அத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்

உலகளவிலான இடப்பெயர்வும் நகரமயமாதலும் உள்நாட்டு யுத்தங்களும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளும், இன-மத-சாதி வெறுப்பும், ஆணாதிக்க வெறியும், பாலுறவு வறுமையும், பெண் உடல் சந்தைப்படுத்தலும் என இன்ன பிற காரணங்களால் இன்று என்றுமில்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இதன் பகுதியாக குழந்தைகளின் மீதான அத்துமீறல்களும் வல்லுறவும் அவர்தம் உடலை அழித்துவிடும் நிலைக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அரியலூரில் தலித் சிறுமி நான்கு இந்து அடிப்படைவாத வெறியர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டுக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஐந்து சமூகவிரோதிகளால் ஓடும் பேருந்தில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்னையில் ஏழு வயதுக்குழந்தை கடத்தப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் கதுவாவில் 11 வயது முஸ்லீம் சிறுமி ஐந்து இந்;து அடிப்படைவாதிகளால் மதக் காரணத்திற்காக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

போஸ்னிய செர்பிய யுத்தத்தில், ஈராக் போரில், ஈழம்- காஷ்மீர் போன்ற யுத்த பூமிகளில் ஆக்கிரமிப்பு ராணுவத்தினால் பாரிய வல்லுறவுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்களின், அடிப்படைவாதிகளின் அரசியல் ஆயுதமாக வல்லுறவு என்பது வியட்நாம் யுத்தம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. வறுமை காரணமாக பெண்கள்-குழந்தைகள் கடத்தப்படுவதும் அவர்கள் முதலில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பிற்பாடு விலை மகளிராக உலகச் சந்தையில் விற்கப்படுவதும் உலகெங்கிலும் நடந்து வருகிறது.

வியட்நாம் யுத்தக் கொடுமைகளை ஒட்டியும், போஸ்னிய யுத்தத்தை ஒட்டியும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிதறியதை ஒட்டியும், வல்லுறவு – நீலப்படம்- பெண்கடத்தல் எனும் இந்தப் பிரச்சினைகளை உலகின் திரைப்படக் கலைஞர்கள் பேசத் துவங்கினர். பிரையன் டீ பார்மாவின் ‘காசுவாலிடிஸ் ஆப் வார்(1989)’, ஸ்ராடன் ஸ்பேசோ ஜெவிக்கின் ‘எ செர்பியன் மூவி(2010)’ போன்றன இத்தகைய திரைப்படங்கள். போலவே, உலகெங்கிலும் பெண்களின் மீது அதிகரித்து வரும் வல்லுறவுக் கொடுமையை இந்தியாவை முன்வைத்துச் சொன்ன ஆவணப்படமாக லெஸ்லி உதவினின் ‘இன்டியாஸ் டாட்டர்(2015)’ படம் இருக்கிறது.

இங்கு எனது கட்டுரைக்கான பரப்பைக் குழந்தைகளின் மீதான வல்லுறவுத் திரைப்படங்கள் என்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதாகவும் வரையறைப்படுத்திக் கொள்கிறேன். கஜேந்திர அஹிரே இயக்கிய மராத்திப் படமான ‘சைலன்ஸ்(2017)’, தேவசிஸ் முகிஜா இயக்கிய இந்திப் படமான ‘அஜ்ஜி(2017)’, பாலாஜி கே.குமார் இயக்கிய தமிழ்ப் படமான ‘விடியும் முன்(2014)’, சுஜாய் கோஷ் இயக்கிய இந்திப் படமான ‘கஹானி-2(2016)’, போன்றன இந்தியாவெங்கிலும் குழந்தைகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் வல்லுறவின் வேறுபட்ட பரிமாணங்களைக் குறிப்பிடுகின்றன.

‘கஹானி-2’ மற்றும் ‘சைலன்ஸ்’ என இரண்டு படங்களும் கூட்டுக் குடும்பங்களில் மிகவும் நெருங்கிய உறவுகள் என்று சொல்லப்படுபவர்களால் பெண்குழந்தைகளின் மீது அன்றாட வாழ்வு நிகழ்வுகள் போல எவ்வாறு வல்லுறவுகள் மிக இயல்பாக நிகழ்த்தப்படுகின்றன என்பதைப் பேசுகின்றன. ‘அஜ்ஜி’ மற்றும் ‘விடியும் முன்’ என இரு படங்கள் பெண் குழந்தைகளைக் கடத்துபவர்களும், பீடஃபைல் மனநிலையாளர்களும் எவ்வாறு அரசியல்வாதிகளுடனும் சமூகவிரோதிகளுடனும் இணைந்து குழந்தைகள் மீதான வல்லுறவு என்பதை ஒரு தொழிலாக மேற்கொள்கிறார்கள் என்பதனைச் சொல்கின்றன.

‘கஹானி-2’ திரைப்படம் வெற்றி பெற்ற அரசியல் திரில்லர் படமான ‘கஹானி-1’ படப்பாணியில் போலீஸ் கம் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. முதல் படத்தில் சாகசவாதியாகப் பாத்திரமேற்ற வித்யபாலன் இப்படத்திலும் ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்றும் சாகவாதப் பள்ளிக்கூடச் சிப்பந்தியாகப் பாத்திரமேற்கிறார். அவர் தனது இளம்பிரயாத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதால் அவரது திருமண வாழ்வும் உடலுறவும் வலிமிக்கதாகவும் மனப்பிறழ்வு கொண்டதாகவும் ஆகிறது. அவரால் திருமண பந்தத்திற்குள் இயல்பாக இருக்க முடிவதில்லை.

அவர் எழுத்தராக வேலைசெய்யும் பள்ளியில் தினமும் ஒரு பெண் குழந்தை வகுப்பில் தூங்கிவிடுகிறது. இதன் காரணத்தைக் கண்டுபிடிக்கச் சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் அவர் சிறுமியின் பாட்டியையும் மாமாவையும் சந்திக்கிறார். குழந்தை அவளிடத்தில் தனித்துச் சொல்வதை வைத்து இரவுகளில் குழந்தையைத் தூங்க விடாமல் அவளது மாமா வல்லுறவில் ஈடுபடுவதைத் தெரிந்து கொள்கிறாள். பாட்டி இதனை நம்புவதில்லை. குழந்தையை அங்கிருந்து மீட்கும் போராட்டத்தில் பாட்டி சந்தர்ப்பவசமாக இறந்துவிடுகிறார். காவல்துறையினருடனும் குழந்தையின் மாமாவுடனும் நடத்தும் போராட்டத்தைத் தொடர்ந்து, தனது முன்னாள் கணவரும, இன்றைய காவல்துறையாதிகாரியும்; ஆனவரின் உதவியுடன் பள்ளிக்கூட எழுத்தரான வித்யா பாலன் கால்கள் ஊனமுற்ற குழந்தையுடன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று விடுகிறார்.

‘சைலன்ஸ்’ அரிசி மண்டி வைத்திருக்கிற, தனது ஆண்மையமற்ற தன்மையை மறைப்பதற்காக தனது மண்டிக்கு வருகிற வறுமையில் வாடும் பெண்களை சாய்க்கிற ஒரு குறுமுதலாளியின் விகாரமான நடத்தைகளில் துவங்குகிறது. மண்டி முதலாளியாக நடித்திருப்பவர் ‘பன்றி’ பட இயக்குனர் நாகராஜ் மஞசுளே. அன்றாடம் இவரது சித்திரவதைக்கும் வன்முறைக்கும் மலடி எனும் வசவுக்கும் ஆளாகும் பெண்ணாக, இவரது மனைவியாக நடித்திருப்பவர் ‘வித் யூ விதவுட் யூ’ படத்தில் நாயகியாக நடித்த அஞ்சலி பாடீல்.

மண்டி முதலாளியின் சகோதரி இதய நோய்கொண்டவர். பஞ்சு மிட்டாய் விற்பவரை மணக்கும் அவர் இருபெண் குழந்தைகளைப் பிறப்பித்துவிட்டு நோயினால் மரணமுறுகிறார். முதல் பெண் துணை நடிகையாக மும்பை சென்ற விடுகிறார். மற்றொரு பெண் குழந்தைக்கு இப்போதூன் 11 வயது. அவள் பருவமெய்திவிட்டதால் மாமாவை வரச் செய்து கொஞ்ச நாட்கள் அத்தையுடன் இருக்கச் சொல்லி அவளை மாமாவுடன் அனுப்பி வைக்கிறார் தகப்பனார்.

மண்டிக்கு வரும் ஒரு பெண்ணிடம் பாலுறவுக்கு வலியுறுத்தும் மண்டி முதலாளி – சிறுமியின் மாமா – அப்பெண் அவனை வசவி மறுத்துவிடும் போது, அவமானமும் வெறியும் கொண்டு தன் சகோதரியின் மகளான 11 வயதுக் குழந்தையை, தன்னிடம் அடைக்கலமாகி வந்த குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகிறான். அன்று இரவில் குழந்தை தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதைச் சொன்னதையடுத்து அத்தை அவளை அடுத்து அறைக்கு அழைத்துச் சென்று குழந்தை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறாள்.

குழந்தை தனது தந்தையிடம் திரும்பிப் போக விரும்புகிறது. மாமன் திருப்பிக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறான். குழந்தை நொய்ந்து கிடக்கிறாள். தந்தையிடம் எதையும் அவளால் எதையும் பகிர்ந்து கொள்ள் முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. மும்பையிலிருந்து சகோதரி வந்து விஷயம் அறிந்து காவல்துறையில் புகார் செய்கிறார். தந்தை வெகுண்டு நியாயம் கேட்கப் போய் அடிப்பட்டுத் திரும்புகிறார். தான் கடன் கொடுத்த காசைத் திருப்பிக் கேட்டதால் தன்மீது இப்படிப் புகார் சொல்கிறார்கள் என்று காவல்துறையிலிருந்து தப்புகிறான் மண்டி முதலாளி. ஏதும் செய்ய முடியாத நிலையில் ஏங்கித் தவிக்கிறது ஏழைக் குடும்பம்.

சிறுமி பெரியவளாக வளர்ந்து விடுகிறாள். தனது தந்தையைப் பார்க்க வரும் அவளை அவர் அவளது அத்தையைச் சிறையில் சென்று பார்த்து வருமாறு கோருகிறார். அத்தை எவ்வாறு, எதற்காக சிறைக்குப் போனாள்? கர்ப்பம் தரிக்காத நிலைக்கு அவளே காரணம் எனச் சொல்லிக் கொண்டிருந்த கணவனிடம் தான் கர்ப்பந்தரித்திருப்பதைச் சொல்கிறாள் அத்தை. அந்தக் கர்ப்பத்திற்குத் தான் காரணமில்லை என்பதை அறிந்த அவன் அவள் மீது வன்முறையை ஏவுகிறான். முன்கூட்டியே அவன் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அவள் அவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்கிறாள். அத்தை சிறையிலிருந்து வரும்போது அவளது குழந்தையுடன் அவளைச் சந்திக்கிறாள் சிறுமியாக வல்லுறுவுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்ட இன்றைய பெண்.

‘விடியும் முன’ திரைப்படம் அதனது வேறுபட்ட கதைக்களனுக்காக, அதனைச் சொன்ன விதத்துக்காக தமிழ் சினிமாவில் குழந்தைகள் மீதான வல்லுறவைப் பேசிய முக்கியமான படம். இந்தப் படமும் ‘கஹானி-2’ போலவே ஒரு திரில்லர் படமாகவே உலுவாகியிருக்கிறது. ‘கஹானி-2’ படத்தின் சொல்முறையிலும் காட்சிகளிலும் காவல்துறை சேஷிங் பாதிப்படத்தை எடுத்துக் கொள்வது போல இந்தப் படத்திலும் குழந்தைகள் கடத்தலும் அந்தக் குழுவினது அன்றாட வன்முறை வாழ்வும் பாதிப்படத்தை எடுத்துக் கொள்கிறது. ‘கஹானி-2’ உடன் ஒப்பிடும்போது இந்தக் காட்சிகளும் கூட பெண் குழந்தைகளின் மீதான வேறுபட்ட வன்முறைகளைக் காட்சிப்படுத்துவது உருவாகியிருக்கிறது. பெண் குழந்தைகளைக் கடத்துவது இங்கு சிவகாசி தொழிற்சாலைக்குச் கூலி உழைப்புத் தொழிலாளிகளைச் சப்ளை செய்வதற்கு மட்டுமல்ல, பீடஃபைல்களுக்கும் அவர்களைச் சப்ளை செய்வதற்கும்தான் என்பதனைப் படம் சொல்கிறது.

‘சைலன்ஸ்’, ‘கஹானி-2’ போலவே ஃபீடபைல் மனநிலை என்பது எவ்வாறு குடும்பங்களில் உள்ளுறையாக இருந்து கொண்டிருக்கிறது என்பதனை ‘விடியும் முன்’ படமும் சொல்கிறது. சொந்தப் பெண்குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களை, அதனைக் கூட்டுக் கொண்டாட்டமாகச் செய்பவர்களை, இதற்கெனக் குழந்தைகளைத் தொழில்முறையில் சப்ளை செய்பவர்களை என இந்தக் கயமை குறித்த ஒரு சமூகச் சித்திரத்தை ‘விடியும் முன்’ படம் வைக்கிறது. பெண் பிறப்புறுப்பை பிளேடினால் சிதைப்பதும் தொடர்ந்து வல்லுறவு கொள்வதும் எனும் கொடும் சித்திரவதை நிகழ்வை பூடகமாகச் சொல்லிப் போகிறது ‘விடியும் முன்’ திரைப்படம். இந்தப் படத்தின் மிகப்பெரும் வலிமை விலை மகளிரின் தாய்மை உணர்வைக் கச்சிதமாக உணர்ந்து வாழ்ந்து காட்டிய பூஜாவினது பாத்திரப் படைப்பு.

‘அஜ்ஜி’ பாட்டியின் மனநிலையை மையப்படுத்திய படம். இந்த நான்கு படங்களுமே கதை சொல்லல் எனும் வகையில் பெண்மையப் படங்கள். ‘சைலன்சில்’ இது அத்தையின் கதை. சமவேளையில் இது 11 வயதுக் குழந்தையின் கதை. ‘கஹானி-2’ வில் இது பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஒரு பெண் எழுத்தரின் கதை. சமவேளையில் அங்கு படிக்கவரும் 10 வயதுச் சிறுமியின் கதை. ‘விடியும் முன்’ தாய்மையுணர்வு கொண்ட ஒரு விலை மாதின் கதை. சமவேளையில் அவளால் மீட்கப்பட்ட 12வயதுச் சிறுமியின் கதை. ‘அஜ்ஜி’ படத்தில் தனது பேத்தி மீது தாளாத பாசம் கொண்ட ஒரு பாட்டியின் கதை. சமவேளையில் 12 வயதுப் பேத்தியின் துயரக்கதை.

‘அஜ்ஜி’ படம் துவங்குகிறபோது சேரியில் வாழும் பாட்டி அவளது தையல் வாடிக்கையாளரான ஒரு விலைமாதுவுடன் தையல்துணி கொடுக்கப் போன அவளது பேததி இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவளைத் தேடிப் போகிறாள். சாக்கடைக் குழாயின் ஓரத்தில் உடலெங்கும் இரத்தக் காயத்துடன் சிறுமியை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

சிறுமியின் தகப்பன் 15 மணிநேரங்கள் விசைத்தறியில் வேலை செய்பவர். தாய் வெஜிடேரியன் சாதம் செய்து சைக்கிளில் சென்று விற்பனை செய்பவர். பாட்டி வீட்டில் இருந்தபடி துணிகள் தைத்து அந்தப் பகுதி விலைமாதருக்கும் பிற பெண்களுக்கும் தந்து சிறுகக் காசு சேர்ப்பவர். சிறுமி பள்ளிக் கூடம் போகிறவர். அன்றைய தினம் ஒரு விலைமாதின் தைக்கப்பட்ட ரவிக்கையைக் கொடுத்துவிட்டு தனது சிநேகிதி;யின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவரப் போனவள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சாக்கடையில் வீசப்படுகிறாள்.

வல்லுறவு செய்தவன் அந்தப் பகுதியில் பிரபலமான ஒரு அரசியல்வாதியின் செல்வந்த மகன். குடியும் வன்முறையும் வல்லுறவும் மட்டுமீறிய காமாந்தகார நடத்தைகளும் அவனது அன்றாட நிகழ்ச்சி நிரல். அவனோடு மோதினால் நம்மை அழித்துவிடுவான் என்கிறாள் விலைமாது. போலீஸ் வருகிறது. மருத்துவர் வந்து சிறுமியைச் சோதனை செய்து வல்லுறவு உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை வைத்து வல்லுறவாளனிடம் பேரம் பேசி முன்பைப் போலவே காசு கறந்துவிடத் திட்டம் போடுகிறான் போலீஸ்காரன்.

ஒரு புறம் வல்லுறவுக்கு உட்பட்ட சிறுமியின் கையறுநிலை. சிதைந்து இரத்தப் போக்குடன் தரையில் கிடக்கும் சிறுமிக்கு வைத்தியம் செய்ய வேண்டும். உள்ளுர் மருத்துவச்சியிடம் சென்று நாட்டு மருந்துகள் வாங்கி பேத்திக்குத் தருகிறாள் பாட்டி. மறுபுறம் இரவெல்லாம் தையல்துணி தைத்துவிட்டு பகலில் ஒரு இறைச்சி வெட்டும் முஸ்லீம் பெரியவரிடம் சென்று இரைச்சி வெட்டுவதைக் கற்றுக் கொண்டு ஒரு கத்தியையும் அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறாள். ஆட்டிலும் மாட்டிலும் குறியை விரையை வெட்டுவதைக் குறிப்பாகக் கற்றுக் கொள்கிறாள். தகப்பன் மெஷினில் கையைக் கொடுத்து துண்டித்துக் கொண்டு வந்து நிற்கிறான். தாய் சாப்பாட்டுக் கடையை நடத்த முடிவதில்லை. வறுமையின் கோரப்பிடியில் தவிக்கிறது குடும்பம்.

பாட்டி வல்லுறவாளனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவனைத் தொடர்கிறாள். துணிக் கடை ரப்பர் பொம்மையைக் கூடப் புணரும் அவனது உடல்வெறியைக் கண்ணுறுகிறாள். ஒரு இரவில் தனது தையல் வாடிக்கையாளரான விலைமாதிடம் சென்று விலைமாதைப் போலத் தானும் ஒப்பனை செய்து கொண்டு வல்லுறவாளனைத் தேடிப் போகிறாள். யாருமற்ற குறுகிய தெருவில் அவனிடம் ‘உன் குறியைச் சப்ப ஆசை. என் உடல் கொதிக்கிறது’ என்கிறாள். குடிவெறியில் ‘கிழவியே, உன் மீது எனக்கு ஆசை இல்லை’ என மறுத்துச் செல்கிறான் அவன். விடாது அவனைத் தொடர்ந்து அவனது குறியைக் கையினால் பிடிக்கிறாள் அஜ்ஜி. உணர்ச்சி வேகம் கொண்ட வல்லுறவாளன் அவளது தலையைத் தனது குறியில் அழுத்த, மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் அவனது குறியையும் விரைகளையும் தனியே அறுத்த எடுத்து விடுகிறாள் அஜ்ஜி.

குறி அறுந்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் அவன் உடல் ஓரிரு முறை துள்ளி அடங்குகிறது. தள்ளாடி விரைகளைத் தரையில் தேடி எடுத்துச் செல்லும் அஜ்ஜி வழக்கமாக வாஞ்சையுடன் தன்னைத் தொடரும் செல்ல நாய்க்குப் போட்டு அது தின்னத் துவங்குவதைப் பார்த்துவிட்டு நிம்மதியுடன் வீடு திரும்புகிறாள். வீட்டின் பரணில் தனது தாய்க்கும் தந்தைக்கும் இடையில படுத்துறங்கும் தனது பேத்தியைப் பார்த்துவிட்டு ஏணியிலிருந்து இறங்கி தனது தையல் மிஷினில் அமர்கிறாள் பாட்டி. படம் முடிகிறது. இந்திய சினிமாவில் எக்ஸ்ட்ரீம் சினிமா என இதனைச் சொல்லலாம்.

பெரும் அழிவுகள் கொண்ட போரும் வல்லுறவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்று அதிகரித்து வரும் நீலப்பட வியாபாரமும் குறித்த ‘எ செர்பியன் மூவி’ படம் போலவே ‘அஜ்ஜி’யும் அது எடுத்துக் கொண்ட பெண் குழந்தைகளின் மீதான வல்லுறவும் அதனது அடிப்படையான ஆண்மைய வெறிமனநிலையும் எனும் பிரச்சினையை மிக உக்கிரமாகத் தேர்ந்த திரை மொழியில் சொன்ன படமாக இருக்கிறது.

‘சைலன்ஸ்’, ‘கஹானி-2’, ‘விடியும் முன்’ படங்களோடு ஒப்பிட மிகுந்த படைப்புத்தன்மை கொண்ட, பிரச்சினை குறித்து ஆழ்ந்த சித்தரிப்புக் கொண்ட படம் என ‘அஜ்ஜி’ படத்தைச் சொல்ல முடியும். பூஞ்சையான பிஞசுப் பெண்ணுடல் வல்லுறவில் படும் வாதையும் இரத்தப் பெருக்கும் காட்சிகளாகவே இப்படத்தில் இங்கிதமான கோணங்களில் படமாக்கப்பட்;டிருக்கிறது. இந்தக் கொடும் வன்முறைக்குக் காரணமான ஆணின் ஆதிக்கவெறிக் குறி வெஞ்சினத்தில் அறுக்கப்படுவதும் காட்சிகளாகவே இருக்கின்றன.

ஆரவாரம் இல்லாது எந்தப் பரபரப்பும் இல்லாது அன்றாட வாழ்வின் வன்முறையும் மீட்சியும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் மிகப்பெரும் பலம் பெரும்பாலும் இரவுகளில் எடுக்கப்பட்ட சேரிக்காட்சிகள். அந்த மனிதர்களின் பாலான ஆழ்ந்த பரிவுடன் எடுக்கப்பட்ட படமாக ‘அஜ்ஜி’ இருக்கிறது.

Comments are closed.