன் லால் நடிப்புக்கு சில காட்சிகளில் எழுந்து நின்று தலைவணங்க வேண்டும் போலத் தோன்றியது. லட்சுமி – மோகன்லால் இடையிலான பதட்டம், ஆரிப் காண்பிக்கும் தார்மீகக் கோபம், போலீஸ் அதிகாரி தன் குழந்தையை விசாரித்தபடி ஆபத்தினிடையில் மனைவியினிடம் ‘ஐ லவ் யூ’ சொல்வது எனக் கொஞ்சம் அசந்தால் உங்களை அரசியல் ரீதியில் கவிழ்த்துப் போட ஆயிரம் இன்பங்கள் தொழில் நுட்பமெனும் அளவில் படமெங்கிலும் விரவியிருக்கிறது.

கமல்ஹாஸனை இஸ்லாமியர் என அடையாளப்படுத்த அவர் உருவம் முழுமையாக கீழிருந்து காண்பிக்கப்படும் இடைவேளையின் முன்போது, இஸ்லாமிய இசையுடன் ‘அல்லா ஜானே’ பாடல் ஒலிக்கிறது. மனைவியுடன் பேசும் போது ‘இன்ஷா அல்லா’ என்கிறார். இது ஜெயகாந்தன் சொல்கிற இன்ஷா அல்லா அல்ல. இத்துடன் கமல்ஹாஸனுக்குத் தாடியும் இருக்கிறது. இஸ்லாமியரான ஒருவர், இஸ்லாமியப் பயங்கரவாதிகளைக் கொல்ல நினைக்கிற தேசபக்தராக இருக்கிறார் எனவும் இப்படத்தினை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இப்படியான கூடார்த்தங்களும் திரைப்படப் பிரதி இன்பங்களும் கொண்டது உன்னைப் போல் ஒருவன்.

நிச்சயமாக இது ஜெயகாந்தன் சொன்ன அர்த்தத்தில் உன்னைப் போல் ஒருவன் இல்லை. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்கு ஜெயகாந்தனின் ஏழைச் சிறுவனும் ஞாபகம் வந்தான். குஜராத்தும் ஞாபகத்தில் இருந்தது. பர்ஸானியாவும் ஞாபகத்தில் இருந்தது. கோவையும் ஞாபகத்தில் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மொழி மாற்றப் படம் இது எனும் ஞாபகமும், நிறைய மாற்றங்களும் உள்ளிடல்களும், துருத்திய வசனங்களும் ஞாபகம் இருந்தது. இந்த ஞபாகங்கள் படத்திலிருந்து என்னை அந்நியப்படுத்தியே வந்தது. பிரதி இன்பத்தில் மயங்கிவிடாத இந்த அந்நியப்படுத்தலை உருவாக்கியது, பிரச்சினை தொடர்பான எனது அரசியலும் கருத்தியல் விழிப்புணர்வும்தான் என்று அழுத்தமாக நினைக்கிறேன். அந்நியமாதல் கோட்பாட்டை பிரெக்ட் நாடகத்திற்கு மட்டும் பேசவில்லை. அது இன்று இலக்கிய வாசிப்புக்கும், திரைப்படப் பார்வைக்கும், அது குறித்த விமர்சனத்துக்கும் பொருந்தும் நிலைபாடுதான்.

 

Comments are closed.