ஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை

பாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் உயிர்மூச்சு. புத்தபகவான் சாதி கடந்த ஆன்மீக விடுதலை பற்றிப் பேசியவர். இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்களது சிந்தனையின் பகுதியாக இருந்த விடுதலை இறையியலை கடைநிலை மக்களின் ஊழியர்களான இயேசுவும் கார்ல் மார்க்சும் வழிநடத்தினார்கள். மனிதன் வெறுமனே பொருளாதார ஜீவியோ அரசியல் ஜீவியோ மட்டுமல்ல. அவன் ஆன்மீகஜீவி. தான் கொண்ட இலட்சியத்துக்கு தன்னையே இழப்பது அவனால் மட்டுமே ஆகக் கூடியது. தனது இறுதிக் காலத்தில் மார்க்சையும் புத்தபகவானையும் ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியதும் யதேச்சையானது அல்ல.

அசலான சிந்தனையாளன் ஒருவனை அவனது அனுபவப் பிரபஞ்சத்தின் வழிதான் நாம் புரிந்துகொள்ள முடியும். அவனது பொதுச் சமூகச் செயல்பாடுகளின்-அரசியல் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் அவனது வாழ்பனுபவங்களில்தான் இருக்கிறது. அவனது அன்றாட வாழ்வில், குடும்ப உறவுகளில், தனிமனித உறவுகளில், தேர்ந்துகொள்ளும் தோழமைகளில்தான் இருக்கிறது. இந்த நோக்கிலிருந்து மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் எவரும் பெரும் முரணைக் காண முடியாது. மார்க்சிஸ்ட்டுகளோடு இணைந்தும் முரண்பட்டும் தனது போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்திருக்கிறார். தொழிற்சாலைகளில் சில வேலைகளுக்கு தலித்துகள் கணக்கிலெடுக்கப்படுவதே இல்லை. வர்க்கபோதம் பெற்ற தொழிலாளிகள் சாதிய மனப்பான்மையினின்று மீளவில்லை. சாதிய மனோபாவத்தின் கொடும் அனுபவங்களை தன் சொந்த வாழ்விலும் தமது உறவுகளதும் தம்மைச் சுற்றிய மனிதர்களதும் வாழ்வில் எதிர்கொண்ட அம்பேத்கர் போன்ற விடுதலையை அவாவும் ஒரு மனிதர் அன்று கம்யூனிஸட்டுகளைக் கடுமையாக விமர்சித்துத்தான் மேற்செல்ல முடியும். அதனையே அம்பேத்கர் மேற்கொண்டார். கடையரிலும் கடையரான மனிதருக்கு ஆனதுதானே கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட உலகு?

முதலில் அம்பேத்கர் திரைப்படம் குறித்த தயாரிப்பு மற்றும் விநியோக அரசியலை அலசிவிட்டே படம் குறித்த விமர்சனத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

ஜாபர் படேலின் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படம் பல அடுக்குகளில் விரிகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அம்பேத்கரின் குடும்ப வாழ்வு அனுபவங்கள். கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் எகானமிக்ஸ்சில் அவர் பெற்ற கல்வி மற்றும் வெள்ளை இனவெறி அனுபவங்கள். அவரது பால்ய காலம் துவங்கி புத்த மதத்தைத் தழுவிய பின்பான மரணம் வரையிலும் அவரது சொந்த வாழ்வுக்கும் அரசியல் பிரக்ஞையின் வளர்ச்சிக்கும் அவரது அரசியல் கடப்பாட்டுக்கும் இருந்த இடையறாத தொடர்ச்சி. தனிமனிதன் என்பதிலிருந்து தலித் மக்களின் தலைவனாக அவர் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலித் விடுதலைக்கான போராட்டங்கள். மொத்த இந்து சமூகமும் ஒரு பக்கம் திரண்டிருக்க மறுபக்கம் தனது அறிவாற்றலும் மனதில் கனன்ற விடுதலை அறமும் கொண்டு அவர் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய கருத்துப் போராட்டங்கள் என அவரை மானுட விடுதலையைச் சளையாது தேடித்திரிந்த முழுமையான ஞானவானாக முன்வைக்கிறது அம்பேத்கர் திரைப்படம்.

ஜாபர் படேல் இந்தப் படத்தை சர்வதேசியப் பார்வையாளனை இலக்காகக் கொண்டு ஒரு ஆங்கிலப் படமாகவே உருவாக்க விரும்பியிருக்கிறார். இந்திய அரசியலின் மிகப் பெரும் ஆளுமைகளான காந்தி, ஜின்னா போன்றோர் குறித்த படங்கள் இவ்வாறு ஆங்கில மொழியில் உலகப் படங்களாகத்தான் உருவாகியிருந்தன என்பதைப் புரிந்துகொண்டால் ஜாபர் படேலது நோக்கையும் நாம் புரிந்து கொள்ளலாம். அம்பேத்கர் மீது இந்துத்துவாதிகளால் தொடுக்கப்பட்ட அம்பேத்கர் பிரத்தானிய காலனிய அரசின் ஆதரவாளர் எனும் அவதூறை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் ஜாபர் படேலுக்கு இருந்தது. காந்தி எதிர்கொண்டது போலவே காலனியவாதிகளிடமும் வெள்ளை இனவாதிகளிடமும் நிற-இன ஒதுக்கத்தை அமெரிக்கா-பிரித்தானியாவில் அம்பேத்கரும் எதிர்கொண்டார். இன்னும் இந்த இன ஒதுக்கலுக்கும் இந்திய சாதிய ஒதுக்கலுக்கும் ஒரு இணைவையும் படம் முன்வைக்கிறது. எம்மை ஆண்ட காலனி ஆதிக்க நாடான பிரித்தானியாவில்; சமகால இனவெறி எதிர்ப்புச் சட்டங்களில் சாதி ஒதுக்கத்தையும் கொண்டு;வர வேண்டும் எனும் குரல் ஒலித்து வரும் காலத்தில், ஐநா மனித உரிமைச்; சபையில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை விசாரிக்கப்பட வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் இந்நேரத்தில் அம்பேத்கர் திரைப்படம் ஆங்கில மொழியில் உலகப் படமாக வெளியாக வேண்டும் என ஜாபர் படேல் கருதியது எல்லா வகையிலும் பொருத்தமானதேயாகும்.

அமெரிக்கக் கறுப்பின மக்களின் தலைவனான மால்கம் எக்ஸ் போன்ற கிளர்ச்சி அரசியலின் தலைவர் அம்பேத்கர். மால்கம் எக்சுக்கு கறுப்பு இயக்குனர் ஸ்பைக் லீ போல அம்பேத்கருக்கு இயக்குனர் ஜாபர் படேல்.

மீரா நாயரின் சலாம் பாம்பே துவக்கம் மிசிசிப்பி மசாலா வரையிலான படங்களுக்குத் திரைக்கதை எழுதிய சோனி தார்ப்பர்வாலா, தலித் நாவலாசிரியரும் கவிஞருமான தயா பவார், நாவலாசிரியருமான அருண் சாது போன்றோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். சோனி ஹாலிவுட் சினிமா திரைக்கதை அனுபவம் கொண்டவர். இந்தத் திரைப்படத்திற்கான நடிகர் தெரிவில் ஜாபர் படேலின் முதல் தேர்வாக இருந்தவர் ஹாலிவுட் சினிமாவின் உச்ச குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ரோபர்ட் டீ நீரோ. அவரது சமகால ஹாலிவுட் ஆங்கில உச்சரிப்பு நிச்சயமாக ஆதாரமான இந்தோ-ஆங்கில உச்சரிப்பாக இருந்திருக்க முடியாது. தவறியிருக்கக் கூடிய அந்த இந்திய ஆதாரத்தன்மையை மம்முட்டி தனது பிரசன்னத்தினாலும் உச்சரிப்பினாலும் அம்பேத்கர் படத்தில் காப்பாற்றியிருக்கிறார்.

இத்தனை திட்டமிடல்கள் இருந்தும் காந்தி போலவோ மால்கம் எக்ஸ் போலவோ அம்பேத்கர் திரைப்படம் ஏன் பரந்துபட்ட உலக மக்களையும்-இந்திய மக்களையும் எட்டவில்லை?

1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி படம் அன்றைய செலவில் 30 மில்லியன் அமெரி;க்க டாலர்களில் உருவாக்கப்பட்டது. 20 மில்லியன் டாலர் ஹாலிவுட் படநிறுவனம் தர 10 மில்லியன் டாலரை இந்திய அரசு தந்தது. அன்றைய மதிப்பில் 3 கோடி அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்பில் பார்த்தாலே 50 கோடிகள் இந்திய ரூபாய்கள். 300,000 எக்டஸ்ராக்கள் காந்தி படத்திற்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அம்பேத்கர் படத்திற்கு மொத்தமாக ஆன பட்ஜெட் 10 கோடி இந்திய ரூபாய்கள். அதிகபட்சமாக எக்ஸ்ட்ராக்கள் 1,000 பேர் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். ரஜினிகாந்தின் எந்திரன் படத்திற்கான பட்ஜெட் 150 கோடி இந்திய ரூபாய்கள் என்று சொல்கிறார்கள்.

ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பு காந்தி படத்தை உலகெங்கிலும் விநியோகித்தது. அம்பேத்கர் படத்தைத் தயாரித்த இந்தியாவின் நேஷனல் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்குத் தான் தயாரிக்கும் படங்களை இந்திய அளவில் விநியோகிக்கக் கூட எந்தக் கட்டமைப்பும் இல்லை. ஜாபர் படேலிடம் அவர்கள் முதலில் அம்பேத்கர் குறித்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்குமாறுதான் கேட்டுக்கொண்டார்கள். ஜாபர் படேலின் பிடிவாதத்தினால்தான் அது முழுநீளப்படமாக உருமாற்றம் அடைந்தது. பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் அமைப்பு தயாரித்த அற்புதமான பல சமாந்தர சினிமாப் படங்களுக்கு இன்றுவரை நல்லதொரு ஒளித்தட்டுப் பிரதி கூடக் கிடைப்பதில்லை.

இயக்குனராக ஜாபர் படேலுக்கும் அம்பேத்கார் படத்தின் மீது விநியோகம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இருந்திருக்க முடியாது. பரவலாகத் தியேட்டர்களில் திரையிடப்படாமல் எவ்வாறு படம் வெகுமக்களைச் சென்று சேரும்?

ஜாபர் படேல் இந்திய மொழிகள் அனைத்திலும் சப் டைட்டில்களுடன் படம் வெளியாகும் என அறிவித்து படம் வெளியான 10 ஆண்டுகளின் பின்தான்; தமிழ்ப் பிரதி வெளியானது. தமிழில் சப் டைட்டில்களுடன் திரையிடக் கிடைத்த பிரதி படத்தின் அசல் அகலத்திரைப் பிரதி அல்ல. தூரதர்ஷனில் திரையிடப்பட்ட நான்கு பக்கமும் கருப்புப்பட்டை கொண்ட பாதிப் படத்தின் காட்சி அழகை விழுங்கிய பிரதி அது. இலண்டனில் நாங்கள் அதைத் திரையிட முனைந்தபோது திரையிடுவதற்கு உகந்த தரம் கொண்ட பிரதியாக அது இருக்கவில்லை.

அந்தந்த மாநிலத்தின் தலித் அரசியல் கட்சிகள் படத்தின் தரமான பிரதியைப் பெறுவதற்கும் அதனைப் பரலவாகக்; கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும். துரதிருதிருஷ்டவசமாக கலை சார்ந்த இந்தத் தூரதரிசனத்தை அந்த அமைப்புக்கள் கொண்டிருக்கவில்லை. ஆறுதலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்; கலைஞர்கள் சங்கமே சிறிய அளவிலேனும் அந்த முயற்சியைத் தமிழகத்தில் முன்னெடுத்தது.

விநியோகம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பிஜேபி சித்தாந்தியான அருண்ஷோரி 1997 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ‘வொர்சிப்பிங் பால்ஸ் காட்ஸ்’ எனும் புத்தகம் அருண்ஷோரியின் நூல் அம்பேத்காரை ஆங்கிலக் காலனிய அரசின் ஆதரவாளராக அவதூறு செய்திருந்தது. அம்பேத்கார் படம் கொஞ்சம் முன்பின்னாக அக்காலத்தில்தான் வெளியானது. 10 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அம்பேத்கார் திரைப்படம, 2000 ஆம் ஆண்டு வெளியானபோது இப்படம் காந்திக்கு எதிரான படம் என பெரும்பாலான வட இந்தியப் பத்திரிக்கைகள் எழுதின. ஜாபர் படேலும் இத்தகைய கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். ‘அம்பேத்கர் குறித்த படம் இது. அம்பேத்கரது அரசியல் வாழ்வில் காந்திக்;கு என்ன பாத்திரம் இருந்ததோ அது வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எவர் சரி, எவர் பிழை என்பதை வரலாறு சொல்லும்’ என அந்தக் கேள்விகளுக்குப் பதிலிறுத்தார் ஜாபர் படேல். இத்தகைய கேள்விகளைக் கேட்பவர்கள் எவரும் அட்டன்பரோவின் காந்தி படத்தில் உன்னதபுருஷரான காந்திக்கு இணையாக அம்பேத்கருக்கு ஏன் ஒரு சின்ன பாத்திரம் கூட உருவாக்கப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்புவது இல்லை.

இவ்வாறு தயாரிப்புக்கான பொருளாதாரப் பற்றாக்குறை, முடக்கப்பட்ட விநியோகமுறை, படத்திற்கு எதிரான அவதூறு அரசியல் பிரச்சாரம் எனும் குரூரமான திரைப் பின்னணியில்தான் அம்பேத்கர் படம் உலகப் படவிழாக்களிலும் இந்தியாவிலும் வெளியானது.

அட்டன்பரோ தனது காந்தி படத்தில் எந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாரோ அதே பார்வையாளர்களைத்தான் அம்பேத்கர் படத்தில் ஜாப்பர் பட்டேல் இலக்காகக் கொள்கிறார். படம் துவங்கும்போது ரோமானிய சாம்ராஜ்யத்தின் அடிமைகளின் நிலை, ஜெர்மானியப் பாசிஸ்ட்டுகளின் கீழ் யூதர்கள் நிலை, அமெரி;க்க வெள்ளை இனவெறியர்களின் கீழ் ஆப்ரோ-அமெரி;க்க மக்களின் நிலை என இவற்றினோடு இந்திய தலித் மக்களின் பாலான ஒப்புமையைப் படம் ஓவியச் சித்திரங்களை முன்வைத்து பின்னணிக் குரலில் விவரிக்கிறது. மனுஸ்மிருதி விவரிக்கும் நால்வர்ண வேறுபாட்டை, வரலாறு முழுக்கவும் தலித் மக்கள் பிரதான சமூகத்திலிருந்த விலக்கப்பட்டதையும் அவர்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறை குறித்தும் அக்குரல் தொடர்ந்து விவரிக்கிறது.

புழுதி நிற முன்னுரை முடியும்போது நிகழ்காலத்தில் வண்ணத்தில் கோவிலுக்குள் நுழைய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியபடி ஒரு தலித் இளைஞரை இந்துக் கோவிலின் வாசலின் முன்பாக வெறிகொண்ட ஒரு கும்பல் கழிகளால் இரத்தம் சொட்டத் தாக்கி கிழே சாய்க்கிறது. குங்குமத்தில் குளித்த நந்திச் சிலையைத் தாண்டி சுதந்திரக் தினக் கொண்டாட்டக் கோஷங்கள் எழுப்பியபடி மூவண்ண காகிதக் கொடியேந்தியபடி பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் போகிறார்கள். அங்கிருந்து அடித்துச் சாய்க்கப்பட்ட தலித் இளைஞருக்கு நீதி கோரி கோபம் கொண்ட தலித் இளைஞர்களது ஊர்வலமொன்று திரைக்குள் நுழைகிறது. அவர்களைத் குறுக்கே பாதைத் தடுப்புகள் வைத்துத் தடுக்கும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் திரையை நிறைக்கிறது.

அடுத்து காட்சியில் அமைதி பரவும் திரை கொலம்பிய பல்கலைக் கழக நூலக மேசையின் மேல் விரிந்திருக்கும் புத்தகங்களின் மீது தனித்திருக்கும் கண்ணாடியையும் பேனாவையும் காண்பிக்க அம்பேத்கர் நாற்காலியில் வந்து அமர்ந்து கண்ணாடியை எடுத்து அணிந்த கொள்கிறார். அம்பேத்கரது வாழ்க்கைக் கதை அங்கே துவங்குகிறது. இரண்டு மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் கொண்ட படத்தின் இறுதிக்காட்சியில் 1956 அக்டோபர் 14 ஆம் திகதி நாக்பூர் தீக்ஷாபூமியில் 6 இலட்சம் தலித் மக்கள் திரண்டிருக்க அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவுகிறார். புத்தம் சரணம் கச்சாமி எனத் தொடர்ந்து மக்கள் திரளினர் கோஷம் எழுப்பத் திரை இருள்கிறது. தலித் மக்களது மனித உரிமைகளுக்கான போராட்டம் இன்றும் நடந்தபடியிருக்கிறது எனும் வாசகங்கள் திரையில் எழப் படம் முடிகிறது. தலித் உரிமைகள் என்பது உலகில் இன்று அதிகம் பேசப்படும் மனித உரிமை அரசியலின் பகுதியாகப் பார்வையாளர்களிடம் முன்வைக்கப்படுகிறது.

இடையில் அம்பேத்கரின் பால்ய கால சாதி ஒதுக்கல் காட்சியாகிறது. புதுத்துணி எடுக்கப்போக, வியாபாரி துiணியை எடுத்து சேற்றில் துவட்டி அழுக்குத் துணியாக ஆக்கி அதனைத் தருகிறான். இடைவெளியில் வண்டியோட்டிகள் தலித் குழந்தைகளை வாகனங்களில் இருந்து பலவந்தமாக இறக்கிவிடுகிறார்கள். பள்ளியில் சம்ஸ்கிருதம் படிக்கத் தடை செய்கிறார்கள். பால்ய காலம் யுவநாட்களைத் தொடும்போது கொலம்பியா பல்கலைக் கழகம் சென்று படித்து, லண்டன் ஸ்கூல் அப் எகானாமிக்ஸில் இருந்து திரும்பி வரும்போது பரோடா சமஸ்தானப் பணி, கல்லூரிப் பணி எல்லா இடங்களிலும் தீண்டாமைக் கொடுமையை, ஒதுக்குதலை அவமானத்தை எதிர்கொள்கிறார். தங்குவதற்கு அறை கிடைப்பதில்லை. குடிக்க நீர் கிடைப்பதில்லை. சுய மரியாதை கொண்ட அடிப்படை மனிதனாகவே தான் நடத்தப்படுவதில்லை என்பதை நொடி தொரும் அனுபவிக்கிறார் அம்பேத்கர்.

ஓரு இளைஞராகக் கையறுநிலையில அம்பேத்கர் அழவும் துவங்குகிறார். இந்த அழுகை வெஞ்சினமாகவும் வைராக்கியமாகவும் பரிமாணம் பெறுகிறது. தனது மக்களுக்கான விடுதலை வேட்கையாக, சமரசமற்ற சமராக அது அரசியல் பரிமாணத்தைப் பெறுகிறது. வாசிப்பு, எழுதுதல், பத்திரிக்கை நடத்துதல், கோவில்; நுழைவு, பொதுக்குளத்;தில் நீரெடுக்கும் உரிமைக்கான போர் என அவரது அனுபவங்கள் அனைத்தும் அவரை அரசியல் அதிகாரம் பெறுதலும் அதிகார அமைப்பில் தலித் பிரதிநிதித்துவம் பெறுதலும் எனும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கமும் இந்துத்துவப் பெரும்பான்மைச் சமூகமும் தலித் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப் போவதில்லை எனும் தெளிவான முடிவுக்கு வருகிறார். தலித் அரசியல், தலித் தனித் தொகுதி, இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் விடுதலை என அவர் பின்னாளில் தேர்தெடுத்த அனைத்தும் அவரது சொந்த வாழ்வினதும் அவரது மக்களின் வாழ்வினதும் அனுபவங்களதும் தர்க்கபூர்வமான முடிவு. சுந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் இலக்குகளோடு மனிதன் ஒரு ஆன்மீக உயிரி என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். பெண்ணுரிமை அவரது முன்னுரிமையாக இருந்தது. இந்துச் சட்டத்திருத்த மசோதா இப்படித்தான் அவரது இலக்குகளில் ஒன்றாக ஆனது. நேரு அமைச்சரவையுடனான இறுதி முறிவு இதனைச் சார்ந்தே உருவானது.

காலனிய இடைக்கால அரசின் நிர்வாகம், காலனிய எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டம் என அனைத்திலும் தெளிவான நிலைபாடுகள் எடுத்த அவரது சிந்தனையின் மையமாக தலித் மக்களது மனிதப் பெருமிதமும் விடுதலையும் உரிமைகளுமே இருந்தது. பூரண இந்திய அரசியல் சுதந்திரம் பற்றிய கோரிக்கையுடன் பாசிச எதிர்ப்பு யுத்தத்தில ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகப் போராடும் நிலைபாட்டை அவர் இணைக்குமாறு கோரினார். ஆங்கில அரசிடம் உத்திரவாதங்கள் பெற வேண்டும் என்றார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையே அரசியல் யதார்த்தம் என்றார். வலிமையான இந்தியாவை அவர் விரும்பினார். இந்தியாவின யாப்பை எழுதிய அவர் யாப்புவாதியாகவும் அது நடைமுறைக்கு வராதபோது அதனை வெறுப்பவராகவும் ஆகினார். அவரது அனுபவங்களிலிருந்து அவர் வந்த அடைந்த முடிவுகள், வாசிப்பு, எழுத்து அனைத்துமே தலித் மக்களின் விடுதலை என்கிற நோக்கில்தான் மையம் கொண்டிருந்தது. அந்த நோக்கில் அவர் கிஞ்சிற்றும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர் கருத்தளவில் கடுமையான காந்திய எதிர்ப்பாளராக இருந்தார். கடுமையாகக் காந்தியை விமர்சிக்கவும் செய்தார். இதுவே வரலாறு. இந்த அரசியல் வரலாற்றையே அம்பேத்கர் படம் சொல்கிறது.

தனிமனிதராக அவரது முதல் மனைவி ரமாபாயின் மரணம் வரை வறுமையே அவரது வாழ்வில் விரவியிருந்தது. குழந்தைகள் பிறந்த சில காலங்களில் மரணமுற்றன. அவரது அரசியல் செயல்பாடுகள் சகோதர உறவுகளில் மிகுந்த முரண்களைக் கொணர்ந்தது. அவரது அமெரி;க்க-லண்டன் வாழ்வும் வறுமையில்தான் கழிந்தது. கல்லூரிப் பேராசிரியர் பணி, பல்வேறு அரசியல் பதவிகள் போன்றவற்றின் பின்தான் அவர் பொருளாதார ரீதியில் ஸ்திரநிலையை எட்டினார். பியானோ வாசிப்பதில் ஈடுபாடு காட்டினார். முறைப்படி அதனைக் கற்கவும் செய்தார். வறுமையும் ஒதுக்குதலும் என்பதில் இருந்து பெருமிதமும் விடுதலையுணர்வும் கொண்ட கனிந்த மனிதராக அவர் உருவானார். எழுத்தும் வாசிப்பும் அரசியல் கடப்பாடும் சமரசமற்ற கருத்தியல் பார்வை எனும் அளவில் அவரது ஆற்றலையும் செயல்பாட்டையும் நாம் கார்ல் மார்க்சுடனும் லெனினுடனும்தான் ஒப்பிட முடியும்.

அம்பேத்கரின் கருத்துப் போராட்டம் எனில் அது காந்தியுடனான கருத்துப் போராட்டம்தான். தலித் மக்கள் உள்பட முழு இந்திய மக்களுக்குமான ஏகப்பிரதிநிதியாகத் தன்னையும் காங்கிரஸ் கட்சியையும் கோரிக் கொண்டார் காந்தி. முஸ்லீம்,கிறித்தவ, சீக்கிய சமூகங்களின் சுயாதீனத்தை ஏற்ற காந்தி தலித் சுயாதீனத்தை மறுத்ததுடன் தானே அவர்களுக்குப் பிரதிநிதி எனக் கோரிக் கொண்டதோடு வர்ணாஸ்ரமத்தையும் விட்டுக் கொடாதவராக இருந்தார். தலித் தனித் தொகுதிகளுக்கு எதிரான காந்தியின் உண்ணாவிரதம் தன்னை உணர்ச்சிகரமாக நிரப்பந்திப்பதாகவே கருதினார் அம்பேத்கர். தொழிலாளி வர்க்கத்தினிடையில் இருக்கும் சாதிய ஒதுக்குதல் பற்றிய அக்கறை கொள்ளாத அன்றைய கம்யூனிஸ்ட்டுகளை அவர் சரியான காரணங்களுக்காகவே வெறுத்தார். நிலவிய சோசலிச-கம்யூனிச சமூகங்களில் அரசு இறுகிப்போன நிலைமைகளைப் பார்க்கும்போது, இன்று அரசம் கட்சியும் ஒன்றே ஆகியிருக்கும் சீன நிலைமையைப் பார்க்கும்போது அரசு உதிர்வது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்வி நிதானமாக விவாதிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அமெரி;க்காவிலும் பிரித்தானியாவிலும் அன்று நிலவிய காலனிய-இனவாத-நிறவாத அணுகுமுறைக்கும் இன்றும் மேற்கில் நிலவி வரும் இனவாத-நிறவாத அணுகுமுறைக்கும் அன்றும் இன்றும் இந்தியாவில் நிலவி வரும் சாதியவெறிக்கும் இடையிலான மிகநுட்பமான ஒப்பீட்டை படத்தின் பல காட்சிகள் முன்வைத்துச் செல்கின்றன.

கொலம்பிய பல்கலைக் கழக நாட்களின் இரு நிறவாத அனுபவங்கள் படத்தில் உள்ளன. பிரித்தானியாவில் லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்சில் நேரும் இரு இனவாத-நிறவாத அனுபவங்களும் இடம்பெறுகின்றன. ஓரு ஆப்ரிக்க இளைஞனும் அம்பேத்கரும் ஒரு உணவுவிடுதியில் எச்சில் தட்டுக்கள் கழுவும் பகுதிநேர வேலையை இணைந்து செய்கிறார்கள். அப்போது அவர்களுக்கிடையில் சாதியத்தீண்டாமையும் இனஒதுக்கலும் தொடர்பான உரையாடல் நடக்கிறது. இனஒதுக்கல் எதிர்ப்புச் சட்டம் சில உரிமைகளை ஆப்ரிக்கர்களுக்கு வழங்குகிறதே என்கிறார் அம்பேத்கர். ஏட்டில்தான் அது உள்ளது நடைமுறையில் இல்லை எனும் ஆப்ரிக்கர் இந்தியரான உங்களுக்கு கொலம்பியாவில் படிக்குக் கிடைக்கும் வாய்;ப்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறார். அவரால் தீண்டாமை என்பது இந்தியாவில் இருப்பதை நம்ப முடியவில்லை. இருவரும் வேலை முடிந்து வெளியே வரும்போது ஒருவெள்ளை மாதுவைத் தீண்டிவிட்டதற்காக ஒரு கறுப்பரை ஒரு வெள்ளையர் தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். இவை படத்தில் இடம் பெறும் இரு அமெரிக்கக் காட்சிகள்.

இனி வருபவை பிரித்தானியக் காட்சிகள். லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் அம்பேத்கர். அங்கு வரும் வெள்ளை மாணவர்கள் நேராக அம்பேத்கரிடம் சென்று, இந்தியர்கள் வலது கையில் குண்டி கழுவுவதால் இடது கையால்தான் சாப்;பிடுவார்;ளாமே உண்மையா? என்கிறார்கள். வெள்ளையர்கள் வாரத்திற்கு ஒருமுறைதானட குளிப்பார்கள் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு உங்களைப் பார்த்தபின் எனக்கு அது உறுதிப்படுகிறது என்கிறார அம்பேத்கர். கும்பல் எரிச்சலுடன் நகர்கிறது. இன்னொரு காட்சியில் அம்பேத்கர் கல்லூரி மெஸ்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கடைசி கோழிக்கறித் துண்டுகளும் அம்பேத்கருக்குக் கொடுத்து விட்டேன், உங்களுக்கு ரொட்டியும் காய்கறிகளும் இருக்கிறது எனத் தாமதமாக வரும் சில வெள்ளை மாணவர்களிடம் சொல்கிறார் பறிமாறுகிறவர். நேரே அம்பேத்கரிடம் செல்லும் வெள்ளை மாணவரொருவன் அம்பேத்கர் சட்டையில் குவளைத் தண்ணீரை எடுத்துக் கொட்டுகிறான். வெகுண்டெழும் அம்பேத்கர் அவனை மன்னிப்புக் கேட்குமாறு கடுமையாக- உறுதியுடன்-விறைப்புடன் கேட்கிறார். வேறு வழியில்லாமல் வெள்ளை மாணவன் மன்னிப்புக்; கேட்டுவிட்டுச் செல்கிறான்.

இந்தச் சம்பவங்கள் அம்பேத்கரிடம் வளர்ச்சி பெற்ற இனவாத-நிறவாத-காலனிய எதிர்ப்பு உணர்வுகளுக்குச் சான்றாக இருக்கின்றன. ஆப்ரிக்க மக்களின் பாலான ஓதுக்குதலை அவர் அமெரிக்காவில் அனுபவம் கொள்கிறார். பிரித்தானியாவில் அவர் எதிர்கொள்வது காலனிய-இனவெறி எனும் இரட்டை ஒதுக்குதல்கள். இது பற்றிய எதிர்ப்புணர்வை அவர் தலித் மக்களது உரிமை என்பதுடன் இந்தியாவுக்குப் பூரண விடுதலை என்பதுடன் இணைத்துச் செல்கிறார். அம்பேத்கர் காலனியவாதிகளின் ஆதரவாளராக இருந்தார் எனும் அவதூறுகளை இக்காட்சிகள் மறுக்கின்றன. சமவேளையில் இன்றைய உலகச் சூழலில் இனவாத-நிறவாத ஒதுக்குதல்களுடன் சாதிய ஒதுக்குதல்களையும் ஒப்பிடாக முன்வைப்பதன் வழி சாதியப் பிரச்சினையை உலக அரங்குக்கும் எடுத்துச் செல்ல முயல்கிறது படம்.

உருவ அளவிலும் அறிவுப் பிழம்பாகவும் ஆன்றமைந்த உணர்ச்சிகரமாகவும் அம்பேத்கரின் குணச்சித்திரத்தைச் சித்தரிக்க நடிகர் மம்முட்டி தவிரவும் எந்த இந்திய நடிகரும்; இத்தனை கச்சிதமாகத்; பொருந்தியிருக்க முடியாது. பண்டிட் குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வறுமை வறட்சி புழுதிநிறம் என்பன பண்டிட் ஒளிப்பதிவு நெறி. அம்பேத்கர் படத்திலும் கிராமியக் காட்சிகளும் தலித் குடியிருப்புகளும் இவ்வாறே படமாக்கப்பட்டிருக்கிறது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மர்ண்டத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை கொலம்பிய பல்கலைக்கழகம்மற்றம் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கட்டிடங்களின் உயர்ந்த நெடிய தூண்களும் உயரமான கூரைகள் கொண்ட விசாலமான பல்கலைக்கழக அறைகளும், விரிந்த லண்டன் நூலக வாசிப்பு அறையும் தருகி;ன்றன. மஹர் குளத்தில் நீpரெடுக்கும் காட்சியும் கோவில்; நுழைவு நோக்கிய ஊர்வலக் காட்சியும் அம்பேத்கர் பதடத மதத்திற்கு மாறும் காட்சியும் அம்பேத்கரின் மக்கள் திரள் அரசியலை கம்பீரத்துடன் விண்ணிலிருந்து பார்த்து வியந்திருக்கிறது. காந்தியின் மரணத்தின் போது அம்பேத்கரின் கையிலிருந்து தவறும் புத்தகத்தைத் தொடர்ந்து பியானோ துயரராகம் இசைக்கிறது.

வரலாறு, இரத்தமும் சதையுமான வரலாற்று மனிதர்கள் எனச் சித்திரித்த இந்திய வரலாறு குறித்த படங்களில், அட்டன்பரோவின் காந்தி, சியாம் பெனிகலின் போஸ்- த பர்காட்டன் ஹீரோ, ஞான.ராஜசேகரனின் பெரியார் மற்றும் இநதிய அரசியல் தலைவர்களான வல்லபாய் பட்டீல் பற்றிய சர்தார், காமராஜர் போன்ற படங்களை ஒப்பிடும்போது திரைப்பட நேர்த்தியும் கருத்தியல் விவாதங்களின் கூர்மையும் ஒருங்கே கொண்ட திரைப்படம் என அம்பேத்கர் படத்தை நாம் குறிப்பிட முடியும். அம்பேத்கர் படம் ஒவ்வொருமுறை பார்க்கும்; தோறும் புதிது புதிதாகச் சாளரங்களை நமக்குத் திறந்துகொண்டேயிருக்கிறது..

Comments are closed.