ஆர்.பாலகிருஷ்ணன் : மூன்று கவிதைகள்

.
எனது பள்ளிநாட்கள் முதல் இன்று வரையிலுமான எனது ஆத்ம நண்பர்கள் மூவர். விசுவநாதன், உதயகுமார், பாலகிருஷ்ணன். எனது  ஆத்மரீதியான அரசியல் தோழமை இருவர். ஒருவர் காலஞ்சென்ற ஜெகநாதன். மற்றவர்விசாரணைபடத்தின் மூலக்கதை எழுதிய சந்திரகுமார். எனது ஆரம்பப் பள்ளியில் எனது ஆத்ம நண்பர்கள் இருவர். ஒருவர் ராஜன் மற்றவர் பழனிசாமி. எனது உயர்நிலைப் பள்ளி வாழ்வின் ஆத்ம நண்பர் மூவர். பத்மநாபன், வேலுச்சாமி, நடராஜ்.

இவர்களோடு பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றமும் எனது தோழனான ரவியும் பகத்சிங் மன்றத் தோழர்களும் மருத்துவக் கல்லூரி மணி, பொறியியல் கல்லூரி பட்டாபி, அரசினர் கலைக் கல்லூரி விடுதிகளும் சங்கமம் தோழர்களும் எனது கருத்துலகையும் ஆன்ம உலகையும் உருவாக்கினார்கள். இவர்கள் இன்றும் எனது அன்றாட நினைவுகளில் வாழும் நண்பர்கள் மற்றும் தோழர்கள். வறுமையிலும் இழப்பிலும் தீரமும் திமிரும் பெருமிதமும் அழகும் கொண்டு வாழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களைக் குறித்து நிறைய எழுத வேண்டும். இங்கு அத்தகைய ஒரு நண்பனின் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆர்.பாலகிருஷ்ணனை எங்கள் நண்பர்கள் வட்டத்தில் குழப்படி செய்யும் குழந்தையாகவே நாங்கள் கருதினோம். தீவிரமாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நுட்பமாகக் குறுக்குசால் ஓட்டுவான். அது அவனது கவித்துவ மனம் என்றே நான் கருதி வந்திருக்கிறேன். ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும் ஹைதராபாத் ஆங்கிலக் கற்கை நிலையத்தில் உயர்கல்வியும் கற்ற அவன் தற்போது பொறியற் கல்லூரியொன்றில் ஆங்கிலம் கற்பிக்கிறான். அற்புதமான கவித்துவ உணர்வும் மொழியாற்றலும் கொண்ட அவனது கவிதைத் தொகுப்பு ஒன்றும் நண்பர்களால் வெளியிடப்பட்டது. கோவை ஞானி அதற்கு முன்னுரை எழுதினார் என ஞாபகம். அவனது மொழிபெயர்ப்பில் சுப்ரபாரதிமணியனது நாவலொன்று ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது. அலன் பதியுவின்கம்யூனிசக் கருதுகோள்கட்டுரை அவனது மொழிபெயர்ப்பில் எனது இணையதளத்தில் உள்ளது. கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்று நூலொன்று அவனது மொழிபெயர்ப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. எப்போதுமே அவனது கவிதைகளின் முதல் வாசகன் நான். முதுமையின் தனிமை, இயற்கையின் உயிர்;, கலையின் விலகல் என இங்கு வெளியாகியிருக்கும் அவனது மூன்று கவிதைகளும் மீளமுடியாத துயரை எனக்குள் எழுப்புகிறது. பாலு எனத்தான் அவனை நாங்கள் அழைப்போம். பின்வருவது பாலுவின் மூன்று கவிதைகள்..

*

நிலைக் கண்ணாடி காண்பவன்

இம்மனிதனை நான் முன்பு கண்டுள்ளேன்
நம்பிக்கையின் ஊற்று இவன் நெஞ்சினில்
இருந்து வழிய கருத்தரங்குகளில் தொண்டையின் முழக்கம்
ஆரணங்கு ஒருத்தியை இவன் காதல் பெற்றதென
என்னிடம் பகர்ந்தான்
கரு மேகம் கடந்து சென்ற காலை வேளையில்
உதிரத்தில் கரைந்து போன உறவுகள் நீங்கலாயின
மரணத்தின் ஒரேயொரு மழைத்துளி அவன் மீசை மேல் விழ
கீறிச் சென்ற நரை ஒன்று இரக்கம் நிறைந்ததல்ல
நாளிகைகள் பலவற்றின் முன் நான் அவனைக் கண்டேன்
நாட்கள் மழை நிரெனப் பாய்ந்தோட
சகதியில் ஊன்றிய பாதங்களில்
புடைத்த நரம்புகள் சுழன்றிருந்தன
நிலையற்ற பற்கள் உள்
சுழலும் நாவு எழுப்பும் சொற்கள்
மொழியற்ற பிதற்றல்கள்
விசும்பின் தொலை நோக்கில் கால்
பதிக்கும் தடங்கள் நிலை குலைந்த
உடலின் நீள் பயணங்கள்
எனினும் கண்ணுக் கீழ் காணும் நரை
தீர்க்கம் நிறைந்தது
நிலைக் கண்ணாடியில் நான் காணும் இம் மனிதனின்
தலை தூய வெண் நிறம் கொண்டதெனினும்
லயிக்கத் தகுந்ததன்று

உடலில் பாதி கரம்

கவிதையை விடச் சிறந்தது ஒரு மரம்
எப்போதும் வானுயர்ந்து நின்று
கடவுளுடன் மொழி பேசும்
வலிய தண்டு தாங்கிய
இம்மரத்தின் ஆசையில் வியந்த
கிளைகள் வான் எங்கும் தடவி முயக்க
விளையும் செவ்வரிக் கனிகளை
ஏன் கோட்டான்கள் தாவிச் சிதைக்கின்றன ?
விழிகள் கிளை வழித் தண்டிரங்க
காணும் இடை வரித் திமிர்ந்த
புரளும் யோனி பிளவுண்டதில்லை
அதன் பேராசையை என்றுமரியாப்
பேதைமை கொண்ட என் கரங்கள்
முயக்கவியலா விசும்பில் என் உடல்

கல்லின் மொழி

பன்னெடுங்காலமாய் இம்மலை மேல்
காணும் கல் கோரும் சொல் என்ன?
காலத்தின் உளிகளில் தூர்ந்து காணும்
அதன் இந்நிலை எதன் வடிவம்?
அனுமதி இன்றி அதன் மேல் கொட்டும்
மழையின் க்ரூர ஆன்மாவின் வடிவம் என்ன?
தன் கூறிய பற்களால்
அதனைத் தின்று தீர்க்கும் காற்றின்
வடிவத்தையும் நீ காண்
நான் சித்திரவதை முகாமில் ஒரு மூன்றிலக்க எண்
அளிக்கப் பட்டிருந்தேன்
பசி எம்மை நல்லவேளை கொண்டு போக இல்லை
நான் அங்கு ஒரு நாடகத்தையும்
எழுதி முடித்திருந்தேன்
என் நூல் ஏன் தடை செய்யப் பட்டது?#

கல்லைத் தீட்டினால் சிற்பம் கிட்டுமென்பாய் நீ
என்றாவது சிற்பம் தீட்ட
நீ அதன் அனுமதி கோரினாயா ?
அதனின்றும் அவ்வாறே
தோற்றங்களை உருவகிக்க உன்னால் இயலுமா?

மனிதர்கள் பூச்சிகள் யானைகள்
இதய ஒலிகளால் நிரம்பியுள்ள
இம்மலை மேல் காணும் சிதறும் இக்கல்
வான் முகடுகளைக் கிழித்து
அவற்றை எதிரொலிக்கும்
அன்றே இதுவும் தன்னுரு
சிதையத் துவளும் தரை நோக்கி

*
# சொல்செனிட்சின்

Comments are closed.