ஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்

 

1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 16 ஆம் தேதியை  ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்ககைக்காக நேரடி நடவடிக்கை தின அறைகூவலின்படி அன்று வங்க முதலமைச்சராக இருந்த சுஹ்ராவர்த்தி விடுமுறை தினமாக அறிவித்தார். அதிகாரவர்க்கத்தினர் துணையிருக்க முஸ்லீம்கள் சூறையாடலில் ஈடுபடத்துவங்கினர் தாமதமாக நிலையை உணரந்த சீக்கியர்களும் இந்துக்களும் எதிர் சூறையாடலில இறங்கினர். பரஸ்பரம் எதிர்ப்பட்ட பெண்களை அனைவருமே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள். நதியில் பிணங்கள் மிதந்தன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டாரக்ள.

கலவரத்தில் கொல்லப்பட்ட பெரும்பான்மை மக்கள் ஏழை எளிய மக்கள்.  இந்திய சரித்திரத்தின் போக்கில் மிகப்பெரும் மாறுதலையும் இரத்தக் களறியையும் கொண்டு வந்ததில் தீராத பகைமையை மதங்களுக்கிடையில் விதைத்ததில் இச்சம்பவம் முக்கிய இடம் பெற்றதாகியது இந்தச் சம்பவங்களை ஆதார இடமாகக் கொண்டு காந்தியைக் கொல்வதற்கான நியாயங்கள் அன்றைய சூழலில் இருந்ததா என்று விசாரித்துப் பார்த்திருக்கும் படம் ஹே ராம். ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல் நியாயம் படத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் மிகுந்த உணர்ச்சிவசமான பிரச்சினையான பாலியல் பலாத்காரம் விஸ்தாரமான காடசியமைப்புக்களுடன் கதாநாயகன் காந்தியைக் கொல்லப் புறப்புடுவதற்கான அழுத்தமான உளவியல் நியாயமாக படத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.மானம் என்பது அவளது கற்பில் பூட்டப்பட்டிருக்கும் இந்திய மனத்தில் கதாநாயகனுக்கெதிரான நிதானமான யோசனையை எவரும் மேற்கொள்ள முடியாது செய்து விடுகிறது. இன்னும் செந்தூரம் தீட்டிய இந்து மதத் தலைவர் லால் அத்வானி பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என வெளிப்படையாகப் பேசியிருப்பதையும் இங்கு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.

இந்து முஸ்லீம் பிரச்சினை குறித்து இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து நிறையப்படங்கள் வந்திருக்கிறது. கோவிந்த் நிஹ்லானியின் தமஸ்(1987), ஸியாம் பென்கலின் மம்மோ(1994), தீபா மேத்தாவின் எர்த்(1998), குஷ்வந்த் சிங்கின் டிரெயின் டு பாகிஸ்தான்(1998), எம்.எஸ்.ஸத்யூவின் கரம் ஹாவா(1973) போன்றவை இந்திய பாகிஸ்தான் பிரிவினை அதைத் தொடர்ந்த கலவரம் வன்முறை மானுட சேதங்கள் எனச் சொல்லிச் சென்றிருக்கிறது. மணிரத்தினத்தினுடைய பம்பாய்(1995) பாபர்மஜீத் பிரச்சினை அதைத் தொடர்ந்த வன்முறை என எடுத்துக் காட்டியிருக்கிறது. கமல்ஹாஸனுடைய ஹே ராம் இதே பின்னணியில் தான் நாற்பதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையில் நின்று சமகால உணர்வுடன் கடந்த காலத்தைப் பார்த்திருக்கிறது.

எதிர்காலத்தை மிகுந்த ஆராய்ச்சி உணர்வுடன் பார்த்திருப்பதாகத் தோற்றம் தரும் இப்படம்- பாதி வரலாறும் மீதிக் கதையுமான – இப்படம்  எதிர்காலத்தில் இந்து முஸ்லீம் இணக்கத்திற்கான தடங்களை திரைவெளிக்குள் விட்டுச் சென்றிருக்கிறதா எனில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல் நியாயங்கள் பல்வேறு பாத்திரங்களின் வழி, உரையாடல்களின் வழி, 210 நிமிடப்படத்தில் 180 நிமிடநேரத்தின் வழி, சம்பவங்களுடன், உரையாட்லகளுடன்  உணர்ச்சிவசமான காட்சியமைப்புக்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகனின் மனமாற்றம் மிகுந்த அகவய மௌனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.  அழுத்தமான காட்சியமைப்புக்களோ எதிர் விவாதங்களோ படத்தில் இல்லை.

கதாநாயகனின் தொடக்க வன்முறை உளவியலுக்கும் இறுதிப் பரிணாமத்திற்கும் இடையில் தர்க்கபூர்வமான உறவு படத்தின் காட்சியமைப்புக்களில் இல்லை. கதாநாயகனின் கொலையுணர்வுக்கான காரணங்கள் இலட்சியமயப்படுத்தப்பட்ட அளவில் உணர்ச்சிவசமாக காட்சிமயப்பட்ட அளவில் கதாநாயகனின் மனமாற்றம் காட்சி வயப்படுத்தப்படவோ இலட்சிய மயப்படுத்தப்படவோ இல்லை.

காட்சி தொடங்குபோது சகேதராமன் தனது இறுதி நிமிஷங்களுக்குப் போராடுவது தெரிகிறது. டாக்டர் முன்னுவும் இளய ராமும் அந்த முதியவரை காப்பாற்றப் போராடுகிறார்கள். சகேதராமனும் அம்ஜத்தும் நண்பர்கள். பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கீழ் அகழ்வாராய்ச்சியாளர்களாகப் பணியாற்றும் நண்பர்கள். சகேதராமன் வைஷ்ணவ பிராமணன். அம்ஜத்கான் முஸ்லீம். மெகாஞ்சதாரோ ஆகழ்வாய்வுகளில் ஈடபட்டிருக்கும் அவர்கள் இந்து முஸ்லீம் கலவரம் தோன்றும் அபாயத்தைத் தொடர்ந்து அந்தத்திட்டம் கைவிடப்படடு இருவரும் மேலேறிவருகிறார்கள்.  சகேதராமன் கல்கத்தாவுக்கு வருகிறான்.

அன்று 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி.  ஜின்னாவின் வேண்டுகொளை ஒட்டி அப்போதைய கல்கத்தா கவர்னர் சுஹ்ராவர்த்தி பொது விடுமுறை அறிவிக்கிறார். தெருக்களில் கலவரத்தின் சாயல் தெரிகிறது. சுகேதராமன் வீடு வருகிறான். வீட்டுக் கதவைத் தட்டுகிறான். அவனது காதலி, நீட்டிய துப்பாக்கியுடன் வரவேற்கிறாள். தனது வங்கக்காதலியும் மனைவியுமான அபர்ணாவோடு கலவியில் ஈடுபடுகிறான். தாலிகட்டுகிறான். சிவப்பு மையில் பொட்டு வைக்கிறான். காதலும் காமமும் பொங்கிப் பிரவகிக்கின்றன.

பசிக்கிறது. வெளியில் போய்விட்டு சீக்கிரமே வருகிறேன் என்று மோட்டார் சைக்கிளில் கிளம்புகிறான் ராம்.  கல்கத்தா தெருக்களில் ஒரு சீக்கியப்பெண்ணை முஸ்லீம்கள் துரத்திவருவதைக் பார்க்கிறான். அந்தப் பெண்ணை மீட்டு வீட்டில் ஒப்படைக்கிறான. காவல் துறை ஆணையாளரிடம் செய்தியைச் சொல்ல அவர் பொறுப்பேற்க மறுக்கிறார்.  மகாத்மா காந்தியிடம் கம்ப்ளெய்னட் செய் என்கிறார் அதிகாரி. அவசரமாக வீடு வரும் சகேதராமன் அந்தக் கட்டிடத்தில் பலர் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறான். கலவரத்துடன் வீட்டுக்குள் நுழைபவனை அங்கு அபர்ணாவை பலாத்காரப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தாக்குகிறார்கள்.  பலாத்காரப்படுத்தப்பட்டு அபர்ணா கொலை செய்யப்படுகிறாள். போலீஸ் சைரன் கேட்கிறது. துப்பாக்கியை எடுக்கும் ராம் தறிகொண்டு கல்கத்தா நகரத்தில் திரிகிறான். கலவரம் பரவிக் கொண்டிருக்கிறது.

முஸ்லீம்கள் பெண்கள் குழந்தைகள் என வாளால் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். சீக்கியர்கள் தீவிரமாகக் கலகத்தில் ஈடுபடுகிறார்கள். கல்கத்தா நகரத்தின் கலவரங்களிடையில் இந்துத் தீவிரவாதி அபயங்கரை சந்திக்கிறான் ராம். அனைத்துக்கும் காரணம் காந்திதான் என அவன் குற்றம் சாட்டுகிறான். ராம் மன்னார்குடி திரும்புகிறான். மாமா பாஷ்யமும் வசந்தா மாமியும் வற்புறத்த மைதிலியை மணந்து கொள்கிறான். ராம் திரும்பவும் கல்கத்தா வருகிறான். காந்தியை எதிர்த்து கோஷங்களுடன் ஊர்வலம் போகிறவர்களொடு அவனும் செல்கிறான். காந்தி சொல்ல சுஹ்ராவர்த்தி நடந்த கொலைகளுக்குத் தான் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருகிறான். கூட்டம் காந்தியை வாழ்த்தியபடி நகர்கிறது.

மறுபடியும் ராம் அபயங்கரை அங்கே சந்திக்கிறான். காந்தியின் மீதான மறுபடியுமான விமர்சனம் வருகிறது.  இந்திய சுதந்திரம் பற்றிய விமர்சனம் வருகிறது. மனைவியுடன் பம்பாய் வந்து சேரும் சகேதராமனை பம்பாய் விமான நிலையத்தில் வரவேற்கும் அபயங்கர் அவர்களை மகாராஷ்ட்டிர மன்னரின் வீருந்தினராக அழைத்துச் செல்கிறான். இடையில் தனது அகழ்வாராய்ச்சி சிநேகிதன் லால்வானியின் குடும்பம் கலவரத்தில் கொலையுண்ட செய்தியை அறிகிறான். அரண்மனையில் கொண்டாட்டங்கள் நடக்க ஆயுதக்கிடங்குக்குப் போகும் மன்னரும் அபயங்கரும் சகேதராமனும் பிறர் சூழு நிற்கிறார்கள்.

சுவரில் காளியின் படமும் இட்லரின் படமும் இருக்கிறது. காந்தியைக் கொல்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டுப்பார்க்க முதலாக அபயங்கரின் பெயரும் அடுத்ததாக சகேதரானின் பெயரும் வருகிறது. மரபு ரீதியில் வீர மரபைக் கொண்ட நமக்கு காந்தி இப்போது அகிம்சையைப் போதிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார் மன்னர். லாவணிப்பாடலும் வன்முறையும் கலவியும் கலந்த காட்சிகள். தொடர்ந்து நடக்கும் குதிரை விளையாட்டில் அபயங்கர் குதிரையின் கீழ் நசுங்கி செயலிழந்தவனாக ஆகிறான். மருத்துவ மனையில் தனியே சந்திக்கும் சகேதராமனிடம் காந்தியைக் கொல்ல சத்தியம் வாங்குகிறான் அபயங்கர். பந்தம் பாசத்தை விட லட்சியம் முக்கியம் என்கிறான் அவன்.

வீடு திரும்பும் சகேதராமன் காந்தியைக் கொல்லும் முன் திட்டங்களில் ஈடுபடுகிறான்.  மனைவிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு காசி சென்று புனிதக் குளியல் முடித்து சகேதராமன் டெல்லி வருகிறான். டெல்லியில் நண்பன் அம்ஜத்தைச் சந்திக்கிறான்.  அம்ஜத் ராமை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ராம் அம்ஜத்தை இந்துக்களிடமிருந்து காப்பாற்றுகிறான். தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச்சமரில் அம்ஜத் கொல்லப்படுகிறான்.

நிறைய அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை ராம் பார்க்கிறான். இந்த வரைமுறையற்ற கொலைகளைப் பார்க்கும் ராம் காந்தியைக் கொல்லும் தனது எண்ணத்தைக் கைவிட்டு காந்தியிடம் மன்னிப்புக் கேட்கப் போகும் தருணத்தில் கோட்சேவினால் காந்தி கொல்லப்படுகிறார். காந்தியைக்  கொன்றது நல்ல வேளை முஸ்லீம் அல்ல இந்துதான் என மவுண்ட்பேட்டன் நேருவிடம் சொல்வதை அறைக்கு வெளியிலிருக்கும் சகேதராமன் கேட்கிறான்.

மறுபடியும் முதல் காட்சி வருகிறது.சமகால இந்து முஸ்லீம் கலவரத்தினிடையில் முதியவர் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாமல் இடைவழியிலேயே சகேதராமன் உயிர் துறக்கிறார்.  காந்தியின் பேரன் துஷார்காந்தியும் சகேதராமனின் மகன் இளையராம் இருவரும் சகேதராமன் அறையில் நிற்கிறார்கள். சகேதராமனின் துப்பாக்கியையும் சகேதராமன் எடுத்துப் பாதுகாத்த காந்தியடிகளின் மிதியடிகளையும் அவரது பேரனிடம் இளய ராம் தருக்கிறான். படம் முடிகிறது.

அரசியல் ரீதியில் அதிகமான சம்பவங்களற்ற கதை. காந்தியைக் கொல்வது பற்றிய இந்து தரப்பு வாதங்கள் மட்டுமே அதிகம் அடங்கிய கதை. அதிகமாக ஒரு தனிநபரின் உளவியல் எவ்வாறாக வளர்ச்சியுற்று ஒரு அரசியல் கொலையாக வரக்கூடும் என்கிற பின்னணி இந்தக் கதையின் மிக முக்கியமான விஷயம் சகேதராமனுக்கு எந்தச் சித்தாந்த அரசியல் பின்புலமும் கடப்பாட்டுடன் இல்லை என்பதுதான். ஆனால், காந்தியைக் கொல்ல முடிவெடுத்து அதைச் செயல்படுத்திய கோட்சேவுக்கு மிகப்பலமான அரசியல் கருத்தியல் இயக்கப் பின்னணி இருந்திருக்கிறது. தனிநபர் உத்வேகத்தினால் உந்தப்பட்டதல்ல காந்தியின் கொலை.  அது அரசியல் ரீதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசியல் படுகொலையாகும். அரசியல் தார்மீகத்தன்மையை அந்தக் கொலைக்கு வழங்குவதும் ஒரு வாழ்க்கைப் பார்வையாக இன்றளவும் அந்தக் கொலை செய்தவனின் தீரத்தைக் கொண்டாடுவதும்தான்  நடந்து வருகிறது.

கமல்ஹாஸனுடைய ஹே ராம் பல்வேறு வகைகளில் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்று துணிந்து சொல்லலாம். நீண்ட பயணத்தில் கொஞ்சம் நின்று நிதானித்து யோசித்துப் பார்க்க ஒரு மைல் கல்.  சிலிர்த்துக் கொள்ளத் தொடங்கினால், விஷமத்துடன் திரும்பிப் பார்த்து அபத்தங்களையும் சுட்டிக் காட்டி கிரகித்துக் கொள்ள வேண்டிய மைல்கல். உலக சினிமாவில் பிரம்மாண்டமானதும் உலகமயமாதல் போக்கில் நீக்கமற நிறைந்திருப்பதுமான ஹாலிவுட் சினிமாவுடன் ஒப்பு நோக்கி மைல்கல் எனச் சொல்லத்தக்க படம். படத் தொகுப்பு, இசைநேர்த்தி, காலஉணர்வு, உள்வெளி அரங்க அமைப்பு, ஒப்பனை, படக்கரு ஆராய்ச்சி, நடிகர் தேர்வு, திரைக்கதை அமைப்பு, திரைக்கதையைப் புத்தகமாக்கல், விளம்பர வியாபார உத்தி என அனைத்தையும் தொழில் நேர்த்தியுடனும் தொழில் நுட்ப அடிப்படையிலும் சாதித்திருக்கும் படம் ஹே ராம்.

இந்திய தேசிய சினிமா என்பதை கருத் தேர்வு அடிப்படையிலும் நடிகர் நடிகையர் தேர்வு எனும் அடிப்படையிலும் சாதித்திருக்கும் படம்.  பிராமணர்களைப் பற்றிய படத்திற்கு முழுக்கவும் பிராந்தியத்திற்குப் பொருத்தமான பிராமண நடிகர்களையே தேர்ந்திருக்கும் பொருத்தம். இந்தியன், பம்பாய் போன்ற வியாபாரமயமான இந்திய தேசிய சினிமா என்பதைப் பார்க்க கதைக் கருவுக்கான நேர்மையுடன் அசலான இந்திய தேசிய சினிமாவை விழைந்திருக்கும் படம் ஹே ராம்.

படத்தின் மிக மிக முக்கியமான அரசியல் கருத்தியல் முக்கியத்துவம் கொண்ட காட்சியொன்று நான் படித்த எந்த விமர்சனத்திலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாகவும் தமிழ் சினிமாப் பார்வையாளனின் சினிமாப் பார்வைப் பயிற்சி குறித்து அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. சகேதராமன் – தமிழ் சினிமா கதாநாயகன் கமல்ஹாஸன் – வீசியடிக்கும் காற்றை எதிர்த்து தினவுகொண்ட தோள்களுடன் பூணூலுடன், செந்தூரத்துடன் புஜங்கள் புடைக்க உணர்ச்சிவசமான நடனத்தின் அசைவுடன் காந்தியைக் குறிவைத்துச் சுடப்பழகும் காட்சி அது. இன்றளவும் இந்துமதவாதக் கல்வியமைப்புக்களிலும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்களிலும் செயல்படுத்தப்படும் உடற்கல்வி அணிவகுப்பு பயிற்சி போன்றவற்றுடன் ஒப்பு நோக்கத்தக்க காட்சி அது. பாப்ரி மஜீத்தை உடைப்பதற்கு முன் இதை விடவும் வீராவேசமான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் இக்காட்சி மிகுந்த அழகியல் தன்மையுடன் இலட்சியப்படுத்தப்பட்டிருப்பதும் விளம்பரங்களில் அதிகம் பாவிக்கப்பட்ட பிம்பமாகி இருப்பதும் காட்சிக் கலாச்சாரத்தின் அரசியலை வலியுறுத்துபவரக்ளுக்கு முக்கியமாக அவதானிக்கத்தக்க பிரச்சினையாகும்.

ஹே ராம் படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழகப் பத்திரிக்கைகளில் வெளியான இரண்டு மேற்கோள்கiளாகத் தரவிரும்புகிறேன்.  கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை தேவி தியேட்டரில் நடைபெற்ற பிரீமியர் ஷேர்வில் கமல்ஹாஸனின் உரையிலிருந்து ஒரு பகுதி:

இந்து முஸ்லீம் வேற்றுமையை எடுத்துக் காட்டி ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற படம் ஹே ராம்” என்றார் (கமல்ஹாஸன்). அடுத்து அவர் பேசிய பேச்சில் ஒரு சிறிய ஜொர்க்கை அப்போது பலர் கவனிக்கவில்லை. “இந்தியா எனது நாடு என்கிற உணர்ச்சி முஸ்லிம்களுக்கு இருக்கிறது” என்றவருக்கு, பா.ஜ.க.கூட்டணி ஞாபகம் வந்திருக்க வேண்டும். “இருக்கிறதோ இல்லையோ இருக்கிறது என்கிற வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் அவசரமாக (குமுதம் 2.3.2000).

காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் சாகவாசமான ரசனை நிறைந்த சுவாரசியமான நேர்முகத்திலிருந்து ஒரு பகுதி :

படத்தில் கமல்ஹாஸன் நாதுராம் செய்தது சரியா தவறா என்கிற வாதங்களுக்குப் போகாமல் காந்தி பிரிவினைக்குத் துணை போனாரா இலலையா என்பதைத் தெளிவான வசனங்களுடன் சொல்ல வந்திருப்பது நல்ல ஆரோக்கியம் (ஜூனியர் விகடன்:கோபால் கோட்ஷே நேர்முகம் :12.3.2000)

படத்தில்  பலாத்காரத்தை மையப்படுத்தியதால் இந்துத்துவாதிகளாலும் இந்திய சநாதனவாதிகளாலும் இந்தக்காட்சிகளை முகாந்தரமாக வைத்து கற்பு பற்றியதாக கற்பழிப்புக்குப் பழிவாங்கும் படமாக சர்வசாதாரணமாக இதைச் சித்திரித்து விடமுடிகிறது. இரத்தமும் கத்தியும் முத்தமும் எவ்வளவு உணர்ச்சிவசமான முடிவுகளை உருவாக்குகிறது பாருங்கள் :

தேசத்தந்தை பற்றி இன்னொரு கருத்து இருக்கிறது. அவர் காட்டிய அசாதரணமான சகிப்புத் தன்மைக்கு இந்துக்கள் கொடுத்த உயிர்ப்பலியும் இந்துச் சகோதரிகள் இழந்த மானமும் அளவிட் முடியாதது. அந்தக் குமறல்தான் கோட்ஸே வடிவில் வெளிப்பட்டது. நவகாளி படுகொலை..இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்காள முதல்வராக இருந்த சுஹராவர்த்தி; என்ற இஸ்லாமியர் சட்டத்தின் துணையோடு இந்துக்களை வேட்டையாடிக் கொன்ற கொடுரங்களையும் இந்துப் பெண்களின் கற்பு கத்தி முனையில் சூறையாடப்பட்ட படுபாதகத்தையும் கமல் படமாக்கிக் காட்டியிருக்கிறவிதம் ஆயிரம் புத்தகங்களால் உருவாக்கமுடியாத உணர்வுக் கொதிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய இனக்கொடுமையின் திரைப்பதிவு என்றுகூடச் சொல்லலாம். இந்துக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே எத்தகைய மாபாதகக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு துளி ரத்தத்திலும் பாய்ச்சி இருக்கிறது ஹே ராம். இந்துக்களின் எழுச்சிக்கு திரைத்துறையில் போடப்பட்ட முதல்படி என்ற ஒன்றுக்காகவேணும் ஹே ராமை வாழ்த்துவது ஒவ்வொரு இந்துவின் கடமை ( சிறப்புப் பார்வை : இதயம் பேசுகிறது: 27.2.2000)

படம் முன் பகுதிப்பாதிக்கும் பின் பகுதிப்பாதிக்கும் இடையில் தர்க்கமற்றுத் தவிப்பதை பின்பகுதி யதார்த்தம் தவிர்;ந்ந சினிமாத்தனமாக ஆனதே என்று கோட்சேவின் சகோதரர் அவர் பாணியில் குறிப்பிடுகிறார். இன்னும் இந்துப் பெண்களின் மீதான வன்முறை பற்றிய பிற பகுதி இந்தியர்களின் பொறுப்பினர்வின் ஒரு பகுதியாகத்ததான் தமிழகத்திலிருந்து இந்தப்படம் வநதிருப்பதாகவும் அவர் புரிந்து கொள்கிறார். பெரியார் தோன்றிய தமிழகத்தில் முதல் நாள் கலைஞர் கருணாநிதி ஆர்.எஸ்.எஸ்.கலாச்சார இயக்கம்தான் என்றதையும் மறுநாள் மறுத்ததையும் ஞாபகம் கொள்ள முடியுமானால் இன்று பி.ஜே.பி தமிழகத்தில் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதை உணரமுடியமானால் இக்கண்ணோட்டத்திலீpருந்து கோட்சே ஏன் ஹே ராமை இப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதையும் நாம் அவதானிக்க முடியும். கோட்சே தனது ஜூனயர் விகடன் பேட்டியில் தனது தமிழகக் கனவு குறித்து இவ்வாறு சொல்கிறார் :

ஹே ராம் பட விமர்சனம் மூலம் தமிழ் வாசகர்களின் வீடுகளுக்கு ஜூனியர் விகடன் என்னை அழைத்துப் போக என்னிடம் சம்மதம் கேட்டது. கிட்டத்தட்ட எனது தமிழகக் கனவு நிறைவேறிவிட்ட அளவுக்கான சம்மதத்துடன் இதற்கு சம்மதித்திருக்கிறேன். முஸ்லீம்கள் இந்துப் பெண்களைக் குறிவைத்துச் சூறையாட, இந்துக்கள் முஸ்லீம் கும்பல்களை வேறோடு அறுக்க ஆரம்பித்தார்கள். பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெங்காலிகளும் பஞ்சாபிகளும்தான் அதனால் அதன் அடுத்த கட்டப் போராட்டங்களை இந்த இரு மாநிலத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள் என அன்றைய தினத்தில் எந்த இந்தியனும் நினைக்கவில்லை. மாநிலவாரியாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினார்கள். அந்த எதிர்ப்புகளையெல்லாம் மாநிலவாரியாகப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்திலிருந்தும் கூட வாழ்க்கையைத் தொலைத்தவன் பிரிவினையை எதிர்க்க வருவான் எனத் தமிழக அய்யங்காராக கமல்ஹாஸன் தன்னை சாகேதராமனாகக் காட்டிக் கொண்டது நல்ல சினிமர் மூளை. படத்தின் முதல் பாதியில் காந்தியைப் பழிவாங்கத் தேவையான அனைத்துக் காரணகாரியங்களையும் ரசிகர்களின் முன் வைத்துவிடும் கமல்ஹாஸன். பிற்பகுதியில் அத்தனையையும் உடைத்துவிட்ட பக்காவான சினிமாவுக்குள் போய் மாட்டிக் கொள்கிறார். இரண்டாம் பகுதியிலும் முதற்பகுதியில் சொன்ன யதார்த்தத்தோடு அவர் முன்னேறியிருந்தால் இந்தப்படம் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் மிக கம்மி என்பது மட்டும் நிஜம் (கோபால் கோட்ஷே நேர்முகம் : ஜூனியர் விகடன் : 12.4.2000)

படம் பொதுவாகப் புரிபடுவதில் நிறையச் சிரமங்கள் இருப்பதாக அநேகமாக அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைளின் விமர்சகர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். எல்லா பாஷையையும் கலந்து பேசுவது புரிபடாமைக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், அது மட்டுமே காரணம் அல்ல என்பதைப் படத்தை ஆழ்ந்து பார்கிக்கிறவன் புரிந்து கொள்ள முடியும். புரிபடாமை குறித்து ஒரு விமர்சகரின் அபிப்ராயம் இவ்வாறாகச் சொல்கிறது :

நம்ம மரமண்டைக்கும் முழசா புரியலை. ஆனாலும் வூட்டுக்கு வந்நதப்புறமும் கமல்ஹாஸன் ஏதோ நல்ல விஷயம் சொல்லியிருக்கிறாருப்பான்னு மனசு சொல்லிக்கிட்டேயிருக்கு. மக்களுக்கு அவசியமான விஷயத்தை மக்களுக்குப் புரியாத விதத்திலே சொன்னா ஜனங்க எப்படி சினிமாக் கொட்டகைக்கு வந்து பார்ப்பாங்க? (நக்கீரன் : 25.2.2000 : லெனின்)

இன்னும் மிக முக்கியமாக எந்த படைப்பிலும் அடிப்படைப் பாததிரத் தேர்வும் கதைநிகழும் காலம் குறித்த தேர்வும் அடிப்படை சம்பவங்களின் தேர்வும் படைப்பாளியிடம்தான் இருக்கிறது. இந்தத் தேர்வு எழுத்தாளனின் சினிமாக்காரனின் பிரக்ஞைபூர்வமான தேர்வு. இந்தத் தேர்வின் அடிப்படையில் தான் சம்பவங்கள் வளரச்சியுறும். இந்தச்சம்பவங்களுக்கு ஏற்பவே கதாபாத்திரங்களும் பிற பாத்திரங்களோடு எதிர்வினை செய்யும். அவ்வகையில், பாலியல் பலாத்காரம், பிராமணன்-இஸ்லாமிய நட்பு, கல்கத்தா கலவரங்கள் எனும் குறிப்பிட்ட சம்பவத் தொகுப்பு – அதைக் காந்தியின் கொலையுடன் தொடர்புபடுத்துவது எனும் கதைத்தர்க்கம் தவிர்க்க இயலாமல் இந்துத்துவச்சார்பு நிலை நோக்கித்தான் சகேதராமனை இட்டுச் செல்லும். ஆகவேதான் இவனில் நேர்கிற மனமாற்றம் என்பது இட்டுக் கட்டியதாக படத்தில் ஒட்டாமல் நிற்கிறது.  படத்தின் கதைத் தேர்விலும் கட்டமைப்பிலும் இருக்கிற இந்த அடிப்படையிலான அதர்க்க நிலையை மருதையன் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

வசனங்கள் காட்சிப்படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து இந்தப்படம் இந்து மதவெறியை ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது என்று முடிவுக்கு வருவதைவிட படம் ஏன் உணர்ச்சிபூர்வமாக இல்லை என்று கேள்விக்கு விடைதேடுவதன் மூலம் இப்படத்தின் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும். பிரிவினை என்னும் ரத்தம் தோய்ந்த திரைச்சீலையின் முன்னால் சாகேதராமனின் கதை நிகழ்த்தப்படுகிறதா அல்லது சாகேதராமனின் கதையை நிகழ்த்துவதற்குரிய வண்ணமுரணாக வெறும் சிவப்புத் திரைச்சீலையாக அது தொங்கவிடப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. பிரிவினைக்கால மதவெறியின் வரலாற்றுப் படிப்பினையைச் சொல்வதற்கு எத்தகைய மனிதனை வகைமாதிரியாக கதாநாயகனாகத் தெரிவு செய்யவேண்டும்? 

பிரிக்கப்பட்ட பஞ்சாபின் ஒரு கிராமம் பிளக்கப்பட்ட வங்காளத்தின் ஒரு தெரு அதன் உண்மையான மனிதர்கள்-இவர்களில் ஒருவர் கதாநாயகனாக்கப்பட்டிருந்தால் அல்லது இவர்களின் மத்தியில் சாகேதராமன் வாழ நேர்ந்திருந்தால் அபயங்கரின் உபதேசம் இல்லாமலேயே முஸ்லீம்களைக் கொன்ற இந்துக்களை காந்தியின் உபதேசம் இல்லாமலேயே ஒற்றுமையாய் வாழ்ந்த மக்களை அவன் கண்டிருக்கமுடியும். காந்தியை கோட்ஷே சுட்டது வரலாறல்ல!வரலாற்றில் ஒரு சம்பவம். அவ்வளவுதான். கோட்சே இல்லாவிட்டால் அவனுடைய குருநாதன் நீட்ஷே சுட்டிருப்பான். ஆனால் அந்தச் சம்பவத்திற்கு இட்டுச்சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சிப் போக்கு இருக்கிறதே- அது தான் வரலாறு. சாகேதராமனின் கதை அந்த வரலாற்றைப் பிரதிபலிக்கவில்லை( மருதையன் : புதிய கலாச்சாரம் : மார்ச் 2000) 

முஸ்லீம்கள் தொடர்பாகவும் இந்து மதவெறியர்களின் கொலை வெறியைச் சொல்வது தொடர்பாகவும் கமல்ஹாஸனுக்குள் இருந்த தயக்கம் அவரது உரையில் மட்டுமல்ல படத்தின் திரைக்கதையிலும் அவரது காட்சி அமைப்புக்களிலும் இருக்கிறது. காந்தி பிரிவினைக்குத் துணைபோனார் என்கிற விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முடிந்ந கமல்ஹாஸனுக்கு கோட்ஷேவின் கொலைவெறியைக் கருத்தியல் ரீதியில் விசாரிக்கும் தளத்துக்குப் போகமுடியவில்லை.  கோபல் கோட்ஷே படத்தை மிகத்தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார். படம் முழுதாக விளங்காததற்கான காரணம் கமல்ஹாஸனில் உள்ள தயக்கம் படக்கதையின் தயக்கமாகி படத்தின் காட்சியமைப்புக்களிலும் சமநிலையிலும் குழப்பத்தைக் கொண்டிருப்பதனால்தான். கதாநாயகனின் மனமாற்றத்திற்கான தர்க்கபூர்வமான காரணங்களையேர் காட்சி அமைப்புக்களையோ படம் கொண்டிருக்காததற்கான காரணமும் இதே கருத்தியல் தயக்கம் தான் என்பது கண்கூடு.

இப்படம் நிச்சயம் பேசப்படும். அதற்கான காரணம் இதனது கருத்தியல் தயக்கத்திற்கும் மௌனத்திற்கும் அது ஏற்படுத்தும் மயக்கத்திற்கும் அப்பாலானது. முதலில் சொன்னபடி ஹாலிவுட் சினிமாவின் ஆக்கப்பண்புகள் அத்தனையையும் இப்படம் சுவீகரித்திருக்கிறது. மேலாக ராணி முகர்ஜி, வசுந்தரா தேவி, கமல்ஹாஸனுக்கிடையிலான காதல் கலவிக் காட்சிகள் கவிதை மயமானவை.  இந்திய சினிமாவுக்கு புத்துயிர் தருபவை. ஆனால் இக்காட்சிகளுக்கும் ஹே ராம் எழுப்பும் கருத்தியல் மயக்கங்களுக்கும் சம்பந்தமேதுமில்லை. ஹே ராம் படம் மறுபடியும் இந்திய வரலாற்றை மீள் வாசிப்புச் செய்யக் கோரும் அதே வேளையில் எம்.எஸ். சத்யூவின் கரம் ஹாவா படத்தின் மேன்மையை மானுடத்தன்மையை  மறுபடியும் யோசிக்கத் தூண்டுகிறது.

Comments are closed.