அறிதலின் அரசியல் : வாசிப்பும் தேர்வும்

அறிதலின் போக்கில் மூன்று விதமான அனுபவங்களை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இந்த அனுபவங்கள் அனைத்துமே மேட்டிமை மனநிலை கொண்டவை என்பதனை எனது அனுபவத்தில் திட்டவட்டமாக நான் அறிந்திருப்பதால் நிராகரிப்பையும் தெளிவையும் பெருமிதத்தையும் எனது அறிதலின் போக்கில் நான் பெற்றிருக்கிறேன்.

உன்னை விட நான் அதிகம் படித்தவன் என்பதனைச் சிலர் நேரடியாகவும் சில கனவான்கள் மறைமுகமாகவும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருப்பார்கள். இதன் வழி எம்மிடம் தாழ்வுணர்ச்சியைத் தூண்டுவதனையும் அதனது தொடர்ச்சியாக எம்மீது அதிகாரம் செலுத்துவதனையும் செய்வது அவர்களுக்கு எளிது. வர்க்க, சாதிய மேலாண்மை இதில் உள்ளுறையாக இருக்கும். பிறிதொரு வகையினர் எமது கருத்துக்களைப் புறக்கணிப்பதன் வழி அல்லது அவ்வாறு காட்டிக் கொள்வதன் வழி நாம் முக்கியத்துவமில்லாதவர்கள் எனும் தாழ்வுணர்வையும் நமக்குள் விதைத்துக் கொண்டேயிருப்பார்கள். பெரும்பாலும் பேராசிரியப் பெருந்தகைகளிடம் இந்தக் குணாம்சம் அதிகமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

இன்னுமொரு வகையினர் தமது அக்குளுக்குள் கலை இலக்கியம் அழகியல் என அனைத்தின் சாரங்களையும் மறைத்து வைத்திருப்பவர்கள். எடுத்த எடுப்பில் இலக்கியம் உங்களுக்குத் தெரியாது என்கிற கொடும் ஆயுதத்தை ஏவி எம்மை நிலைகுலையச் செய்வார்கள். இந்த மூன்று வகையினரும் கைக்கொள்ளும் ஆயுதம் பொதுவாக எதிரில் இருப்பவரிடம் தாழ்வுணர்ச்சியைத் தூண்டி தமது அதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்வதுதான்.

இவர்கள் ஒவ்வொருவரையும் எனது அனுபவத்தில் நான் எவ்வாறு எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறேன் என்பதே இப்பதிவு.

இந்த உலகில் மெத்தப் படித்தவன் எனவோ எல்லாம் அறிந்த மேதை எனவோ எவரும் இலர். இப்புவியில் ஒருவரது வாழ்காலம் அதிகபட்சம் வெறுமனே 100 ஆண்டுகள்தான் என்பதை உணர்ந்தால் எவரும் முழுக்கக் கற்றல் என்பது சாத்தியமற்றது என்பதை ஒருவர் உணர முடியும். ஓருவரால் இயலக் கூடியதெல்லாம் தனது இருப்பும் தேர்வும் சூழலும் சார்ந்து குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு குறிப்பிட்ட வரையறையில் பயணம் செய்ய முடிவது மட்டும்தான்.

ஈடுபாடும் தேர்வும் என்பது நாம் இயங்கும் உலகில் எம்மைப் பிணைத்திருக்கிற வர்க்கம், சாதி, இனம், பால், நிறம், மதம் என்பவற்றால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஓருவனது வாசிப்பும் தேர்வும் அவன் கோரிக் கொள்கிற பெரும்படிப்பு என்பவையும் இதனால்தான் தீர்மானிக்கப்படுகிறது. வேறு வேறு துறைசார் படிப்பு, வேறு வேறு தேர்வு, வேறு வேறு தொகை நூல்கள் என்பதனையே ஒவ்வொரு தனிநபரும் வாசித்தல் சாத்தியம். ஓருவன் வாசித்திருக்கிற 10,000 நூற்களாயினும் அல்லது 10 இலட்சம் நூற்களாயினும் பிறிதொருவன் வாசித்திருக்கிற அதே அளவு நூல்களுடன் அவனது தேர்வுகளுடன் ஒப்பு நோக்கத்தக்கதல்ல. ஒருவனது இலக்கிய வாசிப்பும் இப்படிப் பிறிதொருவனது தேர்வுகளுடனும் வாசிப்புடனும் ஒப்பு நோக்கத்தக்கதல்ல.

இச்சூழலில் வாசிப்பின் அடிப்படையில் எவனொருவனும் தன்னை வெண்ணெய் எனக் கோரிக்கொள்ள முடியாது. இந்த நிலைபாட்டிலிருந்து எவரது வாசிப்பும் குறித்த பிரமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை எனும் நிலைபாட்டுக்கும் எனது வாசிப்பு எவருக்கும் குறைந்தது இல்லை எனும் நிலைபாட்டுக்கும் நான் வந்தேன். நான் தொடர்ந்து வாசிப்பவன் எனும் சுயஉணர்வு எனக்குச் சுயபெருமிதத்தையும் பிறருக்குத் தலைவணங்கா உணர்வையும் எனது சகமனிதர்பால் அன்பையும் சமகாலத்தில் கொண்டு தருகிறது.

எம்மைப் புறக்கணிப்பவர் மற்றும் எம்மை வாசிப்பது இல்லை ஏனெனில் அது எம்மைப் பாதிக்கவில்லை என்று சொல்பவர்களையும் புறங்கையில் ஒதுக்கிப்போக இப்போது பயின்றிருக்கிறேன். அகிம்சையை மூர்க்கமாக நம்புபவனுக்கு விடுதலை அரசியலில் மானுட இருத்தலாக வன்முறையின் தவிர்க்க இயலாமையைப் பேசுகிறவனது எழுத்துக்கள் உவப்பானவையாக இருக்க முடியாது. தாராளவாத அரசியலைச் சதா போதித்துக் கொண்டிருப்பவனுக்கு இன்னோர் உலகு சாத்தியம் எனப் பேசுகிற முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் பிடிக்கும் எனச்சொல்ல முடியாது. வெகுஜன சினிமா இருக்கிறவாரே அங்கீகரிக்க வேண்டும் என நினைப்பவனும் வாழ்வுக்கும் திரைப்படத்திற்குமான இடையறாத உறவை வலியுறுத்துபவனும் ஒரே பாட்டையில் பயணம் செய்ய முடியாது.

பெரியாரை ஒரு புறம் விதந்தோதிக் கொண்டு நரேந்திர மோடி ஆதரவாளனாகவும் இருக்க முடியாது.

இப்படியான இருவரதும் எழுத்துக்கள் அல்லது தேர்வுகள் அல்லது வாசிப்புகள் பரஸ்பரம் ஒருவரையொருவர் பாதிக்கும் எனவும் சொல்லமுடியாது. இங்கும் ஒருவரது ஈடுபாடும் தேர்வும் சூழலும்தான் ஏற்பையும் புறக்கணிப்பையும் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கிறது. ஆகவே என்னை வாசிக்கவில்லை அல்லது எனது எழுத்துக்கள் தன்னைக் கவரவில்லை என்றோ சொல்பவர்கள் பற்றி நான் கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை. என்னை அவர்கள் படிக்காதது போலவே அவர்களது எழுத்துக்கள் என்னைக் கவர்வது போலவும் பாதிப்பது போலவும் இல்லாதிருப்பது சாத்தியம் என்பதனையும் நான் புரிந்திருக்கிறேன்.

பரஸ்பரம் ஏற்பும் நிராகரிப்பும்தான் இந்த முரண்பட்ட உலகில் சாத்தியம். ஆகவே புறக்கணிப்புக்களைப் புறக்கணிக்கவும் நான் கற்றிருக்கிறேன்.

மூன்றாவதாக வருகிறார் இலக்கியத்தையும் அழகியலையும் தனது அக்குளுக்குள் மறைத்து வைத்திருப்பவர். இவர் அடிக்கடி கேட்கும் கேள்வி இது : நான் படித்ததை நீ படித்திருக்கிறாயா? எனது எழுத்துக்களை நீ படித்திருக்கிறாயா? இந்த மண்டை கொழுத்த நபர் அடிப்படையான ஒரு விடயத்தை மறந்துவிடுகிறார். இதே கேள்வியை எதிரிலிருப்பவன் கேட்கமுடியும் என்கிற சாதாரண உண்மைதான் அது. பரஸ்பரம் இருவருமே தத்தமது தேர்வுகளையும் வாசிப்பையும் தேடல்களையும் தான் கொண்டிருப்பார்கள். மீளவும் இந்தத் தேர்வுகளையும் வாசிப்புகளையும் அறுதியில் தீர்மானிப்பது அவரவரது சூழலும் ஈடுபாடுகளும் முன்னுரிமைளும்தான்.

இந்த மெத்தப்படித்த இலக்கியவாதிகள் நான் வாசித்திருக்கிற நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கோட்பாட்டு நூல்கள் என இவற்றில் ஏதொன்றையும் வாசித்ததில்லை என்பதை நான் பல தருணங்களில் கண்டிருக்கிறேன். ஏன் இவ்வாறு இருக்கிறது அல்லது நேர்கிறது? வாசிப்பின் பின்னிருக்கிற மனநிலையை எது தீர்மானிக்கிறது? வர்க்கம், சாதி, இனம், மதம், நிறம், பால், ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல், மேட்டிமை, தாழ்வுநிலை என இவையே ஒருவனது தேர்வையும் வாசிப்பிற்கான தேடுதலையும் தீர்மானிக்கிறது. இந்தத் தெளிவே தாழ்வுணர்ச்சியையும் புறக்கணிப்பையும் தாண்டிச் செல்கிற பெருமித உணர்வையும் தன்னம்பிக்கையும் எழுதும் ஆற்றலையும் எனக்கு அளிக்கிறது.

நான் தேர்கிறேன் ஆகவே வாழ்கிறேன். நான் வாசிக்கிறேன் எனவே நான் வாழ்கிறேன்.

Comments are closed.