மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு

33எனது நம்பிக்கைகளின் உடன் பயணிகளுக்காக எனது அவலத்தையும் துயரத்தையும் அவஸ்தைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எனது பயணத்தின் இடைத்தங்கல்களாகவே இருந்திருக்கின்றன. இக்கட்டுரைகள் கால்நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது. கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையைக் கண்டடைய முயற்சித்த தலைறையினருள் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது. பெருமிதம் இருந்தது. அடையாளம் கலாச்சாரம் சுதந்திரம் விமோசனம் விடுதலை என்றால் என்ன, அது எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது. பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையைக் காவித் திரிந்தவர்கள் நாடற்றவர்களாகக் கருத்தியலளவில் இருபத்தியோரம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம். உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம். வேட்கையின் பிறிதொரு பெயர் விடுதலை. நிறைவேறாத கனவுகளுடன் அலையும் ஆவிகளின் அந்தர மனநிலைதான் இந்தக் கட்டுரைகளெங்கும் விரவியிருப்புது போல எனக்குத் தோன்றுகிறது.