செழியனின் வானத்தைப் பிளந்த கதை

ஈழப் போராட்டம் பற்றிய செழியனின் இந்த நாட்குறிப்புக்கள் நூல் இரு பகுதியிலானது. பக்கம் 93 இல் துவங்கி 220 முடிய, 127 பக்கங்கள் நூலின் துணைத்தலைப்புக்கு ஒப்ப நாட்குறிப்புக்கள் வடிவத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பதிப்புரை, முன்னுரை துவங்கி 93 பக்கம் வரையிலான நூலின் பகுதிகள் செழியன் தனது போராட்ட வாழ்வில் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட, சந்ததியார், பத்மநாபா போன்ற ஆளுமைகளுடனான சந்திப்புக்களையும், அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற, சிவகுமாரனின் மரணம் போன்ற சம்பவங்களின் பதிவுகளாகவும் இருக்கின்றன. இந்தப் பகுதி எந்தவிதமான புனைவுத்தன்மையும் அல்லது உளவியல் விசாரணையும் கொண்டு எழுதப்பட்டதன்று. ஈழப் போராட்டத்தை அறிந்தவர்கள் இவற்றை வரலாற்றுப் பதிவுகள் என வரைமுறைப்படுத்துவது இயல்பானது.

பக்கம் 93 இல் இருந்து துவங்குகிற பகுதி ஒரு நாவலுக்குரிய, புனைகதைக்குரிய இயற்கைசார் வாழ்வு குறித்த அனுபவங்களையும். தாம் எதிர் கொள்ளும் மனித மனங்களுக்குள் பயணிக்கும் உளவியல் உள்ளோட்டமும் கொண்டதாக, வரலாற்று விசாரணையுடன் நாடகீயமாகச் சம்பவங்களை விவரிக்கும் தன்மையும் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியை வாசித்தபோது கம்போடியக் கொலைக் களங்களில் இருந்து தப்பி தமது அமெரிக்க ஊடகவியல் நண்பனிடம் வந்து சேரும் ஒரு மனிதனின் சாசகப் பயணம் குறித்த கில்லிங் பீல்ட்ஸ் திரைப்படத்தின் விறுவிறுப்பான கதைகூறு தன்மையை நான் அனுபவம் கொண்டேன்.

அந்த விதத்தில்தான் இந்த நூலை நாவல் என பின்னட்டையில் சி.மோகன் குறிப்பிடுகிறார் எனவும் நினைக்கிறேன். ஷோபா சக்தியின் கொரில்லா, சயந்தனின் ஆறா வடு போன்ற நூல்களுடன் ஒப்பிடும்போது இரு முற்றிலும் வேறுபட்ட பகுதிகளைக் கொண்ட இந்த நூலை, நாவல் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதுதானா எனும் வடிவம் குறித்த கேள்வி இயல்பாகவே எனக்குள் எழுகிறது.

இந்தநூலை பயோபிக்ஸன், ஆட்டோ பிக்ஸன் என்றெல்லாம் தமிழ்ச் சூழுலில் வித்தைகாட்டுபவர்களால் எழுதப்படும் எழுத்துக்களுடன் வைத்துப் பார்க்க முடியுமா? இந்த இருவகை எழுத்துக்களையும்; தமிழ்ச்சூழலில் நோய்க்கூறான இலக்கிய வகையினங்களாகவே என்னால் பார்க்க முடிகிறது. பாசாங்கு என்பதும் தனது எழுத்துக்களுக்குப் பொறுப்பேற்காது நழுவிச் செல்லும் எழுத்தாளனின் பொறுப்பின்மையும்தான் இந்த வகை எழுத்துக்களின் பின் இயங்கும் மனநிலை. ஓரே சமயத்தில் புனைவையும் வரலாற்றையும் குழப்பிச்சிதைத்து, எழுதுபவன் குறித்த புனித பிம்பங்களைக் கட்டமைக்கும் இந்த வகை நாவல், தமது சமகாலத்தில் வாழ்ந்த பிற மனிதர்கள், சம்பவங்கள் குறித்தும் ஒற்றைப்பட்டத்தன்மையான பிம்பங்களையே முன்வைத்துச் செல்லும்.

நாவல் குறித்த போற்றுதல்களை எல்லாம் தனக்கும், நாவல் குறித்த இழிவுகளையெல்லாம் புனைவுக்கும் பிறமனிதருக்குமாக சாதுர்யமாக இத்தகைய எழுத்தை எழுதுகிறவன் மடைமாற்றிவிடுவான். ஓரே சமயத்தில் தனது வாழ்வை இத்தகைய நாவலில் தேடுமாறு வாசகனைக் கோரும் எழுத்தாளன், இதனால் தனது புனித பிம்பம் சிதைகிறது என்றால் மட்டும் இது புனைவு என்று சாதுர்யமாகச் சொல்லி விலகிவிடுவான். இந்த வகை எழுத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள்.

செழியனின் வானத்தைப் பிளந்த கதை நூலில் வரலாற்றையும் ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் குழப்பிச் சிதைக்கும் இத்தகைய பாசாங்கை எங்கும் நம்மால் காணமுடியாது. நாவல் எனும் வடிவை ஒரு புனித வடிவமாகவோ அல்லது உச்சபட்ச அழகியல் வெளிப்பாட்டு வடிவமாகவோ நான் கருதாததால், செழியனின் இந்நூலை நாவல் எனும் வகையினத்தில் வைக்க முடியாது என நான் சொல்லும்போது, இந்நூலில் புனைவை மீறி நிற்கும் வரலாற்றினதும் வாழ்வினதும் சம்பவங்களினதும் கறார்த்தன்மை கருதியே இப்படிச் சொல்கிறேன் எனப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என நான் விழைகிறேன்.

இதுவன்றி இந்நூலின் வேறு வேறு பண்புகள் கொண்ட, வரலாற்றுப் பதிவுகள் மற்றும் சுயவாழ்வு அனுபவங்கள் என இருவேறுபட்ட பகுதிகள், தனித்தனி நூல்களாக உருவாக்கப்பட்டிருக்குமானால், இவை தனித்தனி முழுமைகளாக ஆகியிருக்கும் எனவும் நான் நினைக்கிறேன்.

இன்னும், 93 ஆம் பக்கம் துவங்கி நூல் இறுதி வரை செல்லும், விடுதலைப் புலிகளின் மனித வேட்டையிலிருந்து தப்பி புகலிடம் ஏகுவது வரையிலான செழியனின் அனுபவங்களின் சொல்முறையானது, அவர் பாவித்திருக்கும் மொழியானது, ஒரு தனிமனிதனின் நாட்குறிப்புக்களுக்கும், இயக்க அரசியலின் விடுதலைநோக்கு தடம்பிறழ்வதை துயருடன் விசாரணை செய்யும் கோவிந்தனின் அரசியல்-தத்துவ விசாரம் கொண்ட நாவலுக்கும் இடையிலான வெளியில் சஞ்சரிக்கும் சொல் முறையாக இருக்கிறது.

இவ்வகையில் வானத்தைப் பிளந்த கதை நூலின் பின்பகுதி மிகுந்த உயிரோட்டமுள்ள, இலக்கியத் தன்மை வாய்ந்த, வாசிப்புக் கிளர்ச்சி தரும் பகுதியாக இருக்கிறது.

கில்லிங் பீல்ட்ஸ் திரைப்படம், கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் போன்றவற்றுடன், இந்நூலை வாசிக்கும்போது, பிறிதொரு எழுத்தும் எனக்கு உடனடியில்; ஞாபகம் வந்தது. அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் : எனது சாட்சியம் எனும் ஜெ. ஜென்னியின் வரலாற்றுப் பதிவுகள். குறிப்பாக, இன்றும் மறைக்கப்படும் தோழி ரீட்டா மீதான அவலம் எனும் பகுதி ( ஜெ ஜென்னி : தேசம்நெட் : 7 மார்ச் 2011).

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு டிசம்பரில் செழியனின் நூல் வெளியாகிறது. ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த அனுபவங்கள் அல்லது விசாரணைகள் அல்லது விமர்சனம் என்பது இப்போது விடுதலைப் புலிகள் குறித்ததாக மட்டுமல்ல, பிற விடுதலை இயக்கங்கள் குறித்ததாகவும், விடுதலைப் போராட்டத்தின் புரட்சிகர ஸ்தாபனத்தின் அறமுறைகள் குறித்ததாகவும், போராட்ட வழிமுறையும் இலக்கும் குறித்த பிரச்சினையாகவும் ஆகியிருக்கிறது.

ஜென்னியின் பதிவுகள் தமிழீழ விடுதலைக் கழகத்தின் உள்இயங்கிய அறிமுறைகள், நெறிமுறைகள், அதற்குள் கட்சிக்கு விசுவாசமான ஊழியர் ஒருவரின் எதிர்மறைப் பாத்திரம் என்றெல்லாம் பேசுவது போல, பாலியல் வல்லுறவு என்பது அரசியல் மாறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆயுதமாகவும் இருந்தது என்பதைச் சுட்டிக்காடடுவது போல, செழியன் இந்த நூலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் உருவாகி வந்த, உள்கட்சிப் போராட்ட ஜனநாயகச் செயல்பாடுகளை இல்லாதொழிக்கும் உளவுத்துறைச் செயல்பாடுகளின் தீமை குறித்து, அது மேலிருந்து கீழாக இயக்கத்தை அரித்துக் கொண்டிருந்த நிலைமை குறித்து அவர் சொல்கிறார் (முளைவிடத் தொடங்கிய முட்செடியின் வீரிய விதைகள் மற்றும் தோழர் ரமேஷைக் கடத்திய தோழர்கள் : பக்கங்கள் 69-74 மற்றும் : 85-88).

மக்களின் மீதான ஆதிக்கத்தின் பகுதியாக, தமது ஆயுத மேலான்மையை முழு சமூகத்தின் மீதும் சுமத்தும் அதிகாரமூப்பின் பகுதியாக, எந்தவிதமான கருத்தியல் புரிதலும் இல்லாத சிறார்களின் மனித வேட்டையாக, விடுதலைப்புலிகள் பிற இயக்கங்களைத் தடைசெய்து, அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்ததன் பின்னிருந்த மனநிலை (வானத்தைப் பிளந்த கதை : 93 முதல் 220 வரையிலான பக்கங்கள்) அல்லது தமிழ்மரபு எத்தகையது?

பாலியல் வல்லுறவுகள் இன்று பெரும்பான்மையான இயக்க முரண்பாடுகளில் ஒரு ஆயுதமாகப் பாவிக்கப்பட்டிருப்பது  ஒவ்வொன்றாகப் பதிவு செய்யப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் பிளவில் அது பாவிக்கப்பட்டிருப்பது பதிவாகிறது (புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க, சிங்கங்கள் ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்தத் தயாராகின : நடராஜா குருபரன் : 9, ஏப்ரல் 2012). தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் முதல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வரை இதன் பின்னிருந்த, அரசியல் வேறுபாடுகள் தாண்டிய மனநிலை எத்தகையது?

மக்கள் விடுதலைப்படை, ஒடுக்கப்பட்டோருக்கான தொழிற்சங்க அமைப்புக்கள், உள்கட்சி ஜனநாயகம் என்றெல்லாம் திட்டமிட்ட, மார்க்சியத்தை தனது விடுதலைப் பிரக்ஞையாக வரித்துக் கொண்ட ஒரு இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, உளவமைப்பினால் வழிநடத்தப்பட நேர்ந்த மனநிலை எங்கிருந்து வந்தது? அதை நாம் ஸ்டாலின், கேஜபி, ஸ்டாசி என்று மரபான ஐரோப்பிய மார்க்சீய புரட்சிகர ஸ்தாபன வடிவங்களில் தேடிச் செல்ல வேண்டுமா?

வரலாற்றின் போக்கில் அல்லது போராட்டத்தின் போக்கில் சுயவிமர்சனம் கொண்ட போராளிகள் அல்லது மனிதர்கள் வகிக்கும் பாத்திரம்தான் என்ன?

விசுவானந்த தேவாவுடனான உரையாடல் ஒன்றினை செழியன் எழுதிச் செல்கிறார் (பக்கம் 91-92). ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியினரால் அதே இயக்கத்தின் முன்னோடித் தோழரான ரமேஷ் கடத்தப்பட்டதனையடுத்து, கட்சிக்குள் உளவுத்துறை, ஜனநாயக மறுப்பு போன்றவற்றினையடுத்து செழியன் அமைப்பிலிருந்து வெளியேறுவது என முடிவெடுக்கிறார். அப்போது விசுவானந்த தேவா செழியனைச் சந்திக்கிறார் பக்கங்கள்(89-92).

” நீ அமைப்பை விட்டு விலகப்போகின்றாய் என்று உன்டை தலைமை சொல்லுது…. ஆது உண்மையா?” நேரடியாகவே என்னிடம் கேட்டார். 

” ஓம். இனியும் இந்த ஜனநாயக விரோத அமைப்புக்குள் இருக்க முடியாது” 

” நீ விலகினால் எத்தனை பேர் விலகுவார்கள்?” 

” எனக்காக ஒருவரும் விலகமாட்டார்கள். ஆனால் அமைப்பின் தவறான போக்கினால் விரக்தியில் நிறைய தோழர்கள்  உள்ளனர். அதில் ஒரு நூறு பேரிலிருந்து இறுநூறு பேர் வரை மெல்ல மெல்ல விலகுவார்கள் என நினைக்கிறேன்” 

” விலகி அவையள் என்ன செய்யப் போகினம்?” 

” விலகி தங்களுடைய குடும்ப வாழ்க்கையைப் பார்க்கப் போவினம்…. அதைவிட அவையள் ஒன்றும் செய்யப்போறதில்லை” 

” உங்களுக்கு விடுதலைப்புலிகளால் எப்பையும் பிரச்சனை வரும்… எப்ப உங்களை அழிக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் உன்னால் ஒரு உடைவு ஏற்பட்டால், அது புலிகளுக்குச் சாதகமாகப் போய்விடும்…. எனவே நீங்கள் விலகக் கூடாது….இந்தப் புளொட் இயக்கத்தில் எத்தனை கொலைகள் நடந்திட்டது… அதையெல்லாம் தாங்கி அவங்கள் இருக்கிறாங்கள்…. உங்களுக்குள்ளை என்ன நடந்தது…. ஓரு கடத்தல்…..ஒப்பிட்டுப் பார்…. இதைத் தாங்கிக் கொண்டு இருக்க இயலாதா?”  

நான் அமைதியாக இருந்தேன். 

” புலிகளின்ட பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் மட்டும் நீ தயவு செய்து விலகாதே. இது நீ மற்ற எல்லாருக்கும் செய்யிற பெரிய காரியம்”

இந்தச் சந்திப்பின் சில தினங்களில் இந்தியா சென்ற விசுவானந்த தேவா நடுக்கலில் வைத்துக் கொல்லப்படுகிறார். யாரால் அவர் கொல்லப்பட்டார் என்பது இதுவரையில் தெரியாது என தொடர்ந்து எழுதும் செழியன், விசுவானந்த தேவாவின் உரையாடலை ஒட்டி தான் அமைப்பிலிருந்து விலகுவதில்லை என முடிவெடுத்ததாகவும் பதிவுசெய்கிறார்.

தரையில் ஓநாய், நீரில் முதலை போன்ற இருப்புநிலை இது. தமது இலக்குகளுக்கு விரோதமாக அமைப்பு இருக்கிறது எனத் தெரிந்தும் உள்ளே இருக்க வேண்டும். அல்லது வெளியேறி நூற்றுக் கணக்காண  தோழர்கள் விடுதலைப் புலிகளிடம் மடிய வேண்டும். போராட்டம் சிதைந்து போவதற்கு இதனைவிட என்ன காரணம் வேண்டும்?

இப்போது போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல, மாறாக போராளிகளின் உயிர்வாழ்தலுக்கானது. போராட்டங்களில், அறமும் தார்மீகமும் இழிந்துபோகிறபோது, ஆயுதம் கருத்தியல் போராட்டத்தில் அதிகாரம் பெறும்போது அதனது இலக்கு முற்றிலும் தவறிப்போகிறது. ஈழப் போராட்டம் முல்லைவாய்க்காலில் முடிவுபெறவில்லை. அதனது முடிவு எண்பதுகளின் ஆரம்பத்திலேயே கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது.

ஷோபா சக்தியிலிருந்து சயந்தன் வரையிலானவர்கள் எழுதிய நாவல்கள் கவனத்திற்கு உள்ளான அளவு, கணேசன் ஐயர், புஷ்பராசா போன்றவர்களின் நினைவுகள் பேசப்பட்ட அளவு செழியனின் இந்த நாட்குறிப்புக்கள் குறித்து விரிவாக எழுதப்படவில்லை என்பதன் அரசியல் குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. பிற இயக்கங்களை வேட்டையாடிய விடுதலைப் புலிகளின் நடத்தையை அதன் பின்னிருந்த வர்க்க, சாதிய அடிப்படைகளை நுட்பமாகவும், விரிவாகவும் விவரிக்கும் இந்நூல், சமவேளையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதனோடு பிற விடுதலை இயக்கங்களிலும் இருந்த ஜனநாயக விரோதத் தலைமைகளையும், அவர்களுக்கிடையில் நடைபெற்ற படுகொலை குறித்த கேள்விகளையும் முன்வைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே ஈழு விடுதலை அரசியலின் வீழ்ச்சியைப் பேசிக் கொண்டிருப்பவர்கள், இன்று தமது ஆயுதப் போராட்டத் தேர்வையே முற்றாக மறுதளிப்பவர்கள், சௌகரியமாகக் காணத்தவறிய பக்கம் இது. ஆனால் இனியான எதிர்ப்பு அரசியலுக்கு இத்தகைய மனம்திறந்த விவாதங்கள் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் திசையில் அதனைப் பிறழ்ந்து போகச் செய்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இருக்கின்றன. பிற விடுதலை இயக்கங்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடத் துவங்கியதில், விடுதலைக் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட எந்த நோக்குகளும் இல்லை. ஆயுத மேலாண்மையின் மூலம் தமது தலைமைத்துவ மேலாண்மையை நிறுவுவது எனும் நோக்கம் மட்டுமே இருந்தது. அந்த நோக்கிலிருந்து விடுதலைப் புலிகள் செயல்பட்டபோது இயக்கங்களுள் நிலவிய, ஈழத்தில் நிலவிய, ஸ்தாபன, வர்க்க, சாதிய முரண்பாடுகள் அவர்களுக்கு இயைபானதாக இருந்தது. சிற்சில இடங்களில்  பிற இயக்கங்களின் மீதான படுகொலைத்  தாக்குதலுக்கு கிராமிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் ஊர்வலம் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் படுகொலைகளில் இருந்து மாற்று இயக்கப் போராளிகளைப் பாதுகாத்தும் இருக்கிறார்கள்.

முரண்பாடுகள் அனைத்தையும், அது பிற போராளிகளுடனான கருத்து முரண்பாடுகளாயினும், தமக்குள் ஆன முரண்பாடுகளாயினும், மக்களுடனான முரண்பாடுகளாயினும், எந்தத் தரப்புடனுமான அரசியல் முரண்பாடுகளாயினும், அதனை ஆயுதமுனையில் தீர்ப்பது எனும் தர்க்கமனமே மக்களைப் பிணைக்கைதிகளாக வைத்திருப்பது எனும் மனநிலையின் பின்னும் இயங்கியது.

ஈழ வரலாற்றில் இதையொத்து பேசத்தக்க பிறிதொரு விடயம், குழந்தைப் போராளிகளை பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்து அவர்களைப் போரில் பலியிட்ட பிரச்சினை. விடுதலைப் புலிகளால் மட்டுல்ல, வட-கிழக்கு மாகாணத்தின் ஆட்சியதிகாரம் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் வசம் இருந்த காலத்தில்தான் இது உச்சபட்டமாக நடைபெற்றது. இப்பிரச்சினைகள் எல்லாமுமே ஈழவரலாற்றில் விரிவாகப் பதியவேண்டிய விஷயங்கள்தான். இச்சூழலில் செழியனின் நூல் பெறுகிற முக்கியத்துவம் என்ன?

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து இதுவரை வந்த நாவல்களிலும், வரலாற்றுக் குறிப்புக்களிலும் விரிவாகப் பேசப்படாத, ஆனால் பேசியே ஆகவேண்டிய, பிற இயக்கங்களை விடுதலைப் புலிகள் அழித்தொழித்த அனுபவங்கள் எனும் விஷயம் குறித்து, மிக விரிவாகவும், மிக நுட்பமாகவும், அது விளைவித்த மானுட அழிவுகளோடு பதிவு செய்திருக்கும் நூல் செழியனின் வானத்தைப் பிளந்த கதை. பிற இயக்கங்களை விடுதலைப் புலிகள் தடை செய்து அவர்களைப் படுகொலை செய்த வேளையில், மிக அழகாக வடிவமைப்புச் செய்து பதிப்பிக்கப்பட்டதொரு குறுநூல், தமிழர்கள் வாழுமிடமெங்கிலும் விநியோகம் செய்யப்பட்டது. பிற போராளிகள் அழிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அதில் அவர்கள் சமூக விரோதிகள், குற்றச் செயல்கள் புரிந்தவர்கள் எனும் காரணம் சொல்லப்பட்டது.

இன்று தமிழகத்தில் நடைபெறும் மரணதண்டனை விவாதங்கள், என்கவுண்டர்கள், குற்றவாளிகளை இனம் காணுதல் எனும் கருத்தாக்கங்களில் செயல்படும், வர்க்க, பிற இன, சாதியக் கூறுகளை வைத்துப் பார்க்கிறபோது, பெரும்பான்மையான யாழ்ப்பாண மக்களிடம் இந்த வேட்டையின் பாலிருந்த ஒப்புதல் மனநிலையை நாம் பகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வகையிலான அரசியல் விவாதங்களையும் அன்றைய சம்பவ விவரணைகளின் இடையில் அங்கங்கு எழுப்பியபடி செழியனின் நூல் நகர்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ளிய மிகமுக்கியமான ஒரு வரலாற்றுத் தருணத்தையும் அதன் அரசியல் பரிமாணங்களையும் பேசிய நூல் எனும் அளவில்தான் செழியனின் வானத்தைப் பிளந்த கதை தனது முக்கியத்துவத்தை நிறுவிக்கொள்கிறது.

இந்த நூலை உயிரோட்டமுள்ளதாக்குவது மனிதர்களுடனான உறவும் முரணையும் செழியனின் மொழி உணர்ச்சியுடன பதிவு செய்திருப்பது மட்டுமல்ல, இயற்கையுடனான உறவையும் முரணணையும், அதனை தன் வசத்தினுள் கொணர அவன் நடத்தும் மௌனச் சமரையும் அது அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.

தர்க்கங்களல்ல மாறாக தற்செயல்களே பல சமயங்களில் மனித வாழ்வைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இன்னும் சாவுக்குத் தப்பித் திரிவதில் இந்தத் தற்செயல்களும், அதனை விவரிக்கும் முறையும்தான் எழுத்தைச் சாஸ்வதமானதாக ஆக்குகிறது. இதை ஜான் லென்னானின் வார்த்தைகளில் சொல்வதானால், நாம் வாழ்வைத் திட்டமிட்டு, நகர்ந்து கொண்டிருக்கிறபோது, அதற்குச் சம்பந்தமில்லாமல் இருப்பில் நமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் நமது வாழ்வு.

செழியன் பலமுறை சாவிலிருந்து தப்புகிறார். வாசகனாக என்னளவில் அவர் தப்பிய தருணம், நூலில், 1986 ஆம் ஆணடு மார்கழி 17 ஆம் நாள்தான் (பக்கங்கள் 118-132) நிகழ்ந்திருக்கிறது.

…. அந்த வீட்டின் நான்கு புறமும் கிடுகு வேலியால் ஆனது என்றும் ‘கேட்’ மட்டும் இரும்பினால் ஆனது என்றும் குறிப்பிட்டேன். அந்த இரும்புக் ‘கேட்‘டை நிறுத்த கொங்கிரீட் தூண் கட்டியிருந்தார்கள். எப்போதாவது வீட்டைச் சுற்றியுள்ள வேலியை அகற்றிவிட்டு மதில் கட்ட வேண்டும் என்ற நோக்கம் அந்த வீட்டுக்காரர்களுக்கு நிச்சயம் இருந்தது. அதனால் அந்தக் கொங்கிரீட் தூணிலிருந்து ஒரு அடுக்கு சிமெண்டுக் கற்கள் ஆரம்பமாகி இருந்தன. அந்தச் சிமெண்டுக் கற்களுக்கும் கிடுகு வேலிக்கும் இடையில் சிறு இடைவெளி. ஓரு ஆள் நிற்கலாம் போல் தோன்றியது. அடுத்த கணமே அந்த இடைவெளிக்குள் நின்றேன்.

நான் நின்று கொண்டிருந்த இடத்தை ‘கேட்’ அடியில் இருந்தோ, வீட்டின் வாசலில் இருந்தோ பார்த்தால் காணமுடியாது. ஆனால் வீட்டின் முன்புறமாக சுமார் 10 அல்லது 15 அடிதூரம் சென்ற நின்று பார்த்தால் என்னைக் கண்டுவிடலாம்…

…. ஒரு வண்ணாத்திப் பூச்சியாய் இருக்கலாம். கூரையிலிருந்த மின் விளக்கின் ஒளியில் பறந்து திரிந்தது. அதனைக் கண்ட நாய்க்குட்டி வண்ணாத்திப் பூச்சியைத் துரத்தியது. வண்ணாத்திப் பூச்சிமேலும் கீழும், அங்குமிங்கும் எனப் பறந்து நாயக்குட்டிக்குக் கண்ணாம்பூச்சி காட்டியது. இந்த வண்ணாத்திப் பூச்சி நான் இருந்த பக்கமாய் வந்து தொலைத்தால் என்னைக் கண்டு நாய்க்குட்டி குலைக்க, நான் ‘விடுதலைப் புலிகளிடம்’ பிடிபட்டு விடுவேன். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இக்கட்டான நிலையில் இருந்தேன்….

1987 ஆம் ஆண்டு தை மாதம் 29 ஆம் நாள் செழியன் நாட்டை விட்டு வெளியேறினார்.

*

வானத்தைப் பிளந்த கதை

வாழும் தமிழ், சென்னை : டிசம்பர் 2010

பக்கங்கள் : 224

இந்திய விலை : 140 ரூபாய்கள்

Comments are closed.