ஏழு அரசியல் நாவல்கள்

பாரதிநாதனின்தறியுடன்

தமிழக இடதுசாரி அரசியல் வரலாற்றில் அதிகமும் அறியப்படாத வட ஆற்காடு தர்மபுரி மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் நடைபெற்ற விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய நாவல். உணர்ச்சிகரமும் வெகுஜன திரைப்படப் பண்புகளும் கொண்ட இந்த நாவலில் விளிம்புநிலைப் பெண்கள் வெளிப்படுத்தும் ஓர்மம் நிகரில்லாதது.

நக்சலைட் இயக்கத்தின் முழுநேர ஊழியனான ரங்கன் பெருமழையிரவில் கொல்லப்படும் நிகழ்வு இயற்கை அன்னை அவர் மீது பொழியும் முகாரிராகம் போன்ற மொழியால் உருவாகியிருக்கிறது. கதை இன்றிலிருந்து கால்நூற்றாண்டுக்கு முன்பு முடிகிறது எனும் கவனத்துடன், அக்கால கருத்தியல் வேறுபாடுகள் சார்ந்த புரிதலுடன் வாசிக்கப்பட வேண்டிய மிகமுக்கியமான அரசியல் நாவல். அறியவரப்பெறாத வரலாற்றைப் பதிந்தவராகவும் ஒரு கதைசொல்லியாகவும் தறியுடன் நாவலில் பாரதிநாதன் வென்றிருக்கிறார்.

இரா.முருகவேளின்மிளிர்கல்

கண்ணகி தொன்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு ஆய்வும் மாணவியும் அவளது கல்லூரித் தோழனான இடதுசாரிச் செயல்பாட்டாளனும் ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு பூம்புகார் முதல் கொடுங்காளுர் வரை மேற்கொள்ளும் சாகசப் பயணம் குறித்த நாவல்.

பயண இலக்கியம் என்பது வாசகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வது. அழைத்துச் செல்பவரைப் பொருத்து எமது அனுபவங்களும் அறிதலும் அரசியல் புரிதலும் மாறுபடும். மோட்டார் சைக்கிள் டயரியும் பொலிவியன் டைரியும் பயண இலக்கியக்கங்கள்தான். தெல்மா அன்ட் லூசி, மீரா, திருடா திருடா போன்று ரோட் மூவீஸ் எனப்படும் திரைப்பட வகையினமும் திரைக்கதையாகப் பயண இலக்கியங்கள்தான். ஹெமிங்வே, சிங்காரம் போன்றவர்களதும் இவ்வகை இலக்கியம்தான். சாகசம் இத்தகைய எழுத்து வகையின் அடிப்படைப் பண்பு. இரா.முருகவேளின் மிளிர்கல் இந்த வகை சாகசப் பயண நாவல். பன்னாட்டு மூலதனம், கண்ணகி ஆய்வு, மாவோயிச மற்றும் மனித உரிமை அரசியல் என சமகால இந்தியாவை சாகச நோக்கில் அணுகும் வேகமான நாவல்.

அம்பர்தோ எகோவின் த நேம் ஆப் த ரோஸ் நாவலின் வேகமும் ஆய்வுச்சாகசமும் மிளிர்கல் நாவலில் இருக்கிறது. நாவலின் இறுதியில் கொடுங்களுர் கண்ணகி உற்சவம் சித்தரிக்கப்பட்ட விதம் முருகவேளின் சபால்ட்டர்ன் சொல்முறையின் உச்சம்.

லகூமி சரவணக்குமாரின்கானகன்

பழங்குடி மக்களின் இருப்பும் வாழ்முறையும் அரசினாலும் பன்னாட்டு மூலதன சக்திகளாலும் சூறையாடலுக்கு உள்ளாகிவரும் காலத்தில் அவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல். கானகனை வாசிக்கும்போது ஜங்கிள் புக், போன்யோ, டார்ஜான், சோளகர் தொட்டி, பிரின்சஸ் மோனாக்கோ, ஒரு இந்தியக் கனவு, சென்னினள் மிருக்யா எல்லாம் ஞாபகம் வந்துபோனது. பெனான், சார்த்தர், நெருதா, மார்க்ஸ், லெனின் போன்ற தத்துவவாதிகளின் பெயர்கள், ‘வன்மமல்ல புலியின் நீதியுணர்வு’ எனும் வாசகம், இனம், தற்கொலை போன்றன அனைத்தும் கானகன் புத்தகத்தை வாசித்து முடித்தபோது எனக்குள் தங்கியிருக்கின்றன.

இயற்கையை வென்று வாழ்வது என இப்போது எவரும் பேசமுடியாது. இயற்கைக்கும் மனிதனுக்குமான சமநிலை பேணல் அல்லது இயைபு குறித்துத்தான் நாம் பேசமுடியும். பட்டாம்பூச்சி விளைவு குறித்துத்தான் பேசமுடியும். வேட்டை குறித்த நுண்விவரங்களாகத் துவங்கும் நாவல், இரண்டாம் பகுதியில் வேகமாக அரசியல் பேசும்போது துவக்க நுண்விவரங்கள் காணாமல் போய்விடுகிறது. மூன்றாவது பகுதியில் சமகாலத் தமிழ்த்திரைப்படத்தின் காட்சித் தொகுப்பு போன்ற வேகம். கானகனும் நம்கால காடும் குறித்த சித்தரிப்புகள் இன்னும் இன்னுமான நுண்அரசியலை எம்மிடம் கோருகின்றன.

“ஓரு மனிதன் அல்லது ஒரு இனம் சரணடைவதற்கு முன்பாக ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்கமுடியாத விளைவாக இருக்கும். மிருகங்களின் தற்கொலை என்னும் ஆன்ம பலத்தை முன்மாதிரியாக மேற்கொள்ளும் எவரும் ஆளுமைமிக்க நாயகனாகலாம். காட்டில் வாழ்கிறவர்களுக்கு அந்தக் குணம் இயல்பிலேயே உண்டு”(195-195) எனும் நாவல், சார்த்தரையும் பெனானையும் துவக்கத்தில் படைப்பாளி உரையாக முன்வைக்கும் நாவல் உருவாக்கிய எதிர்பார்ப்பை இறுதிவரையிலும் அது நிறைவு செய்யவில்லை.

காடு குறித்த மனோரதியமான சித்திரத்தைத் தருவது ஒரு அணுகல் முறை. திரையிலும் இலக்கியத்திலும் அதற்கு நிறையச் சான்றுகள் உண்டு. காடு, மனிதர்கள், சமநிலை குலைக்கும் அதிகாரம் என்பதுதான் காடு குறித்த நம்காலத்தின் இடையறாத நுண்சித்திரிப்பாக இருக்க முடியும். கானகன், காடு குறித்த வியத்தலாக, விதந்தோதுதலாக, மனோரதியமான சஞ்சாரமாகவே முடிந்துவிடுகிறது.

தமிழ்க்கவியின்ஊழிக்காலம்

2009 மே 17 முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்த, எட்டுமாத காலத்தில் பெண்களும் குழந்தைகளும் வெகுமக்களும் எதிர்கொண்ட நெஞ்சைப் பிளக்கும் கொந்தளிப்பான அனுபவங்களை விவரிக்கும் நாவல். ஊழி எனும் தொன்மச் சொல்லுக்கு நவீன அரசியலில் பேரழிவு எனப் பிரதியிடலாம். மிலோவான் டிஜிலாசின் மூன்றாவது வர்க்கம், மாவோவின் சோசலிசக் காலகட்டத்தில் வர்க்கப் போராட்டம், பின்புரட்சிகர சமூகங்களில் நிர்வாகிகள், விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசில் புதிதாகத் தோன்றிய அதிகார வர்க்கம் என இவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு, சுயநலன்களை முன்வைத்து புரட்சிகரத் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு அகழியை இவர்கள் வெட்டுகிறார்கள். புரட்சியின் தலைமை மக்களிடமிருந்து அந்நியமாகிறது. சிலவேளை மக்களுக்கு எதிரியாகவும் ஆகிறது.

நாவலில் பார்வதியாக வரும் தமிழ்க்கவி புலிகள் அமைப்பில் மதிப்புற்குரிய இடத்தில், தலைவரைச் சென்று சந்திக்கும் இடத்தில் இருந்தவர். அவரே இத்தனைப் பெருந்துயரை அடைந்திருப்பாரானால் சாதாரண மனிதர்களின் இறுதித் துயரை எண்ண மனம் அஞ்சுகிறது. தளபதிகளைப் பிள்ளை பிடிக்காரர்கள் என்றே குறிப்பிடும் பார்வதி, 2009 மே 17 வரையிலும் நெஞ்சுறுதியுடன் போராடிய போராளிகளின் விடுதலையுணர்வுக்குத் தலைவணங்கிச் செல்கிறார். 2009 மே 15 இல் துவங்கும் நாவல் மே 17 ஆம் திகதி முடிகிறது. முள்ளிவாய்க்காலுக்கு முன்பான இறுதி எட்டு மாதங்களில் விடுதலைப் போரில் பெண்களும் குழந்தைகளும் எதிர்கொண்ட பேரழிவுகளின் பதிவு ஊழிக்காலம்.

குணா கவியழகனின்நஞ்சுண்டகாடு

குடும்பத்தையும் அதற்கான தமது பொறுப்புகளையும் விட்டுவிலகிய போராளிகளின் தனிமைத்துயரும், சமவேளையில் ஆண்களற்ற குடும்பங்களைக் கொண்டு நடத்த வேண்டியிருந்த அன்னையரதும் அக்காக்களதும் நிராதரவான வாழ்வும் குறித்த நாவல். மக்சிம் கார்க்கிக்கு அன்னை, குணா கவியழகனுக்கு அக்கா.

விடுதலை அமைப்பினுள் எங்கே அதிகாரம் தோன்றுகிறது அதனை போராளிகளின் கூட்டுச்சிந்தனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதனை நாவல் பேசுகிறது. உறவுகளிலிருந்து தனித்த போராளிகளுக்கு காடு தோழனாக நெருங்கி வருகிறது. பிறைநிலவு ஊஞ்சலாக ஆகிறது. போராளிகளின் குடும்பங்கள் குறித்து இயக்கம் அக்கறைப்பட வேண்டும் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதுகிறான் நாவலின் நாயகன். விடுதலைப் போராட்டம் குறித்த வன்மமும் வெறுப்புமே ஈழ இலக்கியமாக அறியப்படும் சூழலில் போராட்டத்தின் மானுட முகத்தை, போராளிகளின் பேரன்பை, அதனது சகல முரண்களுடனும் முன்வைக்கும் நாவல் நஞ்சுண்ட காடு.

ஆர்.எம்.நௌஸாத்தின்கொல்வதெழுதுதல்

1990 ஆம் ஆண்டுக் காலப்புகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லீம் கிராமத் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கிராம மக்களையும் அவர்கள் எதிர்கொண்ட போர்க்கால அனுபவங்களையும் பேசுகிறது.ஃபீல் குட் மூவி என்று சொல்வார்கள். இந்திய, தமிழ் சினிமா என்றால் கடைசியில் சுற்றம் புடைசூழ ஊர்மக்கள் திரள நடக்கும் நாயகன் நாயகி திருமணக் காட்சி. ஹாலிவுட் படம் என்றால் நாயகன் நாயகி கட்டிப்பிடித்து முத்தமிடும்போது காமெரா வானத்துக்குப் போகும்.

படைப்புமொழி, ஜனரஞ்ஜக சினிமா, சமகால அரசியலை எள்ளல் தொனிக்கச் சொல்லும் சொல்நெறி என அனைத்தும் கலந்த நாவல் கொல்வதெழுதுதல். கிழக்கு மாகாணத்தின் பள்ளிமுனை எனும் முஸ்லீம் கிராமத்தில் நகைப்புக்குரியவனாக இருந்த ஒரு விவசாயியின் மகன் இலங்கை முஸ்லீம் கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் காதலியைக் கைப்பிடிக்கும் வெற்றிநாயகனாகவும் ஆகும் கதை. அரசியல் கொலைகளின் பின்னிருக்கும் தனிநபர்க் காரணங்களை அலசும் நாவல். எவரும் எவரையும் கொலை செய்துவிட்டு எவர் மீதும் சுமத்தலாம் எனும் தொண்ணூறுகளின் கிழக்கு மாகாண அரசியல் சூழலைப் பின்னனியாகக் கொண்ட ஜனரஞ்சக நாவல் கொல்வதெழுதுதல்.

ஸர்மிளா செய்யித்தின்உம்மத்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களின் மீது திணித்த, குறிப்பாகப் பெண்களின் மீது திணித்த அவலத்தைச் சொல்லும் நாவல். மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கதாக நடத்தும் போராட்டத்தையும் விவரிக்கும் நாவல்.கிழக்கு மாகாண தலிபானியர்களிடம் தப்பி ஏராவூரிலிருந்து வெளியேறும் தவக்குல் நாவலின் இறுதியில் இலங்கையிலிருந்தே வெளியேறி தனது நேபாள மனித உரிமைச் சகாவிடம் செல்கிறார்.

குடும்பத்தினால் புறக்கணிக்கப்படும், தனது சொந்தத் தாய் மாமானால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் மாற்றுத் திறனாளியான போராளிப் பெண் யோகா பால்யம் முதலே அவளுக்குள் தகித்த தற்கொலைப் பாதையைத் தேர்ந்து தன்னைத்தானே எரியூட்டிக் கொள்கிறாள். பிறிதொரு போராளியும் மாற்றுத் திறனாளியும் ஆன தெய்வானை தான் காதலித்த சிங்கள ராணுணவத்தினனது மரணத்தை ஏற்று வலியுடன் வாழப்பழகிக் கொள்கிறாள். உம்மத் ஒரு தளத்தில் இழப்புக்களையும் இன்றைய தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான பெண்சகோதரத்துவக் கூட்டுணர்வையும் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் முன்வைக்கும் நாவல்.

பிறிதொரு தளத்தில் போருக்குப் பின்னான இணக்க அரசியலை அரசு சாரா நிறுவனச் செயல்பாட்டாளர் ஒருவரது பார்வையில் முன்வைக்கும் நாவல். அரசு சாரா நிறுவனச் செயல்பாட்டாளரான தவக்குலினுடைய உலகக் கண்ணோட்டமானது அரசு சாரா நிறுவனங்களின் அரசியல் சாரா நிலைபாட்டிலிருந்து தகவமைக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் அரசியல் சிக்கல்களை அதன் விளைகளிலிருந்து எதிர்மறையாகப் பார்க்கும் இந்த நோக்கு போராட்டத்திற்கான நியாயங்களை ஏற்று அதனது விமர்சனத்திற்குரிய பக்கங்களை அனுதாபத்துடன் பார்க்காமல் ஆயுதவிடுதலைப் போராட்டம் குறித்த ஒவ்வாமையுடனேயே பார்க்கிறது.

தவக்குல் இரண்டு பார்வைகளால் தகவகைப்பட்டிருக்கிறார். அரசு சாரா நிறுவனப் பார்வை முதலாவது; ஆயுத இயக்கம் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றம் உள்பட அவர்களுக்கு இழைத்த தீமைகள் இரண்டாவது. இந்த வகையில் உருவாகும் இந்தக் கைத்தமனநிலை இரு போராளிப் பெண்கள், அரசு சாரா நிறுவன நிர்வாகிகள் என அனைவருடனுமான ஊடாட்டங்களின் வழி முற்றிலும் போராட்டத்தை எதிர்மறையாகப் பார்க்கும் நிலைக்கு அவளைக் கொண்டு செல்கிறது.

தலிபானிய எதிர்ப்பு மனநிலை, போராட்டம் குறித்த எதிர்மை என இரண்டு பண்புகளும் கொண்ட இந்நாவல், இறுதியில் தவக்குலின் இலங்கையிலிருந்தான வெளியேற்றத்தை முன்வைத்து முடிகிறது. துருதிருஷ்டவசமாக இந்த வெளியேற்றத்தை தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்க நாவல் தயங்கிநிற்கிறது. மட்டுமன்று இணக்கத்திற்கான அவாவை அது திரும்பத்திரும்ப உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது.

Comments are closed.