மேற்குத் தொடர்ச்சி மலை

1

இந்திய சினிமாவில், தமிழ் அல்லாத மொழிகளில் மலைவாழ் மக்களது வாழ்வும், அவர்களது பாடுகளும், அவர்களது கிளர்ச்சிகளும், அவர்களுக்கு எதிரான நிலக்கிழார்கள்-காவல்துறை-அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் கூட்டணியின் ஒடுக்குமுறைகளும் பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன.

இந்திய இடதுசாரி சினிமாவின் பிதாமகனான மிருணாள் சென்னின் ‘மிருக்யா’(1976), இந்திய சமாந்தர சினிமாவின் முன்னோடி இயக்குனரான கோவிந்த் நிஹ்லானியின் ‘ஆக்ரோஷ்’(1980), மராத்திய இயக்குனரான கங்கன் விகாரி பரோட்டின் ‘லால் சலாம்’(2002), மலையாள இயக்குனரான மதுபாலின் ‘தலப்பாவு’(2008), மராத்திய இயக்குனரான அமித் வசுர்க்கரின் ‘நியூட்டன்’(2017) போன்ற படங்களை நாம் இவ்வாறு குறிப்பிடலாம்.

மிருனாள் சென்னின் ‘மிருக்யா’ பிரித்தானியக் காலனிய அதிகாரத்தின் கீழ் கிளர்ந்தெழுந்த மலைவாழ் மக்களின் எழுச்சி பற்றியது. நிஹ்லானியின் ‘ஆக்ரோஷ்’, கங்கன் விகாரி பரோட்டின் ‘லால் சலாம் ’ என இரு படங்களும் மலைவாழ் பெண்களின் மீதான காவல்துறை-நிலக்கிழார்-அதிகார வர்க்கக் கூட்டணியின் வல்லுறவு குறித்த திரைப்படங்கள். மதுபாலின் ‘தலப்பாவு’ கைதுசெய்யப்பட்;ட நிலையில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட வர்கீஸ் எனும் கேரள நக்சல் தலைவரின் வாழ்வு பற்றிய படம். அமித் வசூர்க்கரின் ‘நியூட்டன்’ துப்பாக்கி முனையில் தேர்தல்கள் நடத்தப்படும் சத்தீஷ்கார்-தண்டகாரன்யா பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வு பற்றியது.

இந்தப் படங்களில் சில பொதுத்தன்மைகள் உண்டு. விவசாயக் கூலிகளான இந்த மக்கள் தமக்கெனச் சொந்த நிலமும் தங்குமிடமும்; அற்றவர்கள். தங்களது உழைப்பின் மீதும் உடலின் மீதும் உரிமையற்றவர்கள். தமது நிலத்தின் களிவளங்களை கார்ப்பரேட்டின்-உலகவயமாதலின் விளைவான புதிய செல்வந்தர்களின் நலன்களுக்குப் பலி கொடுப்பவர்கள்.

பெண்கள் எப்போதும் கடத்தப்படவும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவும் ஆனவர்கள். சமயங்களில் கொல்லப்படவும் ஆனவர்கள். வட்டிக்குக்குக் கடன்கொடுப்போர், நிலக்கிழார்கள், அவர்களது இயல்பான நண்பர்களான காவல்துறையினர், அரச அதிகாரிகள், நீதித்துறையினர் போன்றவர்களால் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படுபவர்கள் இவர்கள்.
இவர்களில் இருந்து கிளர்தெழுபவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். அல்லவெனில், சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். சட்டவிரோதமாகச் சுட்டுக் கொல்லப்படுவார்கள். கூலியுயர்வு கேட்டால் வேலையின்றி பட்டினி கிடந்து சாகச் சபிக்கப்படுவார்கள். இவர்களுக்காகப் போராடுபவர்கள் கடுமையான வன்முறைக்கு ஆட்படுத்தப்படுவார்கள்.

இந்த மலைவாழ் மக்களின் எழுச்சிகளில் இருந்துதான் நக்சல்பாரி அரசியல் என்பது தோற்றம் பெறுகிறது.

வரலாற்று ரீதியில் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்றவை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பாடுகளையும் அவர்தம் அரசியல் போராட்டங்களையும் அவற்றில் உள்ள முரண்களையும்தான் ‘லால்சலாம்’, ‘தலப்பாவு’, ‘நியூட்டன்’ போன்ற படங்கள் பேசுகின்றன.
தமிழ் சினிமாவில் மலைவாழ் மக்களின் போராட்டம் பற்றி வந்த முதல் படமென கோமல் சுவாமிநாதனின் ‘ஒரு இந்தியக் கனவு’(1983) படத்தைச் சொல்லலாம். ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மக்களது வாழ்வு பற்றியது இப்படம். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதிகேட்டுப் போராடும் ஒரு ஆராய்ச்சி மாணவியின் வாழ்வாகக் கதை விரிகிறது. நகர்ப்புறத்தின் படித்த, அரசியல் பிரக்ஞை கொண்ட ஒரு பெண் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைக்குப் பேராடுவது பற்றியது கதைக்களம்.

நிஹ்லானியின் ‘ஆக்ரோஷ்’ படத்தை ஒத்த கதைக்கரு ‘ஒரு இந்தியக் கனவு’. ‘ஆக்ரோஷி’ல் ஆண் வழக்குரைஞர் போராட ‘ஒரு இந்தியக் கனவி’ல் ஒரு ஆராய்ச்சி மாணவி மலைவாழ் மக்களுக்காகப் போராடுகிறார்.

குறிப்பிட்ட ஆறு படங்களும் யதார்த்தவாதக் கதை சொல்லலில் ஆன படங்கள். ஜனரஞ்ஜக சாகச மரபை முற்றிலும் ஒதுக்கிய படங்கள். எழுபதுகளில் துவங்கி நாடெங்கிலும் உருவான மலைவாழ் மக்களின் எழுச்சிகளை, கிராமப்புறக் கூலி விவசாயிகளின் வர்க்கப் பிரக்ஞையைப் பேசிய படங்கள் இவை. மிருணாள் சென்னின் ‘மிருக்யா’(1974) துவங்கி அமித் வசுர்க்கரின் ‘நியூட்டன்’(2017) வரை அரைநூற்றாண்டு மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்தம் பாடுகளையும் அவர்தம் எழுச்சிகளையும் இந்தியச் சினிமா வெளியில் முன்வைத்த படங்களாக இப்படங்கள் இருக்கின்றன.

2

‘மேற்குத் தொடர்ச்சி மலை’(2017) படம் மலைவாழ் மக்கள் குறித்த இந்தியப் படங்களின் தொடர்ச்சியாக, தமிழில் ‘ஒரு இந்தியக் கனவி’னை அடுத்து வெளியாகிய படமாக இருக்கிறது. படத்தின் காலம், இடம் என்பது ஆண்டுத் துல்லியம் சார்ந்தது இல்லை. இயற்கை மற்றும் உடலுழைப்பை மையமாகக் கொண்ட விவசாயம் கார்ப்பரேட் விவசாயமாகவும், உற்பத்தி இயந்திரவயமாதலாகவும், அன்றாட வாழ்வினதும் அதிகார உறவுகளதும் நோக்கில் உலகவயமாதல் பண்புகள் நுழைதலுமான கருத்தியல் காலம், இடம்தான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் நிகழும் காலமும் இடமும்.

இந்தக் காலத்தின் இடத்தினதும் அரசியல்தான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் அரசியல்.

படம் பேசும் அரசியலை தொகுத்துக் கொள்வோம். ரங்கசாமி என்கிற ரங்குவின் இலட்சியம் மலைத் தோட்டத்தின் கூலியாக இருந்த தனது தந்தையின் கனவாக இருந்து முடியாமல் போன விவசாய நிலம் ஒன்றை வாங்குவது. இந்தத் திட்டம் நடைமுறையாகிற இடைக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சவரை சென்று வீPடு திரும்பும் ஓரு தபால்காரராக, செய்திகளைச் சுமந்து செல்பவராக, ஏலக்காய் மூட்டைகளை உரியவர்களிடம் சேர்க்கும் ஓரு சுமை தூக்கியாக அவர் தொழிலாற்றுகிறார்.

இது ஓரு பயணம். ஓரு நாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து அந்த மலைகளின் மனிதர்களையும் கிராமங்களையும் நாட்கணக்கில் அளந்து மீளும் ஓரு பயணம்.
இந்தப் பயணத்தில் அந்த மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களுக்குள் நிலவும் கோப தாபங்களும் அன்பும் தோழமையும் மரணமும் துயரும் வாஞ்சையும் சொல்லப்படுகிறது. அவர்தம் உழைப்பு சார்ந்த ஐதீகங்களும் தெய்வங்களும் விலங்கினங்களின் மீதான அவர்தம் சார்பும் பேரன்பும் பற்றிச் சொல்லப்படுகிறது. தொழிற்சங்க இயக்கம் பற்றிச் சொல்லப்படுகிறது. ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளரின் வாழ்வு பற்றி, அவர்களது குடியிருப்புகள் பற்றி, தொழிற்சங்கத்தின் ஒரேயொரு உறுப்பினரான கங்காணிக்கும் தொழிலாளருக்கும் அவர்தம் குழந்தைகளுக்குமான கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புழுங்கும் தொழிலாளி வர்க்க உறவு சொல்லப்படுகிறது.
இப்போது அந்த மக்களின் வாழ்வுக்குள், அவர்களது கலாச்சாரத்தினுள், துயரமும் கனவும் கொண்டாட்டங்களும் நிறைந்த அவர்களது கள்ளமற்ற உலகில் நுழைந்துவிடுகிறோம்.

படம் மூன்று அடுக்குகளால் ஆனது. அந்த மக்களின் பார்வைக்குள் பாரவையாளன் நுழைவது முதல் பகுதி. இரண்டாம் பகுதி, ஏலக்காய் மூட்டைகளைச் சுமந்து செல்லும் உழைக்கும் மக்களின் உடல் உழைப்பின் மீதான அவர்தம் பெருமிதத்தை வெளியிடுவது. சுமை காவிச் செல்ல கழுதையைப் பயன்படுத்துபவருக்கும் உடலைப் பயன்படுத்துபவருக்குமான உரையாடல் ஒரு உன்னதம். அடர்மழை பெய்யும் ஒரு நாளில் உயிரைப் பணயம் வைத்து உழைப்பின் பெருமிதத்தைச் சுமந்தபடி மலையின் உச்சியை அடையும் சாகசத்தை முதலாளிக்கான விசுவாசத்துடன் சொல்லும் அந்த உணர்ச்சிவசமான முதியவரின் கர்வமும் கள்ளமின்மையும் இன்னொரு உன்னதம்.

எனது அனுபவத்தில் எந்தவொரு உலக சினிமாவிலும் உடல் உழைப்பின் பெருமிதத்தை இவ்வாறு வணங்குதற் பண்புடன் வெளிப்படுத்திய காட்சிகள் இல்லை.

இதற்குப்பின் வருகிறது மலைவாழ் தொழிலாளர்களின் பாடுகளும் நெருக்கடிகளும் சிக்கல்களும் துரோகங்களும் சாவுகளும் பழிவாங்குதலும் உலகவயமாதலின் சூறாவளியில் தோல்வியடையும் அந்த மக்களின் வாழ்வும். நிலம் பதிவு செய்யப்படுவது, இயற்கைச் சீற்றம், விவசாயம் பொய்ப்பித்தல், திருமணம், குழந்தைப் பேறு, மூட்டை தூக்கும் தொழிலாளியின் அநாதரவான மரணம், மனம் பேதலித்த பெண்ணின் காணாமல் போதல், ராகிக் களி சாப்பிடும் தமிழ்த் தொழிலாளி-அரிசி சாப்பிடும் மலையாளி முரண், தொழிலாளிக்குத் துரோகம் செய்யும் அதிகாரபூர்வக் கட்சி ஊழியர்-உள்ளுர் தொழிற்சங்க ஊழியர் முரண், நிலம் விட்டு, இருந்த வீடு விட்டுத் துரத்தப்படும் அவலம் எனக் காலம் நகர்கிறது.

வர்க்கத் துரோகி, நிலக் கிழார் அழித்தொழிப்பு, சிறைவாசம், ஐந்து ஆண்டுகளின் பின் ரங்கு விடுதலை ஆகும்போது அக்ரோ பிசினஸ் செய்த லோகு, பினான்ஸ் அதிபராகி லேன்ட் டெவலப்மென்ட் பிரமுகராகிவிடும் வளர்ச்சி பெற்றுவிடுகிறார். கால்தேய மலைவாழ் கூலித் தொழிலாளர் நடந்த வறண்ட நடைபாதைகள் இப்போது விதவிதமான மோஸ்தர் கார்கள் வழுக்கிச் செல்லும் லயத்துடன் வளைந்த தார்ப்பாதைகள் ஆகிவிடுகின்றன. பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இயந்திரக் காற்றாழைகளின் அடர்த்தியில் யூனிபார்ம் காவலாளி ரங்கசாமி எனும் ரங்கு இப்போது காணாமலாகிவிடுகிறான்.

எந்த உரிமையும் அற்றுக் கனவுகள் சிதைந்த நிலையில் மலைவாழ் மக்கள் காணாமல் போதால்தான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் சொல்ல விளைந்த அரசியல். உலகவயமாதல் மற்றும் கார்ப்பரேட்டிசத்தின் வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்குப் பேரழிவு என்பதுதான் படம் சொல்லும் அரசியல்.

3.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ரங்கசாமி எனும் ரங்குவின் நிலம் கொண்டிருத்தல் எனும் கனவையும், அந்தக் கனவின் சிதைவையும், உலகவயமாதலின் முன், கார்ப்பரேட் கலாச்சார வாழ்வின் முன் அவன் உரிமையற்று, சுவடற்றுக் காணாமல் போதலையும் சொல்லும் படம். இது அவன் வாழ்வு. ஆதலால் அவன் குடும்பத்தின், தாயின், மனைவியின், சின்னஞ்சிறு புதல்வனின் வாழ்வு. ஆதலால் இது அவன் பகுதியாக இருக்கிற மலைவாழ் மக்களின் வாழ்வு. மலைவாழ் வெகு மக்களின் வாழ்வு.

இவனது வாழ்வில் அரசியலும் அணிதிரலலும் வந்து போகிறது. இந்த மக்கள் வாசித்து, பிரக்ஞைபூர்வமாக அரசியலைக் கற்றவர்கள் இல்லை. கூலி உழைப்பு, அது கோரும் உரிமை, அது துரோகத்தினால் நிர்மூலம் செய்யப்படும்போது, அரசுகளால் அதிகார வர்க்கத்தினால் காவல்துறையால் ஒடுக்கப்படும்போது, உலகின் விளிம்புக்குத் தள்ளப்படும்போது அவர்கள் உடனடி எதிரிகள், காரணகர்த்தர்கள் எனக் கருதுபவர்களை, விளைவுகள் பற்றிக் கவலைப்படாது அழித்தொழிப்பில் இறங்குகிறார்கள்.

இங்கு எந்தக் கட்சி என்பது அவர்களது பிரச்சினையுமில்லை. பொருட்டுமில்லை.

கட்சியின் முழு நேர ஊழியர்(அவர் உள்ளுர் தொழிற்சங்க ஊழியர் இல்லை) கொல்லப்படுவதும், நிலக்கிழார் கொல்லப்படுவதும் ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையில்லை. அப்படிப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கான, சித்தரிப்பதற்கான எந்த முகாந்தரமும் படத்தின் காட்சி அமைப்பிலோ பாத்திர வளர்ச்சியிலோ இ;ல்லை.
நிஜத்தில் இப்பிரச்சினை கட்சி மைய அரசியலையும் மீறிய கருத்தியல் பிரச்சினை. அதிகாரபூர்வக் கட்சி ஊழியர் ஒருவரது கொள்கை அரசியல் நிலைபாட்டுக்கும், களத்தில் கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பங்குபெற்று அன்றாடம் அவர்களைத் திரட்டி நிலக்கிழார்களுக்கு எதிராக உரிமை கோரிப் போராடும் ஒரு உள்ளுர் தொழிற்சங்க ஊழியரின் வாழ்ந்து பெற்ற உணர்வுக்கும் இடையிலான முரண்.
இந்த முரண் தெளிவாக வசனங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையை, ஒரு கட்சி குறித்த தவறான புரிதல், கட்சியின் கவனத்திற்கு இதைக் கொணர்ந்திருந்தால் தவறு செய்தவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருக்கும், ஆகவே காம்ரேட் சாக்கோ செய்தது தவறு என இதனை விவாதிப்பதும் சித்தரிப்பதும் ஒரு கட்சி சார்ந்த சித்தாந்தப் பார்வையாக இருக்குமேயல்லாது, படம் பேசும் கருத்தியல் பற்றியதாக இருக்காது.

பிரச்சினையின் மூன்று பாத்திர அமைப்புகளை எடுத்துக் கொள்வோம்.

காம்ரேட் சாக்கோ. இவர் உள்ளுர் தொழிற்சங்க ஊழியர். மொழியால் மலையாளி. தமிழ் மலையாள மொழி பேதமற்ற, வர்க்கபோதம் பெற்ற, கள அனுபவமும் உணர்வும் பெற்றவர். சசி அதிகாரபூர்வக் கட்சியின் ஊழியர். கட்சியின் சார்பாக, அதன் கொள்கைகளின் சார்பாகப் பேசக் கூடியவர். மலையாளி. ரவி ஏலக்காய் தோட்டத்தின் முதலாளி. அண்டை தோட்டத்தையும் விலைக்கு வாங்கியவர். தமிழ்த் தொழிலாளிகளின் மீது வெறுப்புக் கொண்டவர். ராகி சாப்பிடும் தமிழன், அரசி சாப்பிடும் மலையாளி எனத் தமிழர்களை இழிவுபடுத்துபவன்.

சசியும் ரவியும் மொழியாலும் இணைபவர்கள். ஐந்து ஏக்கர் உச்சவரம்பை அழித்து நிலத்தைக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரித்துத் தருவதன் மூலம் தமிழ்த் தொழிலாளர்களை நிர்க்கதியாக்குவதில் ரவி; வெற்றி பெறுகிறான். இவனது நோக்கமெல்லாம் தமிழ்த் தொழிலாளரை நிர்க்கதியாக்கி மகிழ்வதுதான். இதற்குக் கட்சியின் அதிகாரபூர்வ ஊழியரான சசி இணைந்து செயல்படுகிறார்.

ரவிக்கு சசியின் உதவி எதற்குத் தேவைப்பட்டிருக்கிறது? அண்டை எஸ்டேட்டை வாங்கவோ, 5 ஏக்கரைப் பிரிக்கவோ சசியின் உதவி தேவையில்லை. அதனைச் சட்டமும் காவல்துறையும் பார்த்துக் கொள்கிறது. ரவியின் இலக்கான தமிழ்த் தொழிலாளரை நிர்க்கதியாக்குவதில்தான் சசி ரவிக்கு உதவிசெய்கிறார்.

இரண்டு காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். காம்ரேட் சாக்கோ ஊத்து ராசாவுடன் முதலாளி ரவியுடன் முரண்படம் இடத்தில் தமிழ்த் தொழிலாளர் உரிமையை காம்ரேட் சாக்கோ முன்னெடுக்கக் கூடாது என்பதுதான் பிரச்சினை. அப்போது இந்தத் தகராறில் தலையிடும் சசி தான் கட்சியின் சார்பாகப் பேசுகிறேன் என்கிறார். ரவியை சமாதானம் செய்கிறார். ‘அலுவலகம் போங்கள் அங்கு பேசிக்கொள்வோம்’ என்று காம்ரேட் சாக்கோவிடம் சொல்கிறார்.

இன்னொரு காட்சி தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெறும் சசி காம்ரேட் சாக்கோ இடையிலான உரையாடல். ‘தேசியமட்டத்தில் போராடியவன் நான், கட்சியின் நிலைபாடுகளை நீ எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாய்’ என சாக்கோவிடம் சொல்லிவிட்டு, ‘எனக்குக் கம்யூனிசம் கற்பிக்க வேண்டாம்’ என்கிறார் சசி. அதிகாரபூர்வக் கட்சி மேல்மட்ட ஊழியருக்கும், களத்தில் நடைமுறையில் இயங்கும் ஒரு உள்ளுர் தொழிற்சங்க ஊழியருக்கும் இடையிலான மேல்-கீழ், கொள்கை-நடைமுறை, அதிகார உறவுகள் இங்கு தெளிவாக நிலைநாட்டப்படுகிறது.

சசியைக் கொல்வது என்னும் நோக்கம் மலைவாழ் கூலித் தொழிலாளிக்கோ காம்ரேட் சாக்கோவுக்கோ இல்லை. அழித்தொழிப்புக் காட்சிக்கு முன்னான காட்சியில் மலைப்பாதையில் வேட்டியை மடித்துக் கட்டியபடி வேகமாக நடந்து செல்லும் காம்ரேட் சாக்கோவை ஜீப்பில் வரும் முதலாளி ரவி இடைமறிக்கிறான். சொன்னபடி தான் தொழிலாளிகளைப் பழி வாங்கிவிட்டதாகச் சொல்கிறான். 5 ஏக்கரை உறவுகளுக்குள் பிரித்து இதனைச் சாதித்துவிட்டதாகச் சொல்லிவிட்டு, சசியையும் விலைக்கு வாங்கிவிட்டதாகச் சொல்லிவிட்டுப் போகிறான்.

அடுத்த காட்சியில்தான் இடம்பெயர இருக்கும் தொழிலாளிகளைச் சந்திக்கும் காம்ரேட் சாக்கோ ரங்கசாமி உள்ளிட்டவர்களை ‘அறிவாள் எடுத்துக் கொண்டு வாருங்கள்’ என அழைத்துச் செல்கிறார். எங்கு நோக்கிச் செல்கிறார்? சசி இருக்கச் சாத்தியமான தொழிற்சங்க அலுவலகம் நோக்கியா செல்கிறார்? சசியைப் பழிவாங்குவது அவர் நோக்கமில்லை. அவர் வெஞ்சினம் அத்தனையும் முதலாளி ரவி மீதுதான். பழிவாங்கும் எண்ணம் கொண்டவன், திட்டமிட்டவன், தமிழ்த் தொழிலாளரைப் பழிதீர்த்தவன், அதனைச் சதா சொல்லிச் சொல்லிக் போபமூட்டியவன் முதலாளி ரவிதான்.

அவனை நோக்கி, அவனது இருப்பிடத்தை நோக்கித்தான் காம்ரேட் சாக்கோவும் மலைவாழ் உழைப்பாளரும் இருளில் சென்று அடைகிறார்கள்.

சசி அங்கு யதேச்சையாக இருக்கிறான். சசியின் துரோகத்தை முன்பே அறிந்ததால் தன்னெழுச்சியாக ‘இதுதான் நீ படித்த கம்யூனிசமா?’ என்று கேட்டபடி காம்ரேட் சாக்கோ, சாக்கோ மட்டும், சசியை அரிவாளால் வெட்டுகிறார். தொழிலாளர்கள் அனைவரும் முதலாளி ரவியை மட்டுமே அழித்தொழிக்கிறார்கள்.

இங்கு முன்கூட்டித் திட்டமிடுதல் என்பதோ, சசி மேல் கட்சியிடம் முறையீடு செய்திருக்கலாம் என்கிற பிரச்சினைக்கோ இடமேயில்லை. இது முதலாளியின் மீதான, அவனது திட்டமிட்ட பழிவாங்குதலின் மீதான தொழிலாளரதும் தொழிலாளருக்காக வர்க்க போதத்துடன் உழைத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சங்க ஊழியரதும் தன்னெழுச்சியான நடவடிக்கையாகவே நடந்துமுடிகிறது.

அதிகாரபூர்வக் கட்சி ஊழியரது கொள்கையைப் பிரதிநிதித்துவம் செய்பவர் சசி என்பது குறித்த பிரச்சினைக்கு வருவோம். இந்தச் சிக்கல், அதிகாரபூர்வப் பிரதிநிதிக்கும் களத்தில் தொழிலாளரோடு செயல்படுபவருக்குமான இந்தப் பதட்டம் அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஒரு சிக்கலாகவே இருக்கிறது.

மிருணாள் சென்னின் ‘பதாதிக்’ (நக்சல் அரசியல்), அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘முகாமுகம்’ (சிபிஐஎம் அரசியல்) என யதார்த்தவாத சினிமா இயக்குனர்களாலும், குறைந்த பட்சம் 25 இற்கும் மேற்பட்ட மலையாள ஜனரஞ்ஜக மலையாளத் திரைப்படங்களிலும் பேசப்பட்ட பிரச்சினைதான் இது.
இது கட்சி நடவடிக்கை எடுத்துத் தீர்க்கிற பிரச்சினை மட்டும் இல்லை. கட்சியில் நிலவும் கொள்கைப் பிரச்சினையும் கூடத்தான். இது சூழலியல் மற்றும் வளர்ச்சி என்பது தொடர்பான கட்சியின் கொள்கையினாடு தொடர்புபட்டது.

நந்திகிராமில், கூடங்குளத்தில் கட்சி எடுத்த நிலைபாடு வெறும் ஊழியர் தவறு சார்ந்த பிரச்சினை இல்லை. இவை கட்சியின் கொள்கை நிலைபாடு சார்ந்த பிரச்சினை. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் சசி காம்ரேட் சாக்கோவைப் பார்த்து, வளர்ச்சி, பாதை போடுதல் போன்றவற்றில் ‘கட்சியின் கொள்கையில் நீங்கள் குறை காண்கிறீர்கள்’ என்றுதான் குற்றம் சுமத்துகிறார்.

கட்சியின் கொள்கை தொடர்பான ஒரு பாரிய பிரச்சினையை ஊழியர் தவறு எனும் வகைமைக்குள் கொணர்தல் என்பது படம் எழுப்பும் ஆதாரமான பிரச்சினையை எதிர்கொள்ளும் முறையியலாக இருக்க முடியாது.

4

திரைப்பட வடிவம் என்பது பல்வேறு கலைகளின் சங்கமம். காட்சிரூபம், உரையாடல், இயற்கை ஒலிகள், நடனம், இசை, ஓவியம், சிற்பம் என தனித்தனிப் பண்புகள் கொண்ட கலைவடிவங்கள் திரைப்பட வடிவத்தில் ஒன்றுகின்றன. ஒரு புதிய வடிவம் தோன்றுகிறது. எந்தக் கலைவடிவத்தை விடவும் வெகுமக்களைச் சென்றடையும், அவர்களை மகிழ்வூட்டும், துயரப்படுத்தும், கிளர்ச்சியூட்டும் வடிவமாகத் திரைப்பட வடிவம் இருக்கிறது. இந்தத் தொடர்பாடல் ஆற்றலைக் கொண்டிருப்பதால் கலைகளிலேயே மகத்தான வடிவம் திரைப்படம்தான் என இதனால்தான் லெனின் சொல்கிறார்.

உலகத் திரைப்படக் கலையில் உச்சத்தை எட்டிய மகத்தான கலைஞர்கள எனச் சிலரை நாம் சொல்ல முடியும். காட்சிரூப சினிமாவில் கிரேக்கரான தியோ ஆஞ்சல பெலோஸ் உச்சத்தை எட்டியவர். மாபெரும் மக்கள் போராட்டங்களை, உலக நிகழ்வுகளை அகன்ற காட்சிகளில் பதிவு செய்தவர் அவர். வெகுமக்கள் திரளை ஆராதித்தவர் அவர்.
ஒடுக்கப்பட்ட மனிதரின் வாழ்வை, உலகின் விடுதலைப் போராட்டங்களை, தொழிலாளி வர்க்க உணர்வின் வீச்சை தனது காத்திரமான திரைக்கதைகளால் காவியமாக்கியவர் இங்கிலாந்தின் திரைப்பட இயக்குனரான கென்லோச். இயல்பு. யதார்த்தம், புனைவு என்னும் வெளிகள் மறைந்து போகச் செய்து, மனிதரின் அக உணர்வுகளை சாகா வரம்பெற்ற சிருஷ்டிகளாக நிலைபெறச் செய்தவர் இந்திய இயக்குனரான சத்யஜித்ரே.

காட்சிரூபம், கதைக்கரு, இயல்பும் யதார்த்தமும் புனைவும் கரையும் நிலைதான் ஒரு திரைக் கலைப் படைப்பு அடைய வேண்டிய உச்சம்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவிலும் அசலானதொரு முன்னோடி அழகியல்-அரசியல் நிகழ்வு. சினிமாவைக் கட்சிரூப வடிவமாக உணர்ந்து, உரையாடலின் அரசியல் உள்ளடக்கம் உணர்ந்து, படம் பேசும் மாந்தரது வாழ்வின் ஜீவனை உணர்ந்து, அம்மாந்தரின் துயர்கள், கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் இசைக் கோர்வைகளை உணர்ந்து, இயற்கைக்கும் மனிதனது நடத்தைக்கும் ஆன ஜீவாதாரமான உறவை உணர்ந்து, உலகவயமாதலால் நேரும் இவற்றினது அந்நியமாதலை உணர்ந்து, இவை அத்தனையையும் இயைந்து வரும்படி உருவாகியிருக்கும் ஒரு தனித்த நிகழ்வு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம்.

ராம் கோபால் வர்மாவின் ‘நிசப்த்’ படம் நாவலாசிரியர் நபக்கோவின் ‘லோலிடா’நாவலின் பிரதி. அது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ப் பிரதேசமான மூணாறில் எடுத்த படம். லெனின் பாரதியும் அங்குதான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யை எடுத்திருக்கிறார். இரண்டு படத்திலும் நில அமைவு எப்பிடி மாறுகிறது என்று பாருங்கள். தக்காளி வியாபாரம் செய்து, அக்ரோ பிசினஸ் செய்ய முன்னேறி, பினான்சியர் ஆகி, ரியல் எஸ்டேட் ஓனர் ஆகிறவர்களின் உலகப் பார்வைதான் ‘நிசப்த்’ திரைப்படம். பூந்தோட்டங்கள் நிறைந்த, அழகான கட்டிடங்கள், உல்லாசப் பயணிகளின் சிருங்கார நிலம் ‘நிசப்த்’ காட்டும் நிலம். லெனின் பாரதி படத்தில் இருவகை நிலங்களை அல்ல, நில மாற்றத்தைக் காண்பிக்கிறார்.

காலடித் தடங்களால் அமைந்த மேலும் கீழுமான குண்டும் குழியுமான பாறையும் சரிவுமான புழுதிப் பாதைகள், காலமாற்றத்தில் ரிசார்ட்டுகள் நோக்கி மோஸ்தர் வாகனங்கள் விரையும் வளைந்த தார்ப்பாதைகள் ஆகிவிடுகிறது. வறண்ட பற்றைகள் ஒரு புறமும் தோட்டங்கள் நிறைந்த பயணியர் விடுதிகள் மறுபுறமும் என்றாகி விடுகிறது. படத்தின் அரசியல் நிலத்தின் மாற்றமாக காட்சியில் வந்துவிடுகிறது.

ஒரு மக்கள் கூட்டத்தின் துயர் பற்றிய ஒரு படத்தை உருவாக்குவதற்கான சொல்நெறி இப்படத்தில் இருக்கிறது. தனிமனிதர்களை முக்கியத்துவப் படுத்தும் அருகாமைக் காட்சி ஒன்றைக் கூட இப்படத்தில் நீங்கள் பார்க்கமுடியாது. மத்திமத் திரைக்காட்சிகள் மற்றும் அகன்ற திரைக் காட்சிகளால் ஆனது படம். மலைவாழ் மக்களை அவர்தம் வாழ்வுச் சூழலில் இருந்து வெட்டி எடுத்துவிடாமல், அதற்குள்ளேயே பார்வையாளனையும் இந்தச் சொல்முறை இறுதிவரைக் கட்டி வைத்திருக்கிறது.

அருகாமைக் காட்சி, மத்திமக் காட்சி, அகன்ற காட்சி எனும் திரைநெறி வடிவங்களுக்கு ஒரு அரசியல் இருக்கிறது. அருகாமைக் காட்சி மனிதரின் அக உலகை அகப்படுத்தும். மத்திமக்காட்சி மனிதரின் அருகில் செல்ல யத்தனிககும். அகன்ற காட்சிகள் மக்கள் திரளின் வாழ்வைச் சொல்லும.; மக்களே வரலாற்றின் மகத்தான சக்தி என்பதை உணர்த்தும் வடிவம் இது.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் ஆரம்ப 20 நிமிடக் காட்சிகள் போல எனது பார்வையனுபவத்தில் நான் பார்த்ததேயில்லை. இருளோடு பேசத் தெரிந்த, மனிதர் மீது பேரன்பு கொண்ட, உள்ளத்தில் ஒளிகொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே முடிகிற காரியம் அது. இதற்கு, வாழ்வினுள் பிரவேசிப்பது என்று பெயர். வாழ்க்கையை, வாழும் சூழலை, இயற்கையின் கருணையை, அன்றாட மனிதரின் இயல்பை, மனிதர் மீதான பேரன்பை இது போல் சொன்ன உலக சினிமாக்கள் மிக மிகக் குறைவு. இது ஓரு பயணம். பிற மனிதர் குறித்த தரிசனம்.

ராசி தங்கதுரையும் லெனின் பாரதியும் வசனத்தை மிகுந்த சமகால உணர்வுடனும் மேதைமையுடனும் எழுதியிருக்கிறார்கள். வசனம் என்பது இங்கு இரு தளங்களில் வெளிப்படுகிறது. பாத்திரங்களின் உளநிலையை வெளிப்படுத்தும் உரையாடல் ஒருதளம் எனில், பிறிதொரு தளமாக மனிதர்களாகப் பாத்திரங்கள் வாழும் புறவுலகில் இடம்பெறும் இணை உரையாடல்கள் ஆகிறது. ரங்கசாமி தேநீர் வாங்கப் போகும் கடையில் அங்கு உள்ளோர்க்கும் கடை முதலாளிக்கும் நடக்கும் உரையாடல் உதாரணம். ஒரு காட்சியை மிகுந்த உயிருடன் வைத்திருப்பது இத்தகைய உடன் விளைவான உரையாடல்கள்தான். பாத்திர உரையாடல்கள் எனும்போது யானை மற்றும் புதிய மலை வழித்தடம் குறித்த தொழிற்சங்க உரையாடல்களை நாம் குறிப்பிடலாம்.

இளையராஜாவின் இசை மேதமை வெளிப்பட்ட சில காட்சிகள் படத்தில்; உண்டு. போலவே, காட்சிகளின் தீவிரத்தை அவரது இசை தகர்த்த காட்சிகளும் படத்தில் உண்டு. படத்தின் துவக்க 15 நிமிடங்கிளிலான இருள் காடசி முடிந்து, மலைகளில் வெளிச்சம் புலர்கிறபோது வெளிப்படும்; இசையின் மென்மை, முதிய தொழிலாளி தனது உழைப்பின் பெருமிதத்தைச் சொல்லிச் செல்கையில் மலைக் காட்சி அகன்று விரிகையில் தொழிலாளியின் குரலினிடையில் ஒலிக்கும் இருமலின் எதிரொலி போன்றவை பித்தேற்றும் இசைத்துண்டுகள்.

மூன்று காட்சிகளில் இசை படத்திற்கு இடையூறாக இருப்பதை உணரமுடிந்தது. புதியவகை யூரியாவை உர வியாபாரி லோகு ரங்குவின் தலையில் கட்டும் காட்சி. அந்தக் காட்சிக்கு இசை இல்லாமல் இருக்க வேண்டும். எதுக்கு முகாரி ராகம் போல அங்கு இசை? லோகு பேசும் வசனங்கள் தான் அங்கு அத்தனை முக்கியம். அத்தனைப் பாசாங்கும் அதில்; இருக்கிறது. போலவே, ரங்குவின் அப்பாவித்தனமான தீனமான குரல். அந்தக் காட்சியின் தீவிரத்தை ராஜாவின் இசை குலைத்துவிடுகிறது.

முதியவர் இரத்தம் கக்கும் காட்சியில் பலரது குரலும் முதியவரின் உடல்மொழியும் அந்தக் காட்சிக்கான பதட்டத்தைக் கொடுத்துவிடுகிறது. இசை அங்கு மேலதிக இரைச்சலாக ஆகிவிடுகிறது. உணர்ச்சிகள், வசனங்கள், பதட்டங்கள், துல்லியமாக வெளிப்படும் காட்சிகளுக்கு இசையின் அவசியம் இல்லை.

5

நூற்றாண்டுத் தமிழ் சினிமாவின் மீது கவிந்திருந்த சாபம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மூலம் அகன்றது. உன்னத சினிமா என்பது ஒருவர் துரத்தித் திரிகிற கானல்நீரோ மாயமானோ அல்ல. அது ஓரு யதார்த்தம். ஒரு ஜீவநதியின் அமைதி போல அது ஒரு யதார்த்தம்.

தமிழ்த் திரையில் இதனைச் சாத்தியமாக்கிய ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சேதுபதி, படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர், இசையமைப்பாளர் இளையராஜா, வசனகர்த்தா ராசி தங்கதுரை போன்றவர்களுடன் புதிய தமிழ் சினிமா வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்.

வங்க சினிமாவுக்கு ஒரு ‘பதாதிக்’, மலையாள சினிமாவுக்கு ஒரு ‘அம்ம அறியான்’, தெலுங்கு சினிமாவுக்கு ஒரு ‘மா பூமி’, இந்தோ-ஆங்கில சினிமாவுக்கு ஒரு ‘பாபா சாகேப் அம்பேத்கர்’, கன்னட சினிமாவுக்கு ஒரு ‘தாசி’, தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இந்திய இடதுசாரி சினிமாவின் வரைபடம் இதுதான். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் வழி நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு உன்னதம் நிகழ்ந்தே விட்டது.

தமிழின் முதன் முதல் பிரக்ஞைபூர்வமான அரசியல் சினிமா ‘மேற்குத் தொடர்ச்சி மலை’தான்.

*

thanks to ‘Padachurul Merku Thodarchi Malai Special Issue’/  October 2018

 

Comments are closed.